புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், சித்திரை 12, 2046 / 25.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

  தமிழர்தம் வாழ்வில் பல்வேறு நிலைகளிலும் சமக்கிருதம் நுழைந்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருவது குறித்தும், அதை அடையாளம்கண்டு தகர்ப்பதன் மூலமே தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டைக் காத்து, தன்மதிப்பு வாழ்வாக நல வாழ்வாக வாழ முடியும் என்று விளக்குகின்ற வகையிலும் அறிஞர்பெருமக்களின் உரைகள் அமைந்தன. சமக்கிருதத்திற்கு எதிராகப் பல்வேறு காலக்கட்டங்களில் களம் கண்டு தமிழர்தம் மீட்சிக்காகப் பாடுபட்ட பெருமக்களின் படங்களைத் திறந்து வைத்து அவர்களின் தொண்டுக்கு நன்றி காட்டும் விதத்திலும், மேன்மேலும் அந்தப் பணிகள் முடுக்கிவிடப்படவேண்டியதன்   தேவை குறித்தும் அனைவரும் ஆரிய மொழியின் ஆதிக்கத்தை உணர்ந்து அதை முழுமையாக எதிர்த்து ஒழிப்பதன் வாயிலாகத் தமிழன் தன்மானமுள்ள தமிழனாகத் திகழ முடியும் என்றும் பல்வேறு சான்றுகளுடன் அறிஞர் பெருமக்களின் உரை அமைந்திருந்தது என்றால் மிகையில்லை.

  சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்கின் முதல் அமர்வாக அரங்கம் ஒன்றில் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. பேராசிரியர் ப.காளிமுத்து தொடக்கவுரை ஆற்றினர். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் வரவேற்று உரையாற்றினார். சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக மொழி இலக்கியம் என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘கவிதை’ என்கிற தலைப்பில் முனைவர் மறைமலை இலக்குவனார், ‘புனை கதை’ என்கிற தலைப்பில் எழுத்தாளர் தமிழ்மகன், ‘எழுத்தும் ஒலிபெயர்ப்பும்’   என்கிற தலைப்பில் இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோர் உரை யாற்றினார்கள்.

    நாவலர் சோமசுந்தர பாரதியார் படத்தினைத் திறந்துவைத்துப் பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன் பேசினார்.

  ‘நுண்கலைகளில் நாட்டுப்புறப் பாடல்கள்’ தலைப்பில் பேராசிரியர் மு.இளங்கோவன் பேசினார். தொடர்ந்து படத் திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. பேராசிரியர் முனைவர் ந.க. மங்கள முருகேசன், மனோன்மணீயம் பெ.சுந்தரனார் படத்தையும் புலவர் வெற்றியழகன் இராவண காவியம் புலவர் குழந்தையின் படத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.

 அரங்கம் இரண்டில்   சமக்கிருத ஆதிக்க எதிர்ப்பு கருத்தரங்கு நடைபெற்றது. ‘திரைப்படம்’ குறித்து இதழாளர் சுப.குணராசன், ‘தொலைக் காட்சிகள்’ குறித்து இதழாளர் கோவி.லெனின், ‘நாளிதழ், பருவ இதழ்’ குறித்து முனைவர் ஏ. இராசசேகர் உரையாற்றினார்கள்.

 அறிஞர் அண்ணாவின் படத்தை முனைவர் பெ.செகதீசன் திறந்து வைத்து உரையாற்றினார்.

 ‘வரலாறு’ என்கிற தலைப்பிலான அமர்வில் பேராசிரியர் அருணன் ‘கல்வி’ குறித்தும்   பேராசிரியர் கருணானந்தம்   ‘வரலாறு’ குறித்தும் உரையாற்றினார்கள்.

   குயில்மொழி குழு வினரின் நாட்டிய நிகழ்ச்சி பொது அரங்க நிகழ்வாக நடைபெற்றது. ‘வெண்ணிலாவும் வானும் போல’, ‘வளமார் எமது திராவிட நாடு வாழ்கவே’, ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து’, ‘புதியதோர் உலகு செய் வோம்’ முதலான பாரதிதாசன் பாடல்களுக்கு எழுச்சிகரமான நாட்டியத்தை ஆடினார்கள். குயில் மொழி, பிரியதர்சினி, அமிர்தவாகினி ஆகியோர் இணைந்து நடனமாடினர்.

 பெரியார் களம் இறைவி வரவேற்றார்.

  பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.இறையன், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் ஆகியோரின் படங்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார். பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா.நன்னன் தந்தை பெரியார் படத்தைத் திறந்துவைத்துத் தலைமையுரை ஆற்றினார்.

 மா.நன்னன் உரை

 பேராசிரியர் மா.நன்னன் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது:

சமக்கிருத ஆதிக்கம் தமிழில் எப்போது ஏற்பட்டது என்பதைப்பற்றி எல்லாம் பலவேறு கருத்துகள் இருக்கின்றன.

ஒரு காலத்திலே தமிழ் அல்லது திராவிடப்பண்பு தனியாக இருந்தது. ஆரியம் அதனுடன் பின்னர் கலந்தது. இலக்கணங்களிலேயே ஊடுருவிவிட்டது. விதை நெல்லிலேயே அந்துப்பூச்சி போல் ஊடுருவிவிட்டது. அதுபோல அரித்துவிட்டது.

 எழுத்துகளிலேயே சாதியைக் கொண்டுவந்து, இது பார்ப்பார எழுத்து, பறையர் எழுத்து, சக்கிலியர் எழுத்து என்று வைத்து விட்டார்கள். பாட்டு என்றால், பார்ப்பாரப் பாட்டு. சக்கிலியர் பாட்டு என்று பிரித்து விட்டார்கள். அமுதம், நஞ்சு எழுத்து, அறம் பாடுவதற்கு ஒன்று என்று ஆக்கி விட்டார்கள்.

 இந்த மொழிக் கலப்புக்கு முன்னால், அறிவியல் முறையிலே தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். வாழ்வியலைப்பற்றி சொல்லுகிற பொருளதிகாரத்திலும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், அந்தப்போக்கை மாற்றிப், பவணந்தி கொஞ்சம் விளையாடினார். அப்படி நிறைய கலந்து விட்டார்கள்.

   ஒரு மொழியின் இயல்பே அழிந்துவிடும் போல் இருக்கிறது. சங்க இலக்கியத்துக்குப் பிறகு இலக்கியம் இருந்தது. இலக்கியம் என்று பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது? சங்க இலக்கியத்தையொட்டி மணிமேகலை, சிலப்பதிகாரம் வந்தது. இளங்கோவடிகள் கொஞ்சம் கோடிட்டுச் சமயத்தைக் கலந்து கொஞ்சம் குழப்பினார். சாத்தனார் முழுக்கமுழுக்க குழப்பியே தீர்த்துவிட்டார். கருத்துப்புரட்சியை கேவலமாக்கி விட்டார். யாரோ ஒருத்திக்குக் குழந்தை பிறந்ததாம், காட்டிலே போட்டுவிட்டாளாம், பசு மாடு வந்து பால் கொடுத்ததாம். அந்தக் குழந்தை ஆபுத்திரன் என்றான். அந்தக் குழந்தை பிச்சை எடுத்தபோது, பார்ப்பனருக்குப் பிறக்காத குழந்தை என்று பார்ப்பனர்கள் கல்லைப் போட்டார்களாம். இப்படி எல்லாம் காட்டினார்கள். ஆனாலும்கூட அதிலே இலக்கியத் தன்மை அற்றுப்போய்விட்டது.

   அந்தாதிகள், பிள்ளைத் தமிழ், உலா என்று எழுதுகிறான். உலாபோல மானக்கேடானது கிடையாது. ஆரியத்தால் தமிழ் நாசமாகிவிட்டது. அதனை ஆராய்வதைவிட அதை அகற்ற வேண்டும் அது தான் நம்முடைய வேலை. மறைமலையடிகள் காலத்திலே இருந்து நம் ஐயா காலத்திலிருந்து பெயர்கள் தமிழில் கொண்டுவந்தோம். இப்போது அத் துணையும் போயிற்றே!

  இப்போதுள்ள குழந்தைகட்குப் பெயர் வைக்கிறார்கள்; அதன்படி, தமிழில் பெயர் வைப்பது கிடையாது; ஒரு பெயர்கூட தமிழில் இருக்காது.

  ஒரு நூறாண்டு காலம் மானம் மீட்புக்கு பாடு பட்டுவந்தது தமிழியக்கம். ஆனால், தமிழ்ச்சமூகம் இன்றைக்கு நாசமாய்ப் போய்விட்டது

 இவ்வாறு பேராசிரியர் மா.நன்னன் உரையாற்றினார்கள்.

 சிங்கப்பூர் பேராசிரியர் சுப.திண்ணப்பன், மறைமலையடிகளார் படத்தை திறந்து வைத்து உரை யாற்றினார்.

 பங்கேற்றவர்கள்: திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராசு, மாநில மாணவரணிச் செயலர் பிரின்சு என்னரெசு பெரியார், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், திராவிட இயக்க ஆய்வாளர் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, மேனாள் மாநகரத்தலைவர் சா.கணேசன், முத்துக்கிருட்டிணன், வட மாவட்டங்களின் அமைப்புச் செயலர் வெ.ஞான சேகரன், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா. இரத்தினசாமி, மண்டலச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், சென்னை மண்டல இளைஞரணிச் செயலர் தமிழ் சாக்ரட்டீசு, சென்னை மண்டல மாணவரணிச் செயலர் பா.மணியம்மை, தாம்பரம் மாவட்டத்தலைவர் முத்தையன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், பழ. சேரலாதன், வழக்குரைஞர்கள் ந.விவேகானந்தன், அருள் மொழி, சைதைத் தென்றல், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலர் சத்தியநாராயணசிங்கு, பொருளாளர் மனோகரன், துணைச் செயலாளர் சேரன், சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், வெற்றிச்செல்வி, தூத்துக்குடி பெரியாரடியான், மயிலை குமார், இசையின்பன், பசும்பொன் முதலான பலரும் பங்கேற்றனர்.

வழக்குரைஞர் வீரமர்த்தினி இணைப்புரை வழங்கினார்.

 முதல் நாள் நிகழ்ச்சிகளின் நிறைவாக வட சென்னை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கோவி. கோபால் நன்றி கூறினார்.

– சிறப்புச் செய்தியாளர், விடுதலை