[ஓடையாகும் பன்றியாறு(வராகநதி)]

[ஓடையாகும் பன்றியாறு(வராகநதி)]

தேனி மாவட்டத்தில் ஆறு ஓடையாகிறது

தேனிமாவட்டத்தில் பெரும்பாலான ஆறுகள் வன்கவர்வினால்(ஆக்கிரமிப்பினால்) ஓடையாகி வருகிறது. தேனி மாவட்டத்தில் மேல்மங்கலம் பகுதியில் பன்றியாறு(வராகநதி) ஓடுகிறது.

இந்தஆறு மேற்குமலைத்தொடர்ச்சியில் உற்பத்தி ஆகிப் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம் வழியாக குள்ளப்புரம் வரை செல்கிறது. இந்த ஆற்றை நம்பி ஏராளமான தென்னந்தோப்புகளும் வயல்களும் உள்ளன. மேலும் மேல்மங்கலம். செயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் ஊராட்சிகள் தங்கள் குடிநீர்த் தேவைக்காக இந்த ஆற்றில் தொட்டி கட்டி அதன் மூலம் நீரை எடுத்துத் தூய்மை செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றன.

அண்மைக்காலமாக பன்றியாற்றின்(வராகநதியின்) இருபுறமும் தோப்புகளும் வயல்வெளிகளும் தனியாரால் வன்னுரிமை கொள்ளப்பட்டு வருகின்றன. இவை தவிர பன்றியாற்றின்(வராகநதியின்) இருபுறமும் செங்கல் தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் செங்கல் தொழிற்சாலைக்குத் தேவையான மணலைப் பன்றியாற்றில் எடுக்கிறார்கள். இதனால் பரந்து விரிந்த ஆறு ஓடையாகக் குறுகி விட்டது.

எனவே, மழைக் காலத்தில் வருகின்ற நீரானது வீணாகிறது. மேலும் ஆங்காங்கே தடுப்புச்சுவர்கள் கட்டியுள்ளதால் தண்ணீர் முழுமையாக குள்ளப்புரம் வரை வரஇயலாமல் போகிறது. இவை தவிர பன்றியாற்றில் (வராகநதியில்) இரவு பகலாக மணல் அள்ளப்படுவதால் ஆங்காங்கே திட்டுகளாகக் காணப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து இப்பகுதியில் வேளாண்தொழில் பாதிப்படைகிறது.

எனவே வருவாய்த்துறையினரும் பொதுப்பணித்துறையினரும் பன்றியாற்றின்(வராகநதியின்) இருபுறமும் உள்ள வன்கவர்வுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

56vaigaianeesu_name