தமிழக நலனைக் கருத்தில் கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: செயலலிதா வேண்டுகோள்
திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளரான கே.ஆர்.பி பிரபாகரனை ஆதரித்து முதலமைச்சர் செயலலிதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவைற்றை முன்வைத்து, தேர்தலைச் சந்திக்கும் அதிமுகவுக்கு மக்களாகிய நீங்கள் வாக்களிப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழக நலனை கருத்தில் கொண்டு நன்றாகச் சிந்தித்து அதிமுகவுக்கு வாக்களியுங்கள். தன் நலமாகச் செயல்படும் திமுக,
2-த(2ஜி)ஊழலில் தமிழகத்தைத் தலைகுனியச் செய்துவிட்டது. அக்கட்சிக்கு வருகின்ற தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். 2006 இல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் வரை மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம், அதன் பின் வந்த திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தீட்டிய மின்திட்டங்களை 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு செயல்படுத்தத் தவறிவிட்டது.
புதிய திட்டங்களையும் அக்கட்சி அறிவிக்கவில்லை. இதன் காரணமாகவே தமிழகம் திமுக ஆட்சியில் இருளில் மூழ்கியது. 2011ஆம் ஆண்டு எனது தலைமையிலான அதிமுக ஆட்சி பதவியேற்ற போது 4000 பெருந்திறனம் (மெகாவாட்) அளவுக்கு மின்பற்றாக்குறை நிலவியது. மின்துறையில் கடன் சுமை வேறு அதிகரித்திருந்தது. ஆனால் நாங்கள் விரைவாகச் செயல்பட்டு திமுக ஆட்சிக்காலத்தில் 8000 பெருந்திறனம் (மெகாவாட்) மின் உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில் 12000 பெருந்திறனம்(மெகாவாட்) அளவுக்கு மின் உற்பத்தியை நாங்கள் அதிகரித்து மின் தடையை படிப்படியாகக் குறைத்தோம்.
எனவே இனி வரும் காலங்களில் மக்களுக்குத் தேவையான மின்சாரம் தொடர்ந்து தடையின்றி வழங்கப்படும். எங்காவது மின் உற்பத்தி நிலையங்கள் பழுதானால் மட்டுமே மின்தடை அறிவிக்கப்படுகின்றது. தற்போது தேர்தல் நேரமென்பதால் அதிமுகவைத் தோல்வி அடையச் செய்யவேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு நாளுக்கு நாள் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்கள் பழுதாகிவிட்டதாகக் கூறுகின்றனர். இது போன்ற திட்டமிட்டு சதி செய்து செயற்கையாக மின் தட்டுப்பாட்டை உருவாக்கும் சதிகாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply