இரவிராசு ; ninivwnrhl_ravurasu

மாமனிதர் இரவிராசின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – காணுரை (Video)

  மகிந்த இராசபக்ச அரசின் கைக்கூலிகளினால் கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டவர் மாமனிதர் நடராசா இரவிராசு. அன்னாரது 10ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, யாழ்ப்பாணம் கந்தர்மடம் மணல்தரை வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் ஐப்பசி 25, 2047 / 10.11.2016, வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

  கட்சியின் நல்லூர்க் கோட்ட இளைஞரணித் தலைவர் மயூரன் தலைமையில் நிகழ்வுகள் தொடங்கின. குறித்த நிகழ்வில் கட்சியின் பொருளாளர் சிரீகிருட்டிணகுமார், ஆங்கில ஆசிரியப் பயிற்றுநர் கோபாலகிருட்டிணன், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் இரவீந்திரன் ஆகிய பலரும் நினைவுச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

  கட்சியின் தலைவர் கசேந்திரகுமார் பொன்னம்பலம், மாமனிதர் இரவிராசின் உருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து கட்சியின் ஆதரவாளர்களும், பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 தொடர்ந்து இரவிராசின் நினைவுகளை மீட்டிச் சிறப்புரையினைத் தலைவர் கசேந்திரகுமார் பொன்னம்பலமும், அரசியல் ஆய்வாளர் சோதிலிங்கமும் நிகழ்த்தினர்.

தமிழ் தேசிய அரசியலில் மாமனிதர் இரவிராசு அவர்களின் வகிபாகம்!

  யாழ்.தென்மராட்சி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட இரவிராசு 1987ஆம் ஆண்டு கொழும்பு உயர்நீதிமன்றில் சட்டத்தரணியாகப் பதிவு செய்து 1989இல் கொழும்பில் சட்டத்தரணியாகத் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் ‘இரவிராசு கூட்டமைப்பு (Raviraj Associates)’ எனும் சட்ட நிறுவனம் மூலமாக, வன்கொடுமைத் (terrorism) தடைச் சட்டம், நெருக்கடி நிலைச் சட்டம் ஆகியவற்றின் கீழ்க் கைதாகிச் சிறைகளில் வாடிய தமிழ் இளைஞர்களின் விடுதலைக்காக வாதாடினார். மனித உரிமைச் சட்டத்தரணியாகவும் தீவிரமாகப் பணியாற்றினார்.

  1998இல் யாழ். மாநகர முதல்வராகப் பணியாற்றினார். 2001, 2004-களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இரு தடவைகள் வெற்றி பெற்றார்.

  ஐந்து ஆண்டுகள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகள் எண்ணில் அடங்காதவை. எவ்வளவு தீவிர அரசியல் பணிகள் இருந்தாலும் மாதந்தோறும் சாவகச்சேரியில் உள்ள ‘இராசு அக’த்தில் திரளும் மக்களைச் சந்திக்க ஒருபொழுதும் அவர் தவறியதில்லை. (இனப்படுகொலைப்) போரால் பெரும் அழிவுக்கு உள்ளாகி இருந்த தென்மராட்சிப் பகுதியை மீளக் கட்டியெழுப்புவதில் அயராது பணியாற்றினார். துன்பப்படும் மக்களுக்குத் தானே சென்று உதவுவார். முதியோர், தாய்மார்களிடம் அன்பாக இன்னல்களைக் கேட்டறிந்து அதனை உரிய முறையில் சரி செய்வார். கல்விமான்கள், பெரியவர்கள் ஆகியோரின் கருத்துகளையும் செவிமடுத்துச் செயல்படுவார். இப்படிப்பட்ட நற்குணங்களால்தாம் மக்கள் விரும்பும் தலைவராக அவர் திகழ்ந்தார்.

   ஆட்கடத்தல்கள், போரினால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை போன்ற உரிமை மீறல்களைத் துணிச்சலோடு தனியொருவனாகவும் அமைப்பு சார்ந்தும் முன்னெடுத்த மாமனிதர் இவர் ஒருவரே! ஏதுமறியாத் தமிழ் மக்களின் தடுத்து வைப்புக்கான விடுதலை கோரி இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் உள்ள நீதிமன்றங்களுக்குச் சென்று வாதாடினார். அத்தோடு பன்னாட்டு அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அந்தத் தொடர்புகளை இன விடுதலைக்காகப் பயன்படுத்தினார்.

  (இனப்படுகொலைப்) போர்க் காலத்தில் வெளிப்படையாக மனித உரிமை மீறல்கள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில் தான் இறப்பதற்கு முன்பாக, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அவை அலுவலகத்திற்கு முன் தனது எதிர்ப்பினை ஆர்ப்பாட்டத்தின் மூலமாகத் தெரியப்படுத்தி உலக நாடுகளின் கவனத்தையும் இலங்கை இனச்சிக்கலின்பால் ஈர்த்தெடுத்தார்.

  சரளமாக சிங்களம் பேசக்கூடியவராக இருந்த காரணத்தினால் இனச் சிக்கலில் தமிழ் மக்களின் பக்கம் உள்ள நயன்மைகளை(நியாயங்களை) சிங்களத் தொலைக்காட்சி விவாதங்கள் மூலமாகவும், சிங்கள அரசியல் செயல்பாட்டாளர்கள் மூலமாகவும் பகுதிவாரியாக சிங்கள மக்களிடமும் கொண்டு சென்றார். தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்கள் வழியாகப் பன்னாட்டளவிலும் தமிழர் தரப்பு நயன்மைகளை எடுத்துச் சென்றார்.

  ஊழல் அரசியலை முற்றாக வெறுத்தவர் இரவிராசு. மக்களுடன் கூட இருந்து பணியாற்றுவதனைப் பெருவிருப்பாகக் கொண்டவர். இவரைப் போல் ஒரு தலைவர் கிடைக்க மாட்டாரா எனத் தமிழ் மக்கள் ஏங்கித் தவிக்கின்றனர். அவரின் மறைவின் பின், சரியான தமிழ்த் தலைமை இல்லாமல் இன்று வரை தென்மராட்சி மண் தவித்து வருகின்றது.

 44ஆவது வயதில், ஐப்பசி 25, 2041 / நவம்பர், 10, 2006இல் கொழும்பில் உள்ள தனது வீட்டுக்கு அருகில் வைத்துத் தமிழ் அரசியல் கட்சி என்ற பெயரில் இயங்கிய ஆயுதக் குழுவினரால் மாமனிதர் இரவிராசு சுட்டுக் கொல்லப்பட்டார்.

நியூசு ஈ.டி.வி செய்திக்குழுமம்

https://www.facebook.com/NewsETV/

 

 

இ.பு.ஞானப்பிரகாசன்