தலைப்பு-கண்டியில்தமிழ்மொழிநாள் : thalaippu_ kandiyilthamizhmozhinaal

கண்டியில் ‘தேசியத் தமிழ் மொழி நாள்’!

 தேசியத் தமிழ் மொழி நாள் விழாவைக் கண்டி மாநகரில் கொண்டாடுவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய அளவில் காணப்படும் தமிழ் மொழி மூலமான கல்விக்கூடங்களுக்கிடையில் தமிழ் மொழி தொடர்பான போட்டிகள் வலய மாகாண அளவிலும் தேசிய அளவிலும் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசியத் தமிழ் மொழி நாளும் கண்டி மாநகரில் வெகு கோலாகலமாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தேசியத் தமிழ் மொழி நாள் விழா அத்தோபர் மாதம் இரண்டாம் கிழமையில் (வாரத்தில்) கொண்டாடுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஏற்பாடுகள் குறித்து, கண்டித் தமிழ் வணிகச் சங்கத்தினருக்கும், கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணனுக்கும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கண்டியில் நடைபெற்றது. இதில் கண்டி மாநகரின் வணிகப் புள்ளிகளும் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலின்படி, அத்தோபர் மாதம் நடைபெறும் தேசியத் தமிழ் மொழி நாளில், காலையில் மாபெரும் பண்பாட்டு ஊர்வலம் ஒன்று கண்டி நகரில் நடைபெற உள்ளது. இதில் எல்லா மாகாணங்களையும் சேர்ந்த மாணவர்களின் பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெறுவதுடன் அந்தந்தப் பகுதிகளுக்குரிய பண்பாட்டு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் கலை நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. அதை அடுத்து, உலகளாவிய கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகளும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்நிகழ்வுகளில் இந்தியா உட்பட உலக நாடுகளின் அரசியலாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக, வடக்கு – கிழக்குப் பகுதித் தமிழறிஞர்கள், வட மாகாண முதலமைச்சர், தலைமையமைச்சர் (பிரதமர்), குடியரசுத்தலைவர், அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இலங்கை வரலாற்றில் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டு வரும் தேசியத் தமிழ் மொழி நாள் நிகழ்வில் இதுவே முதல் தடவையாக தேசிய அளவில் கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  கல்வி அமைச்சில் தற்பொழுது கல்வி அமைச்சுப் பதவியை வே.இராதாகிருட்டிணன் அவர்களுக்கு வழங்கியதன் காரணத்தினாலேயே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி நாளை ஒட்டி உலகளாவிய அளவில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெற்று வரும் வேளையில் இலங்கையில் தேசியத் தமிழ் நாள் விழா கல்விக்கூட மட்டத்தில் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

தரவு:பெயர்-பா.திருஞானம் : peyar_paa.thirugnanam02பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar