vandavasi_murukesu_paaraattu

வந்தவாசி எழுத்தாளர் மு.முருகேசுக்கு

நெய்வேலி புத்தகக்காட்சியில்

பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன!

 

     வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் மு.முருகேசுக்கு நெய்வேலி புத்தகக்காட்சியில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன.

  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது. 18-ஆவது ஆண்டு புத்தகக்காட்சி நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி அரங்கில் ஆனி 19, 2046/ சூலை 04, 2015 அன்று தொடங்கியது. வரும் ஆனி 27 /சூலை 12-ஆம் நாள்வரை பத்து நாள்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் நாள்தோறும் ஏதேனும் ஒரு படைப்பிலக்கியத் துறையில் சிறந்து விளங்கும் எழுத்தாளர் ஒருவருக்குப் பாராட்டும், பரிசும் வழங்கப்படுகின்றன.

    புத்தகக்காட்சியின் தொடக்க விழா அன்று தமிழில் குழந்தை இலக்கியத்தில் தொடர்ந்து சிறப்பான முறையில் படைப்புகளை எழுதிவரும் எழுத்தாளர் மு.முருகேசுக்குப் பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டன.. புதுச்சேரி சிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் மரு. சுபாசு சந்திர பாரிசா பாராட்டுச் சான்றிதழையும், உரூபாய் 5 ஆயிரம் பரிசுத் தொகையையும் வழங்கிப் பாராட்டினார். விழாவிற்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் அதிபர் – மேலாண் இயக்குநர் பி.சுரேந்தர் மோகன் தலைமை வகித்தார்.

  எழுத்தாளர் மு.முருகேசு இதுவரை 8 கவிதை நூல்களையும், 6 குறும்பா(ஐக்கூ கவிதை) நூல்களையும், 10 சிறுவர் இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார். ஈரோடு தமிழன்பன் கவிதை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க குழந்தை இலக்கிய விருது, கவிஓவியா விருது முதமலான ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது படைப்புகள் மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் முதலான மொழிகளில் மொழிபெயர்க்கப்ப்பட்டுள்ளன. 5 பல்கலைக் கழக மாணவர்கள் இவரது படைப்புகளை இளமுனைவர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகின்றனர். உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெற்ற புதுவாழ்வுத் திட்ட மாநிலக் கலைக்குழு ஒருங்கிணைப்பாளராகவும், தமிழக அரசின் சமச்சீர்க் கல்விப் பாடத்திட்ட தயாரிப்புக் குழுவிலும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்களைத் தெரிவிக்க :
Murugesh Mu < haiku.mumu@gmail.com >
98 426 37637

தரவு : முதுவை இதாயத்து