பல்நிற வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்
பல்நிற வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்!
பல்நிற வாக்காளர் அடையாள அட்டையைப் பெறுவதற்கான கட்டணம் உரூ.25-ஐ இணையத்தளத்திலும் செலுத்தலாம். இதன்படி விண்ணப்பிப்போருக்கு வீடு தேடி வாக்காளர் அட்டை வரும்.
நாட்டிலேயே முதல் முறையாக, இந்திய அரசு வங்கியுடன்(State Bank of India) தமிழகத் தேர்தல் ஆணையம் இதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி இது குறித்து ச், செய்தியாளர்களிடம் 29.03.2016 அன்று கூறியதாவது:-
பல்நிற வாக்காளர் அட்டையைப் பெறச் செலுத்த வேண்டிய உரூ.25/- கட்டணத்தை, www.elections.tn.gov.in என்கிற இணையத்தளத்தில், அதற்காக விண்ணப்பிக்கும்பொழுதே இணைய வழி பணப் பரிமாற்றம் மூலமாகச் செலுத்தலாம்.
கூடுதலாக உரூ.40/-உம், பிற செலவாக உரூ.2/-உம் செலுத்தினால் விரைவு அஞ்சல் மூலமாக அடையாள அட்டை வீட்டுக்கே வரும்.
வெளிமாநிலப் பார்வையாளர்கள்: 100 விழுக்காடு வாக்குப் பதிவை வலியுறுத்தி நடைபெறும் விழிப்புணர்வுப் பரப்புரையைக் கண்காணிக்க இரு மாவட்டங்களுக்கு ஓர் அலுவலர் என்கிற முறையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 16 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள் அனைவரும் ஏப்பிரல் 9ஆம் நாள் முதல் 14ஆம் நாள் வரை கண்காணிப்பார்கள்.
மின்னணு வாக்குப் பதிவுப் பொறிகளை வாக்காளர்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, மக்கள் நெருக்கம் மிகுந்துள்ள இடங்களில் செயல் விளக்கக் காட்சி நடத்தப்படும். இதற்காகத் தொகுதிக்கு முப்பது மின்னணு வாக்குப் பொறிகள் பயன்படுத்தப்படும்.
பெயர் சேர்ப்பு-நீக்கல்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல் பணிகளை இணையத்தளம் வழியாகவும் செய்யலாம். இதுவரை இணையம் மூலமாக 4.31 நூறாயிரம் (இலட்சம்) பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.43 நூறாயிரம்(இலட்சம்) பேரும், பெயரை நீக்க 1.79 நூறாயிரம் (இலட்சம்) பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
1950 என்கிற எண் மூலம் தகவல்: தேர்தல் தொடர்பான தகவல்களைப் பேசி மூலமாகப் பெறுவதற்கு 1950 என்கிற கட்டணமில்லாப் பேசி எண் செயல்படுத்தப்படுகிறது. நாளொன்றுக்கு ஏறத்தாழ நான்காயிரம் அழைப்புகள் வருகின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூடுதலாக அழைப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேடைப் பேச்சுகள் அனைத்தும் ஒளிப்பதிவு: தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினரின் மேடைப் பேச்சுகள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. பேச்சுகள் குறித்து முறையீடு வந்தால், ஒளிப்பதிவு செய்யப்பட்டதைச் சான்றாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணல் காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தைக் கட்சி சார்புள்ள தளப் பொறுப்பாளர்கள் மூலமாக அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. இதன்படி, அரசு அலுவலர்கள் மூலமே ஊதியம் வழங்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வங்கிக் கணக்கு மூலமே பணம் செலுத்தப்படுவதால் எந்தச் சிக்கலும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தவிர, பல்நிற வாக்காளர் அடையாள அட்டையை அனைவருக்கும் விரைந்து வழங்கிட ஏதுவாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சென்னை மாவட்டத்தில் மூன்று மையங்களை அமைக்கவும் ஆணையிட்டுள்ளார். இது குறித்துச் சென்னை மாநகராட்சி -தேர்தல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளபடி:–
வாக்காளர்கள் யாவரும் கீழ்க்குறிப்பிடும் மையங்களிலிருந்து ‘001டி’ எனும் விண்ணப்பத்தினை உரூபாய் 25/– செலுத்தி உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னைப் பெருநகர மாநகராட்சி, இரிப்பன் கட்டட வளாகம் பொன்விழாக் கட்டடத்தின் அருகில் அமைந்துள்ள மின்சேவை (இ-சேவை) மையம். (வட சென்னைப் பகுதி வாக்காளர்களுக்கு);
மண்டலம்–-8, சென்னைப் பெருநகர மாநகராட்சி அலுவலகம், பழைய கதவு எண்: 12-பி, புதிய கதவு எண். 36-பி, புல்லா நிழற்சாலை (avenue), செனாய் நகர், சென்னை. (மத்திய சென்னைப் பகுதி வாக்காளர்களுக்கு).
மண்டலம்–-13, சென்னைப் பெருநகர மாநகராட்சி அலுவலகம், கதவு எண்: 115, மருத்துவர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை. (தென் சென்னைப் பகுதி வாக்காளர்களுக்கு)
இவை மட்டுமின்றிச், சென்னையில் உள்ள அனைத்துப் பொதுச் சேவை மையங்களிலும், மேற்கண்ட படிவத்தினையும், உரூ.25-ஐயும் செலுத்தி பல்நிற வாக்காளர் அடையாள அட்டைக்குப் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பொதுச் சேவை மையங்களில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, மூன்று நாட்களுக்குள்ளாகப் பல்நிற அடையாள அட்டை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.
அதே நேரம், அட்டைதான் வண்ணத்தில் உள்ளதே தவிர ஒளிப்படம் கருப்பு-வெள்ளையில்தான் உள்ளது என வாக்காளர்கள் கூறுகின்றனர்.
படம்: நன்றி : அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.
Leave a Reply