65thittacheri-townpanchayatoffice

  நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சியில் நூலகம் இல்லாததால் அப்பகுதியில் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் படிப்பதற்காகத் தொலைவிடங்களில் உள்ள நூலகங்களுக்குச் சென்று படித்து வருகின்றனர்.

  ஏறத்தாழ 10,000 மக்கள் தொகை கொண்ட திட்டச்சேரி பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நூலகம் இருந்தது. நூலகக் கட்டடம் பாழடைந்ததால் நூலகம் அப்புறப்படுத்தப்பட்டது. இப்பகுதி மக்கள் நூலகம் அமைக்கவேண்டும் எனவும் அதற்காக வருவாய்த்துறைக்குச் சொந்தமான நிலங்களைக் காண்பித்தும் இதுநாள் வரை நூலகம் கட்டப் பேரூராட்சி முன்வரவில்லை.

  திட்டச்சேரிப் பேரூராட்சியில் உள்ள ஏராளமான கவிஞர்கள், இலக்கியவாதிகள், தமிழ்ச்சங்கம் அமைத்து வெளிநாடுகளில் தமிழைப் பரப்பப் பாடுபட்டு வருகிறார்கள். ஆனால் சொந்த ஊரில் நூலகம் இல்லை என்ற குறை உள்ளது.

  நூலகம் அமைப்பதற்குத் தனியார்கள் பலர் தங்கள் சொந்த இடங்களைத் தர முன்வந்தாலும் மாவட்ட நிருவாகமும், பேரூராட்சி நிருவாகமும் நூலகம் கட்ட முன்வரவில்லை. ஒரு நூலகம் திறக்கப்படும்பொழுது பல சிறைச்சாலைகளின் கதவுகள் மூடப்படுகின்றன என்பார்கள்.

  எனவே திட்டச்சேரிப் பேரூராட்சியில் நூலகம் ஒன்றை அமைக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

அரசு விரைந்து ஆவன செய்யுமா?

 vaigai-aneesu65