கவிஞர்முரு கேசிற்குச் செம்பணிச்சிகரம் விருது : nighazhvu_murukesh_paaraattu

கவிஞர் முருகேசு-செம்பணிச்சிகரம்விருது : nigazhvu_sempanichikaram viruthu

கவிஞர் மு.முருகேசுக்குச்

‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது

  வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த இதழாளர் கவிஞர் மு.முருகேசுக்குப் புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது.

    மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 இல் புதுச்சேரியில் நடைபெற்ற இவ்விழாவிற்குப் புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையேற்றார். குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத தலைவர் கலைமாமணி அ.உசேன் அனைவரையும் வரவேற்றார்.

    புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர் வ.சபாபதி (எ) கோதண்டராமன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் குரு.பன்னீர்ச்செல்வம், கவிஞர் மு.முருகேசுக்குச் ‘செம்பணிச் சிகரம்’ எனும் விருதினை வழங்கினார். விழாவில், புதுச்சேரி மாநிலக் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் தி.தியாகராசன், பேராசிரியர் கலைமாமணி மு.சாயபு மரைக்காயர், தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன், கவிஞர் பைரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

     வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் அறிவுரைஞராகவும் இருந்து பல்வேறு சமூகம், இலக்கியம், கல்விப் பணிகளைச்செய்து வரும் கவிஞர் மு.முருகேசின் சமூக, இலக்கியப் பணிகளைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது. இதுவரை 15-க்கும் மேற்பட்ட கவிதை, கட்டுரை, திறனாய்வு நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    இவரது படைப்புகளை இதுவரை 5 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளன. தமிழக அரசின் சமச்சீர்ப் பாடத் திட்டக்குழுவில் இடம்பெற்று, ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடல்களையும் பாடங்களையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புக்கு :

haiku.mumu@gmail.com

– முதுவை இதாயத்து