தமிழர்களை மதிக்காதவர்களுக்குத் தேர்தலில் அடி கிடைக்கும்

 

வெளியுறவுக் கொள்கையில் இலங்கைக்கு ஒரு நீதி, அமெரிக்காவுக்கு ஒரு நீதியா என்று பாமக நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : –

  ”அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கேப்ரகடே தளையிடப்பட்டதற்காக அந்நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நடவடிக்கைக்கு  எதிரடியாக, இந்தியாவில் அமெரிக்கத் தூதரகத்துக்கும், தூதரகப் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் நயப்பு(சலுகை)களையும் மத்திய அரசு அதிரடியாக நீக்கியிருக்கிறது.

 Ramadoss01

  வெளிநாட்டில் இந்தியத் தூதர் ஒருவர் கைது செய்யப்பட்டதும், அவரது தகுதிக்குக் குறைவான முறையில் நடத்தப்பட்டதும் இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட இழுக்கு என்ற முறையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. இந்தியாவின் இறையாண்மைக்கு எங்கிருந்து, எப்போது அறைகூவல் விடப்பட்டாலும் அதற்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பெண் என்றும் பாராமல் இந்தியத் தூதரை அமெரிக்கக் காவல்துறையினர் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றதற்குத் தலைமையாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அமெரிக்காவின் நடவடிக்கையை கடுமையாகக் குறை கூறியுள்ளனர்.  வெளியுறவு அமைச்சர் சல்மான் குருசித் ஒருபடி மேலே போய், “தேவயானியை மீட்டு வரும்வரை ஓயமாட்டேன்” என மாநிலங்கவையில் சூளுரைத்துள்ளார். அமெரிக்காவில் இந்திய அமைச்சர்களுக்குப் பலமுறை  மதிப்புக்கேடு உண்டாக்கப்பட்ட போதெல்லாம் அமைதியாக இருந்த மத்திய அரசு, இப்போதாவது இறையாண்மையைக் காப்பதற்காக அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

அமெரிக்காவில் இந்தியத் துணைத் தூதருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மாநிலங்களவையில் வாதுரைபுரிய இசைவளித்த மத்திய அரசு, இலங்கைக் கடற்படையினரால் இந்தியத் தமிழர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதி குறித்து பேச இசைவு மறுத்திருக்கிறது. தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் சிங்களக் கடற்படையினருக்கு, தமிழகத்தின் எதிர்ப்பை மீறி இந்தியாவில் பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறித்து மக்களவையில் பேசவேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரசு அல்லாத உறுப்பினர்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்களின்  வேண்டுகையை ஏற்க மக்களவைத் தலைவர் மறுத்திருக்கிறார்.  இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்றும், அந்நாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்து நாடாளுமன்றத்தில்  உரையாடுவது இருதரப்பு உறவிற்கு ஊறு நேர்விக்கும் என்பதால் அது பற்றிய வாதாடலுக்கு இசைவு அளிக்கக்கூடாது என்றும் மக்களவைச் செயலகத்திற்குப் பாதுகாப்பு அமைச்சகம் மடல் எழுதியிருக்கிறது. அதன்பேரில்தான்  சிங்களப்படையினருக்கு பயிற்சி தருவது குறித்து உரையாட மறுக்கப்பட்டுள்ளது.

  இதற்கு முன் கச்சத்தீவு பகுதியில் சிங்களப்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது குறித்தும், தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது குறித்தும் மக்களவையில்  வாதிட வேண்டும் என்று கடந்த ஆகசுட்டு மாதம் தமிழக உறுப்பினர்கள்  வேண்டினர். அப்போதும், நட்பு நாடான இலங்கை குறித்துவாதிடக் கூடாது என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குருசித்து கூறியதால் இசைவு மறுக்கப்பட்டது. அதேபோல் எல்லையில் பாகிசுதான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மத்திய அரசு, இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை  மறுத்துவிட்டது. வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் அவமதிக்கப்பட்டதற்காக அமெரிக்காவின் உறவையே துண்டித்துக் கொள்ள துணிந்த இந்திய அரசு, ஓர் இனத்தையே அழித்த இலங்கை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசக்கூட விவாதம் நடத்தக்கூட மறுப்பது கண்டிக்கத்தக்கது.

  அமெரிக்காவையும், பாகிசுதானையும் எச்சரிக்கத் துணிந்த இந்தியா, இலங்கையிடம் மட்டும் பணிந்து போவது ஏன்? பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்ற  மதியாமைதான் இதற்குக் காரணமா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். இலங்கைச் சிக்கலில் இனியும் இரட்டை நிலையை மேற்கொள்ளாமல், அமெரிக்காவிடம் காட்டிய அதே அணுகுமுறையை, தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கையிடமும் இந்தியா காட்ட வேண்டும். இல்லாவிட்டால், இதற்குக் காரணமானவர்களுக்குத் தமிழக மக்கள் சரியான நேரத்தில், சரியான அடிகொடுப்பார்கள்.”