உண்ணாநோன்பைக் கைவிட்ட உதயகலா!
தனிமைச் சிறையில் இருந்து விடுவிப்பு!
ஈழத் தமிழப் பெண் உதயகலா உண்ணாநிலையைக் கைவிட்டார்!
தனிமைச் சிறையில் இருந்து தன்னைக் காவல்துறையினர் விடுவித்ததை அடுத்து, ஈழத் தமிழ்ப் பெண் உதயகலா உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.
இலங்கை வவுனியா பகுதியிலிருந்து தயாபரராசு என்பவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தன் குடும்பத்தினருடன் ஏதிலியராக தனுசுக்கோடிக்கு வந்தார். தயாபரராசு, அவர் மனைவி உதயகலா, மூன்று குழந்தைகள் ஆகியோரிடம் உசாவிய (விசாரணை நடத்திய) காவல்துறையினர், தயாபரராசு மீது கடவுச்சீட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தயாபரராசு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உதயகலா, மண்டபம் முகாமில் உள்ள தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தண்டனை முடிந்த தயாபரராசு திருச்சியில் உள்ள ஏதிலியர் முகாமில் தங்கியுள்ளார். ஆனால், உதயகலா தொடர்ந்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதனால், தனிமைச் சிறையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், தன் குழந்தைகள் – கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உதயகலா கடந்த இரண்டு நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்தத் தகவல் அறிந்த முகாம் அலுவலர்களும் காவல்துறையினரும் உதயகலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உதயகலாவோ, தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால், மண்டபம் அகதிகள் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு, தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்த உதயகலாவைக் காவல்துறையினர் விடுவித்தனர். மேலும், விடுவிக்கப்பட்ட உதயகலாவுக்கு, மண்டபம் முகாமில் மறுவாழ்வுத் துறையினர் தனி வீடு ஒதுக்கீடு செய்துள்ளனர். இதையடுத்து உதயகலா தன் உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார். இதற்கிடையே, தன் கணவர் தயாபரராசை அவர் சென்று பார்க்க உதவி ஆட்சியாளர் ஒப்புதலளித்துள்ளபொழுதிலும் ‘கியூ’ பிரிவுக் காவல்துறையினர் அதற்கு இணங்கவில்லை என்பது வருந்தத்தக்கது.
நன்றி :விகடன்
Leave a Reply