thangarbachan01

திருச்சிராப்பள்ளியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சன் 15.02.14 அன்று வந்தார்.  அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது–

இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள சென்னை தமிழகத்தின் தலைநகரமாக இருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குச் செல்லும் அனைவரும் 10 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் பயணம் செய்து மிக  அல்லல்பட்டுச் சென்னை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பணச்செலவு, கால  இழப்பு, ஊர்திப் புகையினால் மாசு எனப் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்கள் மேலும் விரிவடைவதால் வேளாண் நிலங்கள் அழிக்கப்படுகின்றன. அங்கு மக்கள் குடியேறி நெருக்கடி அதிகரிப்பதால் நிலத்தடி நீர் மாசுபட்டு மனிதனுக்கு பேரழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எம்ஞ்சிஆர். அன்றே சென்னது போல திருச்சிராப்பள்ளியைத் தமிழகத்தின் தலைநகராக்க வேண்டும்.  அந்தந்தப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அவர்கள் வேறு இடத்துக்கு இடம் பெயராத வகையில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் மேம்படுத்த வேண்டும்.

இந்தியா முழுவதும் இன்று கல்வி பெரிய  வணிகமாக உள்ளது. ஆங்கில வழிப் பள்ளிக்கூடங்களில் மாணவ– மாணவிகள் தமிழில் பேசினால்  தண்டத்தொகை விதிக்கப்படுகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு மனிதனையும் அவனது சிந்தனையை வெளிப்படுத்த மொழி  முதன்மையாக உள்ளது. அனைத்துக் கல்விக் கூடங்களிலும் தமிழ் மொழிக்கு  முதன்மை அளிக்க வேண்டும்.

தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் கூடுதல் சலுகை என்று அரசு அறிவிக்க வேண்டும். அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும், அரசு ஊழியர்கள், அவர்களது குழந்தைகளுக்கு அரசு மருத்துவ மனையில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கட்டாயச் சட்டம் கொண்டு வரவேண்டும்.

தமிழகத்தில் காலை 10 மணி முதலே அரசின்சாராயக் கடைகள் திறந்து வைக்கப்படுவதால் இன்று இளைஞர்கள் பாதை மாறி செல்கிறார்கள். அவர்கள் சிந்திக்கும் திறனற்றவர்களாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் இன்று ஊழல் மலிந்துவிட்டது. நாட்டில்    நாடாளுமன்ற  உறுப்பினர்களில் பாதிக்கு மேல் குற்றவாளிகளாக உள்ளனர். கடுமையான சட்டங்களை இயற்றி குற்றச்செயல்களை தடுத்தால் தான் நாட்டைக் காப்பாற்ற முடியும்.

 இவ்வாறு அவர் கூறினார்.