காங். ஆட்சியில் இந்தியா ஏழை நாடாகி விட்டது: சரத்குமார்
நெல்லை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து, சமக தலைவர் நடிகர் சரத்குமார் களக்காடு, மாவடி, டோனாவூர் பகுதியில் திறந்த ஊர்தியில் பரப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
‘‘மத்தியில் காங்கிரசு ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் நாட்டின் முன்னேற்றம் பாதிப்பு அடைந்துள்ளது. பொதுமக்களின் வாழ்க்கைத் தரமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக, காங்கிரசுடன் திமுக கூட்டணியில் இருந்து பதவி நலத்தைத் துய்த்துள்ளனர்.
தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது என்கிறார் தாலின். இந்தியாவில் எரிவளி விலை, எரிநெய்கள் விலை உயர்ந்துள்ளதை 14 ஆண்டுக் காலம் பதவிஇன்பத்தில் திளைத்த அவர்களால் (திமுக) தடுக்க முடியவில்லையா? முதல்வர் செயலலிதா தொலைநோக்குப் பார்வை, தொலை நோக்குச் சிந்தனையுடன் திட்டங்களைத் தீட்டி, தமிழகத்தை முன்னேற்றி வருகிறார்.
காங். ஆட்சியில் இந்தியா ஏழை நாடாக மாறி விட்டது. பா.ச.க, தேமுதிக சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ளனர். தேமுதிக தலைவர் விசயகாந்துக்கு என்ன பேசுகிறோம் என்று அவருக்கே தெரியாது. நாட்டில் ஏதோ அலை வீசுகிறது. அதன்மூலம் தனது மைத்துனர் சுதீசை அமைச்சராக்கி விடலாம் என்று விசயகாந்தும், தனது மகன் அன்புமணியை அமைச்சராக்கி விடலாம் என்று இராமதாசும் கனவு காண்கின்றனர். அவர்கள் கனவு பலிக்காது.
அதிமுக 40 தொகுதியிலும் வெற்றி பெறும். மத்தியில் செயலலிதா சுட்டி காட்டுபவர்தான் தலைமையாளராவார்”
Leave a Reply