நரேந்திர மோடி தலைமையாளரானால் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு இருக்காது-தொல்.திருமாவளவன்
திருவள்ளூர்(தனி) நாடாளுமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை ஆதரித்து தொல்.திருமாவளவன் திருவள்ளூர், ஈக்காடு, திருப்பாசூர், திருவாலங்காடு போன்ற பகுதிகளில் தேர்தல் பரப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– “நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் ஒரு சிறப்பான சனநாயக முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை வெற்றி பெறச் செய்து மக்கள் பணியாற்ற அவருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நரேந்திரமோடி தலைமையாளரானால் -பிரதமரானால்- தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு இருக்காது. எனவே பொதுமக்கள் சிந்தித்து, சமயவாத ஆற்றல்களை ஒடுக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
தொல்.திருமாவளவன்,திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெங்கல் அங்காடியில்பேசும் பொழுது, ‘‘சமூக நீதிக் கோட்பாடுடன் கூடியதுதான் தி.மு.க. கூட்டணி. பா.சனதா என்பது பொருந்தாதக் கூட்டணி. கருணாநிதி கைகாட்டும் ஆள் தலைமையாளராக வரவேண்டுமானால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமார் முதலான 40 தொகுதியின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களும் வெற்றிபெற வேண்டும்’’ என்றார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் தொல்.திருமாவளவன் பேசிய பொழுது,
“ஆர்.எசு.எசு. கட்டுப்பாட்டில் உள்ள நரேந்திரமோடி தலைமையாளரானால் நாடு பிளவு பட்டு விடும். இதில் எந்த ஐயமும் வேண்டாம். ஆகையால் சிந்தித்து வாக்கு அளிக்க வேண்டும். இந்தத் தொகுதியில் போட்டியிடும் எங்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர் இரவிக்குமாரை வெற்றி பெறச் செய்தால் உரூ.1000 கோடி முதலீடுகளைத் தொகுதியில் ஏற்படுத்தி, தொழிற்சாலைகள் அமைப்பார். இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.” என்றார்.
Leave a Reply