karunanidhi-meeting02

திருவள்ளூர் தொகுதியில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்  இரவிக்குமாரை ஆதரித்து, ஆவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கூட்டத்திற்கு வர இயலாத நிலைமையில், உடல் நலிவுற்று படுக்கையிலே இருந்த என்னை, நம்முடைய தேர்தல் பொறுப்பாளரும், மாவட்ட நிருவாகிகளும் வந்து சந்தித்து இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள். உடல் நலிவு எனக்கு மட்டும் அல்ல, தமிழ்நாடே இன்று நலிவுற்று இருக்கிறது. அதை நீக்க அனைவரும் ஒன்று படும் நேரத்தில், நான் வீட்டில் இருக்க விரும்பாத காரணத்தால், உங்களை எல்லாம் சந்தித்தால் அதுவே எனக்கு மருந்தாகிவிடும் என்று இங்கு வந்துள்ளேன்.

கடந்த ஒரு வார காலமாக நான் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயணம் காரணமாக, காலையில் திடீரென உடல் நலிவுற்று, மருத்துவர்கள்  அறிவுரை பெற்று இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். தமிழர்கள் மீது நான் கொண்டுள்ள பற்று, பாசம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

காலையில் என்னை அழைக்க வந்த இந்த வட்டாரத்தில் உள்ளவர்கள், மாலை வரை எனது வீட்டிலேயே காத்திருந்து என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அழைத்து வந்திருக்கிறார்கள் என்றால் பொருத்தமாக இருக்காது.

நாட்டு நலனை சீர்த்திருத்த வேண்டிய கடமையால் நான் உங்கள் முன் வந்து அமர்ந்திருக்கிறேன். ஆவடிக்கு நான் பல நேரம் வந்திருக்கிறேன். அப்போது மேடையிலே நின்று கொண்டு பேசியிருக்கிறேன். இன்று எனது உடல் நிலையால் உட்கார்ந்து பேசுகிறேன். 3 ஆண்டுக்கு முன் செய்த ஒரு அறுவைமருத்துவத்தால் என்னால் எழுந்து நிற்க முடிய வில்லை.

நான் எழுந்திருக்க முடியா விட்டாலும், தமிழ்ச் சமுதாயம் எழுந்திருக்க வேண்டும் என்ற வகையில் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். தமிழ்ச் சமுதாயம் எழுந்திருக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் இலட்சியம். எனக்கு மருந்து இங்கே கிடைக்கும் என்று வந்துள்ளேன். மருந்தை அளிக்கும் மனப்பக்குவம் இங்குள்ள வாக்காளர்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.

இப்பொழுது நம் சொந்தச் சிக்கல்களைவிட, பொதுச்சிக்கல்களை கூற நேரம் போதாது. அந்த அளவுக்குச் சிக்கல்கள் நாட்டில் உள்ளன. ஒரு நாளைக்கு ஒரு கட்சி முளைக்கிறது. தேர்தல் வந்தால் ஒரு கட்சி அல்ல 9 கட்சிகள் முளைக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொறுப்புச்சுமையை உணர்ந்து நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்.

இந்தியா  விடுதலை பெற்று பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால்  விடுதலையின் பலனை முழுமையாக நாம்   துய்க்க முடியவில்லை. இந்தியா விடுதலை பெற்றால் தேனாறு ஓடும், பாலாறு ஓடும் என்று சொன்ன காலம் பொய்த்துப்போய், தேனும் ஓடவில்லை, பாலும் ஓடவில்லை, ஓடிய பாலாறும் காய்ந்துவிட்டது. தமிழ்ச் சமுதாயத்தை, நாட்டைப் பார்த்து பரிதவித்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு ஒரு முடிவு காண நாட்டு மக்களுக்கு ஒரே வழி தேர்தல் தான். அந்தத் தேர்தல் இப்போது வந்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல்தானே என்று பார்க்காமல், 5 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்து அதை நீங்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

இப்போது இந்தியாவை ஆழப்போவது யார்?. இந்தக் கேள்விக்கு விடை காணப்போவது யார்?. நாம் தான் இந்த கேள்விக்கு விடை காணப் போகிறோம். யாரை உட்காரவைக்க போகிறோம், இதுதான் தேர்தலிலே வாக்காளர்கள் செய்ய வேண்டிய வாய்ப்பான கடமையாகும். அந்தக் கடமையை எப்படி நிறைவேற்றுவது என்பதை ஆராயத்தான் இத்தனை ஆயிரம் பேர் கூறியிருக்கிறோம்.

இப்படித்தான் இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் கூடியிருந்து, தங்களுக்கான தலைவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கான நாள் தான் ஏப்ரல் 24-ந்தேதி. நாம் தேர்ந்தெடுப்பவர்கள் தான் 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போகிறார்கள். அவர் நல்லவரா?, கெட்டவரா?, மக்களை ஏய்ப்பவரா?, பாட்டாளி வர்க்கமா?, தொழிலாளர்களின் தோழரா? அல்லது சீமான்களுக்கு தோழராக இருப்பாரா? என்பதற்கு  விடை சொல்ல வேண்டும். இவர் நமக்காக இரக்கப்படுவாரா? அல்லது எல்லாம் ஆண்டவன் விட்ட வழி என்று சென்றுவிடுவாரா? என்பதைக் கூறத்தான் இந்தத் தேர்தல் விளக்கப் பொதுக்கூட்டம்.

கூடினோம், கலைந்தோம் என்பதற்காக இந்தக் கூட்டம் அல்ல. எல்லோரும் சேர்ந்து என்ன முடிவு எடுத்தோம். மீண்டும் பழையவர்களே ஆளட்டும் அல்லது புதியவர்கள் மக்களைப் பற்றி சிந்திப்பவர்கள் என்பதால் அவர்கள் ஆளட்டும் என்று எண்ணிக்கொள்ளத்தான் இந்தக் கூட்டத்திற்கு வந்துள்ளோம்.

நான் என் இளமைக் காலத்தில் ஒரு நாளைக்கு 20 கூட்டங்களில் கூட கலந்து கொண்டு பேசியிருக்கிறேன். ஆனால், இன்று எனது  அகவையும் சோர்வும் அதற்கு இடம்தரவில்லை. சோர்வு இருந்தாலும் தமிழனுக்குத் தொண்டாற்ற வந்துள்ளேன். நான் இளமைக் காலத்தில் நிறைய கூட்டத்தில் பேசியதற்கு தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் கற்றுத்தந்த பயிற்சிதான் காரணம். ஆனால், இன்று அறிஞர் அண்ணாவைபட பார்க்காதவர்கள் நாட்டிலே கட்சித் தலைவர்களாக கூட இருக்கிறார்கள். அவர்கள் கட்சிக்குக் கூட அண்ணா பெயரை வைத்திருக்கிறார்கள்.

எப்படி பட்டவர்கள் நாட்டை ஆளவேண்டும் என்ற கேள்விக்கு விடை காண சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். கோடநாட்டில் 900 காணி(ஏக்கர்) நிலமும், அதைப்போல காரைக்குடியில் நிலமும், கன்னியாகுமரியில் நிலமும் வாங்கி வைத்துக்கொண்டு நான் ஏழை, பரம ஏழை, மாதம் ஒரு உரூபாய்தான் சம்பளம் வாங்கினேன் என்று முதல்–அமைச்சர் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அப்படிபட்டவர் நமக்கு முதல்–அமைச்சராக கிடைத்திருக்கிறார். யார் செய்த பாக்கியமோ?. இதைத் தவற விடலாமா என்று எண்ணுபவர்கள் அவருக்கு வாக்களியுங்கள். இதுபோன்ற அநியாயம் இனியும் நடக்க வேண்டாம் என்று எண்ணுகிறவர்கள் அவருக்கு வாக்களிக்காதீர்கள்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

ravikumar01