முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்!

முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த
முதல் பாராட்டுக் கூட்டம்!
நேற்று ஞாயிறு 10.05.2026 காலை 10.00 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு ச.சோ.விசய் முதல்வராகப் பொறுப்பேற்ற நிகழ்வு நடந்ததை அனைவரும் அறிவோம்.
நேற்று அதே நேரம் அவருக்குத் தமிழ்காப்புக் கழகம் சார்பில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதுவே முதல் பாராட்டுக் கூட்டம். அதுவும் தமிழ் அமைப்பு நடத்திய பாராட்டுக் கூட்டம்.
தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையில் இக்கூட்டம் நிகழ்ந்தது.
தேர்தல் கணிப்புகளையும் திணிப்புகளையும் பொய்யாக்கித் தன்னம்பிக்கையால் வெற்றி பெற்றார் எனப் பாராட்டினார்.
மேலும் சிக்கல் எதுவும் வந்தால் முறியடித்து ஐந்தாண்டு காலம் முழுமையாக ஆட்சி நடத்த வாழ்த்தினார்.
குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழி வகுக்காமல் த.வெ.கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கில், முனைவர் புத்தேரி தானப்பன், முனைவர் வி.பொ.தமிழ்ப்பாவை, செல்வி முசிபூர் அமீரா, செல்வி பி.முகில் ஆகியோர் வாழ்த்துப் பா பாடினர்.
நிறைவாக முனைவர் செ.இராசேசுவரி எழுதிய, “பண்பாட்டு நகர்வுகள் – தமிழ்நாட்டில் இருந்து சப்பானுக்கு” என்னும் நூல் குறித்து ஆய்வுரை வழங்கினார்.
தொடக்கத்தில் முனைவர் மா.போ.ஆனந்தி வரவேற்புரையாற்றினார். செல்வி முகிற்செல்வி நன்றி நவின்றார்.
கவியரங்கத்தில் பங்கேற்றோர் மாண்புமிகு முதல்வர் விசய்யின் திறமைகள் குறித்தும் வாக்குறுதிகளைச் சிறப்பாக நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கை குறித்தும் தமிழ், தமிழர் நலன் குறித்தும் சிறப்பாக எடுத்துரைத்தனர்.
– தாய் 11.05.26







மிக்க மகிழ்ச்சி ஐயா! அரை நூற்றாண்டுக்குப் பின் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் வரலாற்றுக்கான முதல் பாராட்டே தமிழுக்காக இடைவிடாது செயலாற்றும் தங்களிடமிருந்து வந்திருப்பது கண்டு மகிழ்கிறேன். தங்களுடைய வாழ்த்தே இந்த அரசைத் தமிழ்நல அரசாகவும் த.வெ.க.வைத் தமிழ்சார் கட்சியாகவும் வளர்த்தெடுக்க உதவட்டும்!
மேலும், இந்நேரத்தில் நானும் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன் ஐயா!
புதிய முதல்வராக விசய் ஆட்சிக்கு வந்துள்ளார். எனவே தமிழ் வளர்ச்சி குறித்தும் இந்தித் திணிப்புக்கு வழிவிடும் முந்தைய அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இத்தனை காலம் நீங்கள் முன்வைத்து வந்த அனைத்துத் தமிழ் நலக் கோரிக்கைகளையும் ஒரே பட்டியலாக, பொருத்தமான காரண ஏரணங்களுடன் தங்களுக்கே உரிய பாணியில் விளக்கி, மாண்புமிகு விசய் அவர்களிடம் நீங்கள் முன்வைத்தால் நல்ல பலன் இருக்கும் எனத் தோன்றுகிறது. ஏனெனில் இவர் புதியவர், இளையவர், துணிவு மிக்கவர், இன்னும் அரசியல் சிக்கல்களில் பெரிதாக ஈடுபடாததால் சலிப்பு மனப்பான்மை ஏதும் இல்லாமல் அதே பழைய குழந்தைத்தனத்தோடு காணப்படுகிறார். எனவே தயவு செய்து நீங்கள் உங்கள் தமிழ் நலக் கோரிக்கைகளையும் இந்தித் திணிப்புக்கு எதிரான கோரிக்கைகளையும் நேரில் சென்று அவரைச் சந்தித்து, கையளித்து, வலியுறுத்தி வர வேண்டுகிறேன் ஐயா!