vijakanthmeeting01

  மத்திய சென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சே.கா.இரவீந்திரனை ஆதரித்து, யானைகவுனி, பட்டாளம், வில்லிவாக்கம், முதலான பகுதிகளில் தே.மு.தி.க. தலைவர் விசயகாந்து பரப்புரை மேற்கொண்டார். யானைகவுனியில் திறந்த  ஊர்தியில் நின்றபடி, விசயகாந்து பேசியதாவது:-

 “குசராத்து தமிழ்நாடு மாதிரி முன்னேறவில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மை தான். தமிழ்நாட்டில்  கையூட்டு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆனால் குசராத்து கையூட்டில்  முன்னேற்றம் அடையவில்லை.

 அதேபோல், தமிழ்நாடு  அரசின் மதுபானக்கடை விற்பனையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. ஆனால் குசராத்து அதில் முன்னேற்றம் அடையாமல்தான் இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டின் முன்னேற்றமாகச் சொல்கிறார்கள். மக்களுக்கு எதிரான   ஆற்றல்களை விரட்டி அடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

 மக்களுக்கு எதிரான ஆற்றல் என்பது என்ன?. மக்களுக்கு எதிரான பலதிட்டங்களைச்செய்வது தான். இப்போது எங்கு பார்த்தாலும் மக்களுக்கு  எதிராகத்தான்  பலத்திட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. அப்படிப் பார்த்தால் யாரை விரட்டி அடிக்க வேண்டும் என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாடாளுமன்றத் தொகுதிக்கென்று நிதி ஒதுக்கப்படும். ஆனால் இதுவரையில்  நாடாளுமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்களில் யாராவது திட்டங்களை மக்களுக்குச் செய்து இருக்கிறார்களா?. இதுவரை யாரும் செய்ததில்லை.

 இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரி சம்பத்து வாக்குக்குப் பணம் வாங்கினால் தண்டனை வழங்கப்படும் என்று கூறுகிறார். தப்பு செய்கிறவர்களை விடத், தப்பு செய்யத் தூண்டுகிறவர்களுக்குதான் தண்டனை அதிகம். அதன்படி பார்த்தால்,  வாக்கிற்குப் பணம் கொடுப்பவர்களுக்கு அதிகத் தண்டனை வழங்க வேண்டும்.

 இப்போது நாங்கள் அமைத்து இருக்கும் இந்தக் கூட்டணி தேசிய சனநாயகக் கூட்டணி. இது வெற்றிக்கூட்டணி. இந்த கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது. கருத்துக் கணிப்புகளில் தேசிய சனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு கூடிக்கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டை நல்லரசாக்க எங்களால் முடியும். எங்களுக்குள் எந்தவிதச் சண்டைகளும் கிடையா.

மதவாதம், மதவாதம் என்று சொல்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இவர்கள் சொல்கிற மதவாதம் என்ன என்று எனக்கு புரியவில்லை. என்னை பொருத்தவரையில் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு இந்தியா தான். நானும், நரேந்திர மோடியும் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது தான் செய்வோம்.

 நரேந்திரமோடி கண்டிப்பாக வெற்றி பெறுவார். நாம் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கு நாம் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் நம்முடைய தேவைகளை நாம் அவரிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்ள முடியும். அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரசு ஆகிய 3 கட்சிகளையும் நாம் விரட்டியடிப்போம்.”

 இவ்வாறு அவர் பேசினார்.

murasu01