(தோழர் தியாகு எழுதுகிறார் 178 : காவல் சித்திரவதை இல்லாத தமிழ்நாடு நோக்கி தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 179

இனிய அன்பர்களே!

“முள்ளிவாய்க்காலின் முழுப்பொருள்” என்ற தலைப்பில் தாழி (201) மடலில் நான் எழுதியிருந்ததற்கு ஐயா நக்கீரன் அவர்கள் செய்திருந்த கருத்துப் பதிவுகளில் தமிழ்நாட்டு எதிலியர் குறித்த கருத்திற்கான மறுமொழியை தாழி (204) மடலில் பதிந்தேன். விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்க இந்தியா சொல்லி வரும் காரணத்தை ஐயா சுட்டிக் காட்டியிருந்தார்கள். அந்தக் காரணம் பொய் என்று எழுதியிருந்தேன். 

நிலப்பறிப்பு பற்றி நான் எழுதியதும் ஐயா நக்கீரன் அவர்களின் மறுமொழியும் – தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவம் அகலக் கால்பரப்பி நின்றது மட்டுமல்ல, அதன் வன்கொடுமைகள் தொடர்ந்தன. படை முகாம்களுக்காக வன்பறிப்பு செய்யப்பட்ட தமிழர் நிலங்கள் மீட்டளிக்கப்படவில்லை.

மொத்தம் 118,253 ஏக்கர் காணியில் 89,263 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுவிட்டது. அண்ணளவாக விடுவிக்கப்படாத காணி 28,999 ஏக்கர்.

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான உடனடி நிலைமைகள் பற்றி நான் எழுதினேன். ஐயா சொல்வது போல் அதற்குப் பிறகான காலத்தில் காணி விடுவிப்பு நடந்திருக்கலாம். நான் அதை மறுக்கத் தேவையில்லை. அவர்களே கூறியுள்ள படி 28,999 ஏக்கர் விடுவிக்கப்படாமலிருப்பதற்கு என்ன நியாயம்? ஒரே ஒரு தமிழரிடமிருந்து இந்த 118 ஆயிரம் ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு அவருக்கு 89 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்டு     29 ஆயிரம் ஏக்கர் மட்டும் விடுவிக்கப்படாமலிருந்தால் ஆறுதலுக்குரிய செய்திதான். ஆனால் இது பல்லாயிரம் உழவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம் என்பதை மனத்தில் கொண்டால் இந்த ஆறுதலை ஏற்க முடியாது. இந்த 29 ஆயிரம் ஏக்கரும் பத்துப் பதினைந்தாயிரம் உழவர்களுக்குச் சொந்தம் எனக் கொண்டால், அவர்களுக்கு இழைக்கப்படும் நீதியை விடுவிக்கப்பட்ட 89 ஆயிரம் நீதியாக மாற்றி விடாது. 100 ஏக்கரை மட்டும் விடுவிக்காமல் இருந்தால் அதுவும் அநீதிதான்! பாதிப்புற்ற உழவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தமிழினத்துக்கே அநீதிதான்! மற்றவர்களுக்குக் கிடைத்து விட்டது மனமயங்க நமக்கு உரிமை இல்லை.

இதை விடவும் முகன்மையான செய்தி: தமிழர் நிலப் பறிப்பு என்பது கடந்த காலச் செய்தி மட்டுமன்று. இன்றும் தொடர்கின்ற ஒன்று. முன்னை விடவும் தீவிரமாகத் தொடர்கின்ற ஒன்று. இது சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தி வரும் கட்டமைப்பியல் இனவழிப்பின் முகன்மைக் கூறு ஆகும்.

படைசார் நோக்கங்களுக்காக மட்டுமல்ல, சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்கங்களுக்காகவும் இந்த நிலப்பறிப்பு நடக்கிறது. இதையும் ஐயா நக்கீரன் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஈழத் தமிழ் மின்னிதழ் ஒன்றுக்காக இப்பொருள் குறித்து எழுதிய கட்டுரையை ஈண்டு பகிர்கிறேன். –

தமிழர் நிலப்பறிப்பும் கட்டமைப்பியல் இனவழிப்பும்

வட தமிழீழத்தின் முல்லைத் தீவு மாவட்டம் குருந்தூர் மலையுச்சியில் நீதிமன்றத் தீர்ப்பையும் தமிழ்மக்களின் எதிர்ப்பையும் மீறிக் கட்டப்படும் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் தொடங்கி விட்டன. சிங்கள இராணுவத்தின் ஏற்பாட்டிலும் பாதுகாப்பிலும் பெளத்த பிக்குகளும் வெலிஓயாவில் வன்குடியேற்றம் செய்யப்பட்ட சிங்களர்களும் இந்த வழிபாடுகளைச் செய்து வருகின்றனர்.

தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வாய்வுப் பணிகள் என்ற பெயரில்தான் குருந்தூர் பௌத்த விகாரைக் கட்டுமானம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இது வெறும் நிலப்பறிப்பு மட்டுமல்ல, சிங்கள பௌத்த மயமாக்கமும் ஆகும் என்பதைக் குருந்தூர் மலையுச்சியில் நின்று கூவிச் சொல்லலாம்.

தொல்லியல் திணைக்களம் புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டில் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு செயல்படுகிறது என்பதை அதிபர் இரணிலே ஏற்றுக் கொண்டுள்ளார். 

அரசுத் தலைவராக இருந்த கோத்தபாய இராசபட்ச கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் ஆய்வுக்கென்று ஒரு குழு அமைத்தார். அந்தக் குழுவில் தமிழர் யாருமில்லை, இராணுவத்தினரும் பிக்குகளும் மட்டுமே இடம்பெற்றனர். அவர்கள், மட்டக்களப்பு குசலனமலை குமரன் கோயில் முன்பு பௌத்தர்களின் வழிபாட்டு இடமாக இருந்தது என நிறுவ முயன்றார்கள். இதுதவிர பௌத்த சமயத் தடங்கள் என்ற பெயரிலும் தொல்லியல் திணைக்களத்தின் சார்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலப்பறிப்புக்கு சிங்கள அரசு சூட்டியுள்ள இன்னொரு பெயர் வனப் பாதுகாப்பு. மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில், இலங்கை வனத்துறையினர் திடீரென எல்லைக் கற்களைக் கொண்டு வந்து நட்டு, இவை எல்லாம் வனப்பகுதிகள் என அறிவிப்பு செய்தனர். இந்த இடங்களை விட்டுத் தமிழர்கள் வெளியேற வேண்டும் என மிரட்டுகின்றனர்கள்.

இராசபட்ச குடும்பத்துக்கு நெருக்கமான குழுமங்கள் கட்டுமானப் பணிகளுக்காக மணல் அள்ளுவதும், நிலப்பறிப்புச் செய்வதும் தொடர்கின்றன. காலங்காலமாக உழுது பயிரிட்டு வந்த நிலங்களிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுகின்றார்கள்.

பெரிய எந்திரங்களைக் கொண்டு மணல் அள்ளுவதால் அருகில் உள்ள தமிழர்களின் விளைநிலங்களில் பயிர்கள் அழிவதைப் பற்றிக் இந்தக் குழுமங்கள் கவலைப்படுவது இல்லை; தமிழர்களின் எதிர்ப்புகளைக் கண்டு கொள்வது இல்லை. மணல் அள்ள விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அவர்கள் மதிப்பதே இல்லை எனக் கிழக்கு மாகாணத்தின் சிங்கள ஆளுநர் அனுராதா எகம்பத்து கவலை தெரிவித்தார்.

கொக்கிளாயில் அரசுக்குச் சொந்தமான கனிமக் குழுமம் இல்மனைட்டு சுரங்கம் அமைக்கும் முயற்சிகளை எதிர்த்து தமிழர்கள் போராடினார்கள். இது நிலப்பறிப்புக்கு எதிரான போராட்டம் மட்டுமன்று, சுற்றுச்சூழல் காப்புக்கான போராட்டமும் ஆகும்

கோத்தபாய அதிபரான பிறகு தீவிரமடைந்த தமிழர் நிலப்பறிப்பு இன்றளவும் பல்வேறு பெயர்களில் தொடர்கிறது. நிலம் மற்றும் பாசன மேலாண்மைக்கான மகாவலி ஆணையம், தமிழர்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் சிங்களக் குடும்பங்களைக் கொண்டு வந்து குடியமர்த்தி இருக்கின்றது. இதை எதிர்த்தே  மயிலத்தமடு பகுதி வாழ் தமிழ் விவசாயிகளின் போராட்டம் மாதக்கணக்கில் நடைபெற்றது.

இப்போதைய அதிபர் இரணில் விக்கிரமசிங்கா தமிழர்களின் அரசியல் தலைவர்களைச் சந்திக்கும் போது புதிய நிலக் கையகப்படுத்தலும் பௌத்த விகாரைக் கட்டுமானமும் இனி நிகழாது என்று வாய்மொழியாக வாக்களித்த போதிலும், எந்த மாற்றமும் இல்லை. அதிபரின் ஆணையை இராணுவமும் பௌத்த பிக்குகளும் மதிப்பதில்லையா? அல்லது இரணில் நாடகமாடுகின்றாரா? எது எப்படியானாலும் தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றார்கள்.

பௌத்தமயத்தோடு இணைந்த இராணுவமயமும் தொடர்கிறது. போர் முடிந்து விட்ட பிறகும் இராணுவ நோக்கங்களுக்கான நிலப்பறிப்பு தொடர்கிறது. சிறிலங்கா கடற்படையின் புதிய பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட இருப்பதாக ஊர்க்காவற்றுறையில் கரம்பன் மேற்குப் பகுதி ஊர்களில் அறிவிப்புத் தரப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கான காணி அளவிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது பொதுமக்களால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது.  மக்களின் இந்தப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினா் துரைராஜா ரவிகரன்.

இத்துணைப் பாரிய பொருளியல் நெருக்கடிக்கிடையில் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் 10.35 விழுக்காடு படைத்துறைச் செலவுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கசேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற அவையிலேயே சிங்கள ஆட்சியாளர்களைப் பார்த்துக் கேட்ட வினா இது: “போர் நடக்காத சூழலில் 10.35 விழுக்காடு செலவு ஏன்?”

அவர் சொல்கிறார்: “எந்த நாடும் சிறிலங்காவைத் தாக்கிடவில்லை. உங்கள் பகை உள்ளுக்குள்ளேதான். உங்கள் நாட்டுக் குடிமக்களையே பகைவர்களாகக் கருதுகின்றீர்கள். ஏன் என்றால், நீங்கள் அவர்தம் உரிமைகளை அறிந்தேற்க விரும்பவில்லை. அவர்களின் உரிமைகளை மறுப்பதற்காக அவர்களைக் கொல்லவும் தயங்க மாட்டீர்கள். உங்கள் பாதுகாப்புக் கொள்கைக்கும் உங்கள் அயலுறவுக் கொள்கைக்கும் அடிப்படையே தமிழர்கள் உரிமை பெறாமல் தடுப்பதுதான்.”

வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை – தையிட்டிப் பகுதியில் பொதுமக்களிடமிருந்து இராணுவம் கைப்பற்றிய நிலங்களில் பாரிய விகாரை அமைக்கப்பட்டதற்கு எதிராகத் தமிழ் மக்கள் கொதித்தெழுந்து போராடி வருகின்றனர். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளது. அவ்வியக்கத்தின் தலைவரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான ஐங்கரநேசன் “இது அரசாங்கத்தின் திட்டமிட்ட நிகழ்நிரலாக முன்னெடுக்கப்படுகின்றது, இது கட்டமைப்பியல் இனவழிப்பே தவிர வேறல்ல” என்று கூறியுள்ளார்.

சிங்கள மக்கள் வாழாத ஒரு பகுதியில் வலிந்து பௌத்த விகாரை அமைப்பது தமிழர்கள் மீதான ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பே ஆகும். இராணுவத்தினர் விரும்பினால் தமது பாசறைக்குள் புத்தர் சிலை வைத்து வழிபடத் தடையில்லை என்றும் தமிழ் மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கசேந்திரன் உள்ளிட்ட தலைவர்களோடு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்தப் பின்னணியில் கசேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது நடந்துள்ள தாக்குதல் முயற்சியைத் தமிழர் தரப்பில் அனைவரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் சிக்கலை எழுப்ப விடாமல் அவரைத் தடுக்கவும் முயற்சி நடந்துள்ளது.

இத்தனைக்கும் நடுவில் இந்திய அரசு வாய்திறக்கவே இல்லை. எப்போதாவது வாய் திறந்தாலும் 13ஆம் திருத்தம் என்ற உதவாக்கரைப் பேச்சுதான்! 13ஆம் திருத்தம் நிலப் பறிப்பையோ சிங்கள பௌத்தமயத்தையோ இராணுவமயத்தையோ தடுக்கப் போவதில்லை என்பது இந்திய வல்லரசுக்கு நன்றாகவே தெரியும்.

ஒருவேளை சிறிலங்காவில் முசுலிம்களுக்கு எதிராகச் சிங்களம் பரப்பி வரும் இசுலாமிய வெறுப்பு நரேந்திர மோதியுடன் ஒரு பொதுவான அலைவரிசை காணக் கூடும். பொறுத்திருந்து பார்ப்போம் என்று சொல்ல முடியவில்லை. பொங்கி எழுந்து போராடுவோம் தமிழர்களே!

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 212