தலைப்பு-தமிழகப்புலவர்குழுவின் தீர்மானங்கள் : thalaippu_thamizhagapulavarkuzhuvin_theermaanangal

  முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களால் 1958-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழகப் புலவர் குழுவின் 107-ஆவது கூட்டம் பங்குனி 07, 2047 /  மார்ச்சு 20, 2016 அன்று திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டம் – திருவில்லிப்புத்தூர்

தீர்மானம் – 1 :  நன்றியும் பாராட்டும்

        தமிழகப் புலவர் குழுவை அழைத்துச் சிறப்பித்து இந்த 107 -ஆவது கூட்டத்தைச் சிறப்புற அமைத்துத் தந்த கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் முனைவர்.க.சிரீதரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் புலவர் குழு  தெரிவிக்கிறது.

     தமிழக அரசின் பாரதியார் விருது பெற்ற தமிழகப் புலவர் குழுவின் உறுப்பினரும் முல்லைச்சரம் இதழின்ஆசிரியரும் கடற்கரைக் கவியரங்கத்தின் மூலம் பல பெருங்கவிஞர்களை உருவாக்கியவரும் பாவேந்தர் பாரதிதாசனின் அணுக்கத் தொண்டருமான கவிஞர் பொன்னடியான் அவர்களுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தமிழகப் புலவர்; குழு தெரிவிக்கிறது.

  தமிழகப் புலவர் குழுவின் நீண்ட கால உறுப்பினரும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் தலைவரும் தமிழ்ப்பணி இதழின் ஆசிரியருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் 80-ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்குப் பாராட்டி வாழ்த்துகளைத் தமிழகப் புலவர் குழு தெரிவிக்கிறது.

     மத்திய அரசின் சிறந்த எழுத்தாளருக்கான ‘கங்காசரண் சின்கா’ என்ற குடியரசுத் தலைவர் விருதினைச் சென்ற மாதம் பெற்ற  தமிழகப் புலவர் குழுவின் உறுப்பினரான பன்மொழி அறிஞர் த.சி.க.கண்ணன் அவர்களுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தமிழகப் புலவர் குழு தெரிவிக்கிறது.

தீர்மானம் – 2 :  இரங்கல்

 இலங்கையின் ஈழத்தமிழ்ச் செல்வி, தமிழர் தலைவர் திரு அமிர்தலிங்கம் அவர்களின் துணைவியார் திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் மறைவிற்குத் தமிழகப் புலவர் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

 தமிழகப் புலவர் குழுவின் உறுப்பினர் சைவத்திற்கும் தமிழுக்கும் பெருந்தொண்டு புரிpந்த பேராசிரியர் முனைவர் இரா.செல்வகணபதி அவர்களின் மறைவிற்கு இப்புலவர் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

  தமிழகப் புலவர் குழுவின் உறுப்பினரும் மதுரைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்ப்பேராசிரியருமாகிய தமிழண்ணல் அவர்களின் மறைவிற்கு இப்புலவர் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் – 3 :  பொது

     தமிழ் மொழியின் மறை நூலாம் ‘திருக்குறளை’ நம் இந்திய அரசு, தேசிய நூலாக  ஏற்றுப் பெருமை சேர்த்து, இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்பு செய்து திருக்குறளைப் பரப்ப வேண்டும் என்று தமிழகப் புலவர் குழு வேண்டுகோள் விடுக்கிறது.

    தொன்மைச் சிறப்பு மிக்க தமிழகப் புலவர் குழுக் கூட்டங்களை நடத்த மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் நிதி உதவியுடன் இந்தியப் பல்கலைக்கழகங்களில் பிற மொழி அறிஞர்களுடன் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

     உரிய தலைமையின்றியும் செயல்பட வழி காட்டுதல் இல்லாமலும் தடுமாறும் செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம், தமிழகப் புலவர் குழு போன்ற தமிழ் அமைப்புக்களின் வழிகாட்டுதல்களைப் பெற்றுச் சிறப்பாகச் செயல்பட  மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் எனத் தமிழகப் புலவர் குழு இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

     தமிழ்நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் விழாக்கள் வேள்விகள் சமயச் சடங்குகள் தமிழ் மொழியில் நடைபெற உரிய வழிவகை காணவேண்டும்  என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

  பொழுதுபோக்கு இதழ்களிலும் செய்தி ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும்  தமிழ்ச் சொற்கள் தவிர்த்தலும் பிற மொழிச் சொற்களைத் திணித்தலும் தொடர்வதைத்  தமிழகப் புலவர் குழு கண்டிக்கிறது. மொழி வளர்ச்சிக்கு ஆதாரமான இந்த ஊடகங்களும் இதழ்களும் தங்கள் ‘மொழிப் பொறுப்பை’ உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தமிழகப் புலவர் குழு வேண்டுகோள் விடுக்கிறது.

     தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களிலும் ‘தமிழ்’ கட்டாயப் பாடமாக ஆக்கப் பெற வேண்டும். மேற்படிப்புக்கும் பிற நுழைவுத் தேர்வுகளுக்கும் தமிழ்ப் பாட மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்குத் தமிழகப் புலவர் குழு பாpந்துரை செய்கிறது.

     திருவள்ளுவர் திருநாளன்று தமிழறிஞர்கள் பெயரால் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாக மறைமலை அடிகளாரின் பெயரிலும் விருது ஒன்றை நிறுவித் தனித் தமிழுக்குத் தொண்டாற்றி வரும் தக்க தமிழ் அறிஞருக்கு வழங்கப்பட வேண்டும.;

தீர்மானம் – 4  : நிருவாகம்

  கரந்தைத் தமிழ்ச்சங்கச்  செயலர்  திரு. ச. இராமநாதன்  அவர்கள் ஆறு ஆண்டுகளாகத் தமிழ்ப்புலவர்குழுவின் தலைவராகச் சிறப்பாகச் செயலாற்றியதை இப்புலவர் குழு பாராட்டுகிறது.  அவர் உடல் நலம் கருதி  அளித்த  பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  அவர் நலமும் பொலிவும் பெற வாழ்த்துகிறது.

  தமிழகப் புலவர் குழுவின்  புதியதலைவராகச்  சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்களை இன்றைய செயற்குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளது.

  தமிழகப்புலவர் குழுவின் புதிய செயலாளராக  முனைவர்  மறைமலை இலக்குவனார் அவர்களை இந்தச்செயற்குழு  ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறது.  முத்தமிழ்க் காவலர் வழிகாட்டுதலின் படி  இரண்டு முறைத் தமிழகப்புலவர் குழுவின் செயலாளராகப்பணியாற்றிய  பேராசிரியர் இலக்குவனார் அவர்களை நன்றிப்பெருக்குடன் நினைவு கூர்ந்து அன்னாரின்  திருமகன் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் செயலாளர் பணிக்காகத்  தேர்வு செய்யப்படுகிறார்..

இக்குழுவில் பிற பொறுப்பாளர்களும்   பொறுப்பாண்மையரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழகப் புலவர் குழுவுக்காக,

மறைமலை இலக்குவனார்

செயலாளர்

தலைப்பு,தமிழகப்புலவர்குழு,தீர்மானங்கள்02 : thalaippu_pulavarkuzhutheermaanangal02