தமிழ்க் குறும்பாக்கள் புதிய உயரங்களைத் தொட்டுள்ளன – கவிஞர் மு.முருகேசு
தமிழ்க் குறும்பாக்கள் புதிய உயரங்களைத் தொட்டுள்ளன
– கவிஞர் மு.முருகேசு
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்(காஞ்சி மாவட்டம்) சார்பில், கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய குறும்பா(ஐக்கூ) நூல் வெளியீட்டு விழா செங்கற்பட்டிலுள்ள சைலா அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்குக் கலை இலக்கியப் பெருமன்றம் காஞ்சி மாவட்டத் தலைவர் ஓவியக்கவி நா. வீரமணி தலைமை தாங்கினார். கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய ‘கூடிழந்த பறவையின் குரல்’ எனும் குறும்பா நூலை மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா வெளியிட்டார். இதழாளர் கவிஞ்ர் மு.முருகேசு பெற்றுக்கொண்டார்.
நூலைப் பெற்றுக்கொண்ட கவிஞர் மு.முருகேசு பேசும்போது, “மாக்கவி பாரதி 1916-ஆம் ஆண்டு எழுதிய சிறு கட்டுரை ஒன்றின் வழியாகத் தமிழுக்கு அறிமுகமான சப்பானியக் குறும்பாக்கள் (ஐக்கூ), இன்றைக்குத் தமிழில் 500-க்கும் மேற்பட்ட நூல்களாக வெளிவந்துள்ளன. இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிகமான குறும்பா(ஐக்கூ) நூல்கள் வெளியாகியுள்ளன.
புதிதாகக் கவிதை எழுதும் இளைய கவிஞர்களைக் கவரும் கவிதை வடிவமாக மூன்று வரி குறும்பாக்கள் உள்ளன. தமிழில் குறும்பாக்கள் ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள், குறும்பா ஒட்டி,குறும்பாக் குறும்படம் எனப் பலவகையான செயல்பாடுகள் நடைபெற்றுள்ளன. சிறந்த குறும்பா நூல்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன.
தமிழ் குறும்பாக்களில் சமுதாயச் சிந்தனைகள் மிகுதியாகக் கையாளப்படுகின்றன. மேலும், இதுவரை தமிழ்க் கவிதையில் பதிவாகாத பல செய்திகளையும் பதிவு செய்யும் வடிவமாக குறும்பாக்கள் திகழ்கின்றன. ஆசிரியப் பயிற்றுநராகக் கல்விப் பணியாற்றி வரும் சா.கா.பாரதிராசாவின் குறும்பாக்கள் சமூக அநீதிகளுக்கு எதிரான தனது கோபத்தைக் கூராகப் பதிவு செய்துள்ளன. தமிழ்க் குறும்பாக்கள் செறிவான வடிவத்தாலும், கவித்துவ அழகாலும் புதிய உயரங்களைத் தொட்டுள்ளன. அதில், பாரதிராசாவின் கவிதைகளுக்கும் இடமுண்டு” என்று குறிப்பிட்டார்.
விழாவில், செங்கை கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் கே. ஏகாம்பரம், மேனாள் அரிமாச் சங்க மாவட்ட ஆளுநர் முருகப்பா, ’கைத்தடி’ ஆசிரியர் மு.சி.அறிவழகன், தலைமையாசிரியர் அசோகன், புலவர் சு. பழனிச்சாமி, கவிஞர் ஆ.கிருட்டிணன், ‘லிட்டில் சாக்கி’ பள்ளிக் குழுமத் தலைவர் சோசுவா சாம் தேனி, கவிஞர் பரிமளம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சூலியத்து, கவிஞர் ப.குணா, தலைமையாசிரியர் சீனி.சந்திரசேகரன், கவிஞர் கவிமுகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில், குண்ணவாக்கம் ஊ.ஒ.தொ.பள்ளிக்குப் பேழை ஒன்றும், பட்டிரவாக்கம், கொண்டமங்கலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் திருக்குறள் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
பரனூர் வில்லியம்பாக்கம் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதிகளும் வழங்கப்பட்டன. புலிப்பாக்கம் பள்ளி மாணவர் நிசாந்து சிறப்பிக்கப்பட்டார்.
நிகழ்வைக் கவிஞர் யாழன், தமிழ்மதி தொகுத்து வழங்கினர்.
கவிஞர் சா.கா.பாரதிராசா ஏற்புரையாற்றினார்.
பா.தமிழ்வேந்தன் நன்றி கூறினார்.
Leave a Reply