si.paa.athithanaar_athithanar

athithanar-viruthu01

  90 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழனுக்குச் சிறுதொழில், தன்முன்னேற்றம்பற்றிச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் என்று உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் புகழாரம் சூட்டினார்.

  சி.பா.ஆதித்தனாரின் 111-ஆவது பிறந்தநாள் இலக்கியப் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் ஆற்றிய தலைமையுரை வருமாறு:-

தமிழனின் அடையாளம்

    73 ஆண்டுகளாகத் தமிழர்களின் அடையாளமாகவும், பத்திரிகைத் துறையில் அருந்திறல் புரிந்தும் ‘தினத்தந்தி’ வந்து கொண்டிருக்கிறது. ஒரு நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால் பொதுவாக அதற்கு நல்ல நேரம் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.

  நான் கூடுதலாக என்ன நினைக்கிறேன் என்றால், ஒரு தனி மனிதனோ, நிறுவனமோ வெற்றி பெற வேண்டுமானால் அது குறித்த நேரமும் இருக்க வேண்டும். அதுபோல் 6 மணிக்கு விழா என்றால், அந்த நேரத்தில் விழா மேடையின் திரை விலகி, தமிழ் விழா ஒன்று குறித்த நேரத்தில் நடக்கிறது என்பதே மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தி. எனவே குறித்த நேரத்தில் விழா நிகழ்ச்சியை முடிப்பதும் விழாத்தலைவராக உள்ள எனது கடமை.

அடுத்த பிறவியிலும்

  அடுத்த பிறவியிலேயும் பத்திரிகையாளராகவே பிறக்க ஆசைப்படுகிறேன் என்று மரணத்தின் வாயிலில் ஒருவரால் சொல்ல முடியுமா? என்றால் அது சி.பா.ஆதித்தனாராக மட்டும்தான் இருக்க முடியும்.

  நான் வழக்குரைஞராக இருந்தபோது எனது அருமை நண்பர் எழுத்தாளர் பின்னலூர் மு.விவேகானந்தன் என்பவர், ‘வழக்கறிஞர்கள் வளர்த்த தமிழ்’ என்ற ஒரு நூலை எழுதினார். நண்பன் என்ற ஒரே காரணத்தினால் அதற்கு அணிந்துரை வழங்க என்னைப் பணித்தார். அந்த நூல் 2003- ஆம் ஆண்டு திசம்பரில் வெளிவந்தது.

எனது அணிந்துரை

  தமிழை வளர்க்க பாடுபட்ட 33 வழக்கறிஞர்கள் பற்றியும், அவர்களது வாழ்க்கைக் குறிப்புகளும், சுவையான நிகழ்வுகளும் அந்த நூலில் இருந்தன. அதிலே 25-ஆவது தலைப்பு வழக்கறிஞர்(பாரிசுடர்) சி.பா.ஆதித்தனார்பற்றியதாகும். அந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியபோது ஒரு செய்தியைச் சொல்லியிருந்தேன்.

  நான் நீதியரசர் ஆவேன் என்றோ, இந்த விழாவுக்குத் தலைமை தாங்குவேன் என்பதையோ அப்போது யாரும் எண்ணியிருக்க முடியாது. அப்படி யாரும் எண்ணியிருந்தாலும் அது நடந்திருக்குமா என்பதும் தெரியாது. அணிந்துரையில் நான் சொல்லியிருந்தது, “படிப்பறிவு மிக்கோரின் பள்ளியறையில் பவனி வந்துகொண்டிருந்த பத்திரிக்கை துறையைப் பட்டிதொட்டிகளுக்கும் கொண்டு சென்ற வழக்குரைஞர் சி.பா.ஆதித்தனார்” என்பதாகும்.

தமிழனின் தன்முன்னேற்றம்

  இன்று தன்முன்னேற்றத்தைப் பற்றியும், தன்தொழில் பற்றியும் பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் 1923, 1924, 1925-ஆம் ஆண்டுகளில், அஃதாவது ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்னால், “தீக்குச்சி செய்வது எப்படி?, மெழுகுவத்தி செய்வது எப்படி?, சோப்பு செய்வது எப்படி?” என்றெல்லாம் சிறுதொழில்களை மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காகவ் சின்னச்சின்ன புத்தகங்களை எழுதித் தனது அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்ட பெருமகனார் அவர்.

  இலண்டனில் வழக்குரைஞர்(பாரிசுடர்) பட்டம் படிக்கிறபோது, அங்கிருந்தபடியே சுதேசமித்திரனுக்குச் செய்திக் கட்டுரைகளைச் சி.பா.ஆதித்தனார் எழுதிவந்தார். அதுமட்டுமல்ல தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற பத்திரிகைகளுக்கும் இலண்டனில் படிக்கும்போதே கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

  அவையெல்லாம் தொகுத்து நூலாக வெளியிடப்பட்டதா என்பது தெரியவில்லை. அப்படியிருந்தால் அவை பரவச் செய்ய வேண்டும்.

சட்டப்பேரவை விதிகளின் தமிழாக்கம்

  சட்டப்பேரவை விதிமுறைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டும்தான் இருந்தன. அவற்றை, ‘தமிழ்நாட்டுச் சட்டப்பேரவை நடைமுறை விதிகள்’ என்று தமிழாக்கம் செய்த பெருமையும் அவரையே சாரும். அந்த மொழியாக்க நூலுக்கு பேரறிஞர் அண்ணா அணிந்துரை அளித்தார்.

  அதில், “நீண்ட நாட்களாக நிலவி வந்த குறையினைக் களைந்தெறியும் முறையில் கிடைத்த இந்தத் தமிழாக்கம் தந்துள்ள சி.பா.ஆதித்தனாருக்குத் தமிழ்நாடு பெரிதும் கடமைப்பட்டுள்ளது” என்று அண்ணா குறிப்பிட்டார்.

இந்தியாவில் 9- ஆவது இடம்

  73 ஆண்டுகளைக் கடந்தும் 2014- ஆம் ஆண்டு சூன் மாதம் “ஆடிட் பீரோ ஆப் பேப்பர்ஸ்” என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, இந்தியாவில் உள்ள நாளேடுகளிலே 9- ஆவது இடத்தைப் பிடித்திருக்கிற பத்திரிகை தினத்தந்தியாகும். நாள்தோறும் ஏறத்தாழ 16.78இலட்சம் படிகள் விற்கப்படுகின்றன.

  பத்திரிகைத் துறையில் நமக்குத் தெரியாத கணக்கு ஒன்று உண்டு. ஆனால் அது புரிந்துகொள்ளக்கூடிய கணக்கு. சில பத்திரிகைகளைப் பொறுத்தவரை அதை வாங்குகிறவர்கள்கூடப் படிக்க மாட்டார்கள். சில பத்திரிகையை வாங்கிய காரணத்துக்காக வாங்கியவர் மட்டுமே படிப்பார். சில பத்திரிகையை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் படிப்பார்கள்.

  16.78இலட்சம் படிகளை வாங்கிக் குறைந்தது 10 பேராவது ஒரு குடும்பத்தில் படிக்கிற ஒரே பத்திரிகை தினத்தந்திதான். இதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

  அப்படிப்பட்ட தினத்தந்தியை நிறுவிய மூத்த தமிழறிஞர் விருதை வா.மு.சேதுராமனுக்கும், சிறந்த இலக்கியத்துக்கான பரிசைத் தங்கர்பச்சானுக்கும் வழங்குவதில் நான் பெருமை அடைகிறேன்.

மீசை பற்றிய கவி

  இந்த இரண்டு பேர் பற்றி ஒரு குறிப்பை மட்டும் சொல்கிறேன். வா.மு.சேதுராமன்பற்றிக் கவியரசு கண்ணதாசன் ஒரு கவிதை எழுதினார். “நுண்ணிய மதியே செல்வம், நூலறிவு ஒன்றே தெய்வம், எண்ணிய முடிதல் தர்மம், இதயத்தின் உயர்வே வீரம், கண்ணெனும் தமிழே வாழ்க்கை, கவிஞராம் சேதுராமன் நண்ணிய பெருமை ஈடே, நாளெல்லாம் உயர்ந்து வாழ்க” என்று அதில் எழுதியுள்ளார்.

கண்ணதாசனுக்கே உரிய வழக்கமான பாணியில் கவிதை எழுதியிருந்தால் இவரது மீசையைப் பற்றியும் எழுதியிருக்க வேண்டும். ஒருவேளை அப்படி எழுதியதைத் தணிிக்கை செய்து பதிப்பிக்காமல் விட்டுவிட்டார்களோ தெரியவில்லை.

தங்கர்பச்சானின் ஆதங்கம்

  தங்கர்பச்சானின் கதைகளின் நூலில் உள்ள இரண்டு, மூன்று கதைகளைப் படித்துப் பார்த்தேன். நூலின் முன்னுரைக்கு மாற்றாகப் பகிர்தல் என்று சொல்லி வெளியிட்டிருக்கிறார். அதில் தனது ஆதங்கத்தைத் தங்கர்பச்சான் சொல்லியிருக்கிறார். அந்த ஆதங்கம் என்ன?

  தனது பகிர்தலில் அவர், “ஒரு இலட்சம் பேர் வீட்டின் நடுமுற்றத்தில் கொட்டும் குப்பைகளை ஒருவன் மட்டும் தூய்மைப்படுத்துவது என்பது நடக்கக்கூடிய செயலா? அப்படித்தான் இலக்கியத்திலும் சரி, குப்பைகளைக் கொட்டுபவர்கள் மிக அதிகமாகவும், தூய்மைப்படுத்துபவர்கள் மிகக் குறைவாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் என் போன்றவர்களின் படைப்புகள் இனம் கண்டு கொள்ளப்படாமலேயே போய்விடுகின்றன” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.

கலைவாணியின் பரிசு

 அந்த ஆதங்கத்தை என்று அவர் எழுதினாரோ அன்றே அவரைப் பார்த்து கலைவாணி சிரித்தாள். அவருக்கு இந்த ஆண்டு இலக்கிய பரிசு கிடைத்துவிட்டது.

வா.மு.சேதுராமனுக்கும், தங்கர்பச்சானுக்கும் பரிசுகளை வழங்கியிருக்கும் தினத்தந்தியை பாராட்டுகிறேன்.

இவ்வாறு நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் பேசினார்.

logo-muthirai-dinathanthi