புலிகள் மீதான தடையை நீக்கி

ஐரோப்பிய நீதிமன்றம் வரலாற்றுச்

சிறப்பு மிக்கத் தீர்ப்பு!

 

இந்தியாவும் புலிகள் மீதானத்

தடையை நீக்க வேண்டும்!

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/03/ltte-logo01-250x187.jpg

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை!

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட எதிரானவை என, (புரட்டாசி 30, 2045 / 16.10.2014 அன்று) இலக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2001ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்ற பெயரில், பல அமைப்புகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்டன.

இதனை தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட, இலங்கை – இந்தியா போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள், தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளையும் ‘பயங்கரவாத அமைப்பு’ என முத்திரைக் குத்தினர்.

அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் முதலான எந்த அயல் நாடுகளிலும், புலிகள் ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்ற போதிலும், இலங்கை, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் அழுத்தங்களுக்கு ஏற்ப, அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் முதலான பல நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு, இத்தடை மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் உச்சமாக, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்ற இனக்கொலைப் போர், ‘பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’  என்று ஞாயப்படுத்தப்பட்டது. அதற்கு இந்தத் தடை உதவியாக இருந்தது.

இந்நிலையில்தான், போர் முடிந்ததாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் முழுவதுமாக அழித்தொழிக்கப்பட்டு விட்டதாகவும் இலங்கை அரசே அறிவித்த பிறகும், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என உலக நாடுகளில் பரவி வாழும் தமிழீழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கோரிக்கை வைத்தனர்.

இதள் விளைவாக, புரட்டாசி 24, 2042 / 2011ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று, டச்சு நாட்டு நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் “பயங்கரவாத அமைப்பு“ அல்ல எனத் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், 2011ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ள, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடை சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப்புலிகள் மீதானத் தடையை நீக்கக் கூறும் காரணங்கள் இந்தியாவிற்கும் பொருந்தும். தமிழ்நாட்டையும் சேர்த்து விடுதலைப் போராட்டம் நடத்துவதாக, தமிழீழ விடுதலைப்புலிகள் எப்பொழுதும் சொன்னது கிடையாது. தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் தமிழக அமைப்புகளும், அவ்வாறு சொன்னது கிடையாது.

எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்ப்பைப் பின்பற்றி, இந்தியாவும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இன்னணம்,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசியப் பேரியக்கம்

அறிக்கை வெளியீடு:

தலைமைச் செயலகம்,

தமிழ்த் தேசியப் பேரியக்கம்tha.the.periyakkam