ay.naa

ஐ.நா.-வில் நிறைவேற்றப்பட்ட

அமெரிக்கத் தீர்மானத்தின் முழுமையான வடிவம்

  பல கண்ணோட்டங்களையும், எதிர்வு கூறல்களையும் கொண்டதாகவும், தமிழர்களினதும் பன்னாட்டினதும் எதிர்பார்ப்பைக் கொண்டதுமான அமெரிக்கத் தீர்மானம் ௧-௧௦-௨௦௧௫ (1.10.2015) வியாழக்கிழமை அன்று வாக்கெடுப்பின்றி ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ‘இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் அமெரிக்காவினால் இலங்கை குறித்தான திருத்தப்பட்ட தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வரைபை விடத் திருத்தப்பட்ட புதிய தீர்மானத்தில் பல விதயங்கள் மாற்றப்பட்டுள்ளன.

  முன்னைய வரைபில் காணப்பட்ட சில பத்திகள் சுருக்கப்பட்டுள்ளதுடன் 26 பத்திகள் 20 பத்திகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 செய்திகள் வருமாறு:-

  1. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 27ஆம் அமர்வில் இலங்கையில் நல்லிணக்கத்தையும் குற்றச் செயல்களுக்குப் பொறுப்பு கூறுதலையும் ஏற்படுத்த வேண்டுமெனக் கோரி, மனித உரிமைப் பேரவை ஆணையாளர் ஆற்றிய உரை, இலங்கை குறித்த உசாவல் (விசாரணை) அறிக்கை என்பனவற்றைக் கருத்தில் கொள்கின்றோம். அந்த வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25-1 தீர்மானத்துக்கு அமைய முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு அரசைக் கோருகின்றோம்.
  2. உண்மையைக் கண்டறியும் நோக்குரையில் 2015ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்துக்கும் இடையிலான ஈடுபாடு வரவேற்கப்பட வேண்டியது.
  3. நீதியை செயற்படுத்துவதில் நம்பகத்தன்மையை உறுதி செய்ய இலங்கை அரசுக்குத் துணை செய்யப்படும். பாதிக்கப்பட்டவர்கள், குடிமைக் குமுகாயம் (சிவில் சமூகம்) முதலானபல்வேறு தரப்பினருடனும் விரிவான நாடளாவிய கலந்துரையாடல்களின் ஊடாக இதனைச் செய்ய முடியும். பன்னாட்டு வல்லுநர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள முடியும். சான்றாளர்கள் (சாட்சிகள்) மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் வலுவான பாதுகாப்புப் பொறிமுறைமை ஒன்று தேவை.
  4. நல்லிணக்கம், கடந்த காலச் சிக்கல்கள் மீள் இடம்பெறாமல் இருத்தல், காணாமல் போனோர் குறித்த அலுவலகம் முதலான செய்திகள் வரவேற்கப்பட வேண்டியவை. பக்கச்சார்பற்ற நேர்மையான உசாவல் (விசாரணை) பொறிமுறைமை, நீதிமன்றக் கட்டமைப்பின் மூலம் உசாவல்கள் நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். இதற்குப் பன்னாட்டு உதவிகளையும் ஐ.நா மனித உரிமை அலுவலகத்தின் தொழில்நுட்ப உதவிகளையும் பெறலாம்.
  5. ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்தும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  6. பொதுநலவாய (காமன்வெல்த்து) – பன்னாட்டு நீதியாளர்கள், உசாவர்கள் (விசாரணையாளர்கள்) சட்டத்தரணிகளுடன், உள்நாட்டு நீதித்துறைக் கட்டமைப்புடன் கூடிய உசாவல் பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும்.
  7. பன்னாட்டு மனிதநேயச் சட்டங்களையும் மனித உரிமைகளையும் மீறுவோருக்கு எதிராகத் தண்டனை விதிக்க உள்நாட்டுச் சட்டங்களைத் திருத்தி அமைக்க வேண்டும். குறிப்பாக, இலங்கையின் பன்னாட்டுச் சட்டங்களுடைய அடிப்படையில் குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  8. பாதுகாப்புத் துறைசார் விவகாரங்களில் நிலையான மாற்றங்களை அரசு செயற்படுத்த வேண்டும் பேரளவிலான மனித உரிமை மீறல்கள் முதலான பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளப்படுத்தப்படும் பாதுகாப்பு அலுவலர்கள் உயர் பதவிகளில் அமர்த்தப்படக்கூடாது. குறிப்பாக, தற்காலிக நீதிப் பொறிமுறைமையில் பன்னாட்டு மனிதநேயச் சட்டங்களை மீறிய படை அலுவலர்கள், புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் உள்ளடக்கப்படக்கூடாது.
  9. சான்றாளர்கள், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் அரசின் புதிய சட்டத் திருத்தம் வரவேற்கப்பட வேண்டியது. இந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியது கட்டாயம். பாதுகாப்புத் தரப்பினர், அரச அலுவலர்களுக்கு எதிராகச் சான்றளிப்பவர்கள் பாதுகாக்கப்படக்கூடிய வகையில் சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
  10. அரசுப் படையினரால் பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கன. குறிப்பாக, குடிமையியல் (சிவியலின்) தொடர்பானவற்றில் படைப்பிரிவின் (இராணுவத்தின்) தலையீடு முழுமையாக அகற்றிக் கொள்ளப்பட வேண்டும். குடிமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும்.
  11. ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சிறுபான்மை மத – இனக் குமுகத்தைச் சேர்ந்தவர்கள், பள்ளிவாசல்கள், கோயில்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் உசாவல் (விசாரணை) நடத்தி உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டியதுடன் மீளவும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவதனைத் தடுக்க வேண்டும்.
  12. வன்கொடுமை (பயங்கரவாத)த் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்தல், நீக்குதல் தொடர்பில் இலங்கை அரசின் உளமார்ந்த நிலைப்பாடு (அர்ப்பணிப்பு) வரவேற்கப்பட வேண்டியது. பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் தீவிரக்கொள்கைத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட முடியும்.
  13. கட்டாயக் கடத்தல்கள் தொடர்பிலான பன்னாட்டு அறிவிப்பில் கைச்சாத்திட அரசு காட்டும் முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது. காணாமல் போனவர்கள் தொடர்பில் உறவினர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.
  14. கடந்த காலத்தில் உசாவல் (விசாரணை) நடத்தப்பட்ட குடியரசுத்தலைவர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை வெளியிடுவதாக இலங்கை அரசு அளித்த வாக்குறுதி வர­வேற்கப்பட வேண்டியது.
  15. மனித உரிமை மீறல்கள் மற்றும் பன்னாட்டு மனிதநேயச் சட்ட மீறல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட அனைத்து ஆவணங்களையும், அறிக்கைகளையும் பேணிப் பாதுகாக்கும் பொறிமுறைமை ஒன்றை அரசு உருவாக்க வேண்டும். தனியார் அல்லது பொது நிறுவனங்களினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் அனைத்தும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
  16. அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கக் கூடிய வகையில் அதிகாரப் பகிர்வுத் திட்டமொன்றை அரசு செயற்படுத்த வேண்டும். அவ்வாறு அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பதன் மூலமே நாட்டின் அனைத்து மக்கள்தொகையினரும் மனித உரிமைகளைப் பெற முடியும். 13ஆம் திருத்தச் சட்டத்தின்படி அனைத்து மாகாண அவைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
  17. பன்னாட்டு மனித உரிமைச் சட்டம், பன்னாட்டு மனிதநேயச் சட்டம் என்பவை மீறப்படக்கூடாது எனப் படையின் (இராணுவம்) அனைத்துப் பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்பட வேண்டும். அனைத்து வகையிலான பாலியல் வன்கொடுமைகள், பால்நிலைசார் ஒடுக்குமுறைகளை இல்லாதொழிக்க இலங்கையை ஊக்கப்படுத்த வேண்டும். பால்நிலை ஒடுக்குமுறைச் சித்திரவதைகளில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  18. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அலுவலகம், இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படுகின்றனவா என்பது மதிப்பீடு செய்யப்பட வேண்டும். குறிப்பாக, குற்றச் செயல்களுக்குப் பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், மனித உரிமை விவகாரங்கள் குறித்துக் கண்காணிக்கப்பட வேண்டும். இந்த நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ஆம் அமர்வின்பொழுது வாய்மொழி மூல அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அளிக்க வேண்டும். பரிந்துரைகள் எவ்வாறு செயற்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து 34 அமர்வுகளில் முழு அளவில் அறிக்கை அளித்துத் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
  19. இலங்கை அரசு, சிறப்பு ஆணையாளர்களுடன் ஒத்துழைப்போடு செயற்பட ஊக்குவிக்கின்றோம். சார்பாளர்கள் சிலர் நீண்ட காலத்திற்கு முன்னதாக இலங்கைக்கு வருகை புரிய விடுத்த கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.
  20. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகச் சிறப்பு அறிக்கையாளர்கள், ஆணையாளர்கள் ஆகியோர் இலங்கை அரசுக்குக் கருத்துரைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க வேண்டும்.

நன்றி: ஈழச்சுடர்.

 muthirai_eezhachudar_logo

இ.பு.ஞானப்பிரகாசன்

E.Bu.Gnanaprakasan_photo