mody01

   பா.ச.க.வின் தலைமையாளர் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட குசராத்து முதல்வர்  நரேந்திரர்  பாராட்டப்பட  வேண்டியவர். தேர்தல் வெற்றிக்காகக்கூடப்  போலியான வாக்குறுதி தராதவர் என்றால் அவரைப் பாராட்டத்தானே வேண்டும்?

  வேறு வகையில் என்றால் அரசியல்வாதி என்ற முறையில் பொய்யான வாக்குறுதிகள்  தருவதற்குத் தயங்க மாட்டார். ஆசனால், தமிழினம் தொடர்பானதாயிற்றே! எனவே, வி்ழிப்பாக வண்டலூரில் பேசியுள்ளார்.

  தொடக்கத்தில் தமிழன்னைக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழில் வணக்கம் தெரிவித்தது எல்லா அரசியல்வாதிகளும் செய்யும் செயல்தான். இருப்பினும் தமிழ்மண்ணில் இருந்து கொண்டு தமிழர்களிடம் வாக்கு கேட்கின்றோம்! தமிழினத்திற்காகவும் தமிழ் ஈழத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் வைக்கோ  தலைமையிலான கட்சியுடன் இணைந்து  போட்டியிடப் போகிறோம் என்பதற்காகத் தம் கொள்கைக்கு மாறாகத் தமிழினத்திற்குச் சார்பாக ஒரு சொல்கூடச் சொல்லாத அவர் நேர்மையைப் பாராட்ட வேண்டும்.

  தமிழ் மீனவர்கள் பற்றி மட்டும் ஒன்று கூறினார். என்னவென்று?  “தமிழக மீனவர்கள் இலங்கையில் உள்ள சிறைகளில் அவதிப்படுகிறார்கள்; குசராத்து மீனவர்கள் பாகிசுதான் சிறையில் அவதிப்படுகிறார்கள் என்று. குசராத்து மீனவர்கள் பாகிசுதானால் தளையிடப்பட்டாலும் பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால், தமிழக மீனவர்கள் 800 பேருக்கும் மேலாகச் சுட்டுத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர் சித்திரவதைக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களின் படகுகள், வலைகள் அழிக்கப்பட்டுள்ளன. இக்கொடுந்துயரத்துடன் குசராத்து மீனவர்கள் நிலையை ஒப்பிட்டு, ‘நீங்கள் மட்டும்தான் அல்லலுறுவதாக எண்ணாதீர்கள் என்பதுபோல் பேசியுள்ளார். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது குறித்து அவருக்கு ஏன் கவலை வரப்போகிறது? பொதுவான போக்கில் கூறுவதன் மூலம் தமிழக ஏமாளிகள் அவர்மீது நம்பிக்கை வைப்பார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கும்போது ஏன் இவர்களைப்பற்றிப் பேச வேண்டும்?

 

  தமிழ் ஈழத்தில் நடைபெறும் இனப்படு கொலை பற்றி மறந்தும் வாய் திறக்கவில்லை. வைக்கோதான் தெரிவித்து விட்டாரே! கொள்கைவேறு! கூட்டணி வேறு! ஆதலின் வற்புறுத்த மாட்டோம் என்று. கொள்கையை வற்புறுத்த இயலாத பொழுது இவர்கள் ஆட்சிக்கு வந்து என்ன செய்திட இயலும்போர்க்குற்றம் என்று கொலைகாரக்கூட்டாளிகள் மழுப்புவார்களே! அப்படி மழுப்பக்கூட மனம் வராத நேர்மையாளர் வாழ்க!

 

  வண்டலூர் கூட்டத்தில்  ம.தி.மு.க. சார்பாக மல்லை சத்யா பேசி உள்ளார். அவருக்கும் வாய்ப்பூட்டு போட்டதால் அதுபற்றிய வேண்டுகோள் எதுவும் வைக்கவில்லை. இனப்படு கொலைக்குக் காரணமான  காங்கிரசு என்றுகூடச் சொல்லவில்லை. என்ன செய்வது? எவ்வளவுதான்  மக்களுக்காகக் குரல் கொடுத்து உழைத்தாலும் வாக்காள மக்கள் தேர்தலில் புறக்கணிக்கும் பொழுது  செல்வாக்குள்ள யாரையாவது பற்றித்தானே ஆகவேண்டி உள்ளது!

 

  இதுதான் வைக்கோ நரேந்திரர் சந்திப்பின்பொழுதும் நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின்னர் அவரைச் சந்தித்த வைக்கோ வாசுபாய் அணுகுமுறையையே பின்பற்ற வேண்டும் என்றாராம்! ஒப்புக் கொண்டாராம்! எப்படிப்பட்ட அணுகுமுறை. சிங்களத்திற்கு ஆயுத விற்பனை கூடாது என்ற அணுகுமுறை! இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். என்றாலும், தமிழ் ஈழ ஏற்பிசைவிற்கு இல்லாவிட்டாலும் இனப் படுகொலையாளிகள்  உலக நீதி மன்றம் முன் நிறுத்தப்பட வேண்டும்! தண்டிக்கப்பட வேண்டும்! இந்திய அரசின் தலைவர்களும் படைப்பிரிவினரும் அதிகாரிகளும்  செய்த வஞ்சகச் செயல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏற்றிருக்க மாட்டார்! ஏனெனில் முதலிலேயே வைக்கோ இவற்றைத் தெரிவித்து அவர்கள்  மறுத்த சூழலில்தான் கூட்டணியே அமைந்திருக்கும். அவனுக்கு இவன் பரவாயில்லை என்பதுபோல் கருதி வைக்கோவும் ஏற்றிருக்க வேண்டும்.

  பாவம் ஈழத் தமிழர்கள்! மலைபோல் நம்பி உள்ள வைக்கோவே வாய்திறக்காத பொழுது யார்தான் வாய் திறப்பர்!

vaiko02