புதுச்சேரி பொலிவு நகர வடிவமைப்புச் சின்னத்தில் தமிழ் இல்லை!
புதுச்சேரி பொலிவு நகர வடிவமைப்புச் சின்னத்தில் தமிழ் இல்லை,
தமிழில் மாற்றுக !
அரசுக்குத் தனித்தமிழ் இயக்கம் வேண்டுகோள்!
புதுச்சேரி நகரைப் பொலிவு (smart) நகராகத் தேர்ந்தெடுத்த பின்னர் அதற்கான வடிவமைப்புச் சின்னம் ஒன்றைப் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு தீமைகள் பெரும்பான்மை மக்கள் மொழியான தமிழுக்கும் வரலாற்றுக்கும் விளைவிக்கப்பட்டுள்ளன.
ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்காமல் பிரஞ்சு மொழியில் மட்டும் அந்தச் சின்னம் உருவாக்கப் பட்டுள்ளது. இதைமாற்றித் தமிழில் மட்டும் இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். தேவைப்பட் டால் சிறிய அளவில் ஆங்கிலத்தில் இருக்குமாறு உருவாக்கலாம். சட்டப்படிப் புதுச்சேரியில் தமிழ்தான் ஆட்சிமொழி !. அப்படியிருக்க அதைப் புறக்கணித்தது புதுச்சேரி மக்களையும் தமிழ்மொழியையும் இழிவுபடுத்துவதாக உள்ளது.
பிரஞ்சு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டஅயல்நாட்டவர் 50 பேர்கள் இங்கு இருக்கலாம். பிரஞ்சு மொழி தெரிந்த பிரஞ்சுக் குடியுரிமைபெற்றவர்கள் அனைவரும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களேயாவர். அவர்கள் தமிழ்மொழியை மதிக்கும் பற்றாளர்கள்.
பிரஞ்சு அரசு அம்மொழியை அதிகமாகப் பேணிக்காத்து வருகிறது. 1994இல் பிரஞ்சு மொழி யுரிமை யை அடிப்படையுரிமையாக அறிவித்து அங்குவரும் மற்றமொழிக்காரர்களும் பிரஞ்சு மொழியை மதித்துக் கற்றுப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் உத்தரவிட் டுள்ளது. பிரஞ்சு அரசே, தமிழ் புதுச்சேரியில் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளாது.
பாண்டிச்சேரி என்னும் பெயர் மாற்றப்பட்டு புதுச்சேரி என்னும் பெயர் நம்மாநிலத்திற்கு வைக்கப் பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. சென்ற அரசு நகரை மட்டும், பாண்டிச்சேரி என்று அறிவித்தது. போராட்டத்திற்குப் பின் அந்த அறிவிப்பைக் கைவிட்டது. எனவே நகரத்திற்கும் புதுச்சேரி என்றுதான் பெயர். ஆனால் அரசு வெளியிட்டுள்ள பொலிவு நகர்ச் சின்னத்தில் பாண்டிச் சேரி என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, வரலாற்றைத் திரிப்பதாகவும் புதுச்சேரிப் பெயர்மாற்ற உத்தரவை மிதி்ப்பதாகவும் உள்ளது.
எனவே புதுச்சேரிஅரசு, வெளியிட்டுள்ள பொலிவுநகர்ச் சின்னத்தைத் திரும்பப் பெறுமாறு புதுச்சேரி அரசைக் கேட்டுக்கொள்கிறோம். புதுச்சேரி என்று தமிழில் குறிப்பிட்டுப் புதிய பொலிவு நகர்ச் சின்னத்தை உருவாக்கி வெளியிடுமாறும் புதுச்சேரி அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
க.தமிழமல்லன்
தலைவர், தனித்தமிழ் இயக்கம்,புதுச்சேரி
முகவரி- 66 மா.கோ.தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605009
பேசி – 9791629979 ; vtthamizh@gmail.com
Leave a Reply