நியூயார்க்குத் தமிழ்ச் சங்கத் தமிழர் திருநாள்
நியூயார்க்குத் தமிழ்ச் சங்கம் 2014 ஆண்டிற்கான தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சனவரி 25 அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. விழாவிற்கு வந்திருந்தவர்களைச் சங்கச் செயலர் தேவராசு விசயகுமார் பொங்கல் பண்டிகையின் சிறப்புகளைக் கூறி வரவேற்றார். விழாவில் நான்கு அகவைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையான இசை, நடனம், ஆட்டம் பாட்டம் முதலியவற்றைப் படைத்து அரங்கத்தில் இருந்த ஏறத்தாழ 400 பேர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தனர். குறிப்பாகச் “செம்மொழியான தமிழ் மொழியாம்” என்ற பாடலுக்கு ஆடிய சிறார்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக ஆடி அனைவரது அன்பையும் பெற்றனர். இந்தப் பாட்டினில் இடம் பெற்ற தமிழ் நாட்டின் பொய்க்கால் குதிரை முதலான நாட்டுப்புறக் கலைகளும் வள்ளுவர், கம்பன், பாரதி போன்று தோன்றிய குழந்தைகளும் தமிழ் மொழியின் சிறப்புகளைப் பறைசாற்றினர். பின்னலாட்டம், பரதநாட்டியம், குழுப்பாட்டு, வாய்ப்பாட்டு, திரைப் பாட்டு என்று பல்சுவை நிகழ்ச்சியாக பொங்கல் விழா அமைந்து இருந்தது. விழாவின் இறுதியில் நியூயார்க்குத் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கிய எம்.வி.பி., என்னும் இசைக் குழு “ஊதா கலரு ரிப்பன்“ பாடலைப் பாடிக் கூட்டத்தினரை அகவை வேறுபாடின்றி ஆட்டம் போட வைத்தனர். வனசா பார்த்தசாரதி மிக அருமையாகப் பொங்கல் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொடுத்திருந்தார். பொங்கல் விழாவின் ஒரு பகுதியாகத் தேவராசு விசயகுமாரைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட புதிய பொறுப்புக் குழு பொறுப்பு ஏற்றுக்கொண்டது. விழாவின் இறுதியில் புதிய செயலாளரான இராம்மோகன் நன்றி கூறினார். அனைவருக்கும் சக்கரை பொங்கலுடன் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டு விழா இனிதே நிறைவு அடைந்தது.
– தேவராசு விசயகுமார்
Leave a Reply