இலங்கைத்தூதரகம், மீனவர்கள் கைது : fishermentarrested

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட

ஒன்பது மாவட்ட மீனவர்கள் கைது!

  தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதைக் கண்டித்தும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், அமைதியாக மீன் பிடிக்க உறுதி அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், காரைக்கால், சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை பிப்ரவரி 29, 2016 அன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

  அனைத்திந்திய மீனவர் சங்கக் கூட்டமைப்புச் சார்பில் நடந்த இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பாரதி தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ம.தி.மு.க துணைச் செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் சவாகிருல்லா, காங்கிரசு இதயத்துல்லா, த.மா.கா மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  போராட்டத்தையொட்டித் தூதரகம் முன்பு இரும்புத் தடுப்புக் கம்பிகள் போடப்பட்டிருந்தன. காவல்துறையினரும் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்தனர். மீனவர்கள் தடுப்புக் கம்பியைத் தள்ளிக் கொண்டு தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால் மீனவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கு பதற்றமும் பரபரப்பும் காணப்பட்டன. போராட்டத்தில் திடீரெனப் பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொள்ள முயன்றார்.  அவரை உடனே காவல்துறையினர் தடுத்துப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

  முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்து அருகில் உள்ள குமுகாய (சமுதாய) நலக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 

 நன்றி : நக்கீரன்

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan