Ramadoss01

வண்டலூரில் நாளை நடைபெற இருந்த பா.ம.க. மாநில மாநாடு 27- ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு: இராமதாசு அறிவிப்பு

பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

  தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான பா.ம.க. மாநில மாநாடு 14-ஆம் நாள் சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இம்மாநாட்டை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் மாநாட்டுக்கு உயர்நீதுிமன்றம் அளித்த இசைவை எதிர்த்து உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் அ.தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்தது.

 

  மாநாடு நடத்த இடைக்காலத்தடை பெற்றதுடன், மாநாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கும் அரசு தடை வாங்கியது. இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கேட்பிற்கு வந்தது. அப்போது பா.ம.க. சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்ற நீதிபதிகள் மாநாட்டைத் திட்டமிட்டபடி நடத்த இசைவு அளித்தனர். ஆனால், சென்னை உயர்நீதுதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த தடை காரணமாக கடந்த 3 நாட்களாக மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

 

  மேலும் 14- ஆம் நாளுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் அதற்குள் அனைத்துப் பணிகளையும் முடித்து மாநாட்டை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் மாநில மாநாட்டை இம்மாதம் 27- ஆம் நாள் நடத்த இசைவளிக்க வேண்டும் என்று கோரி பா.ம.க. சார்பில் இன்னொரு மனு அளிக்கப்பட்டது. அம்மனுவை உசாவிய நீதிபதிகள் பா.ம.க. கேட்டுக்கொண்டவாறு 27- ஆம் நாள் ஆட்சி மாற்றத்திற்கான பா.ம.க. மாநில மாநாட்டை நடத்துவதற்கு இசைவு அளித்தனர். அதன்படி, 14- ஆம் நாள் வண்டலூரில் நடைபெறவிருந்த பா.ம.க. மாநில மாநாடு இம்மாதம் 27- ஆம் நாள் அதே இடத்தில் நடைபெறும்