தமிழகத்திற்குப் போதிய நிதி அளிக்காமல், தமிழகத்தின்  முறையீடுகளைத் தொடர்ந்து மறுக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 aiadmk gb meetting1

அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில், அ.இ.அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில்,  கட்சியின் பொதுச் செயலாளர்  செயலலிதா முன்னிலையில் (திசம்பர் 19, 2013 அன்று) நடைபெற்றது.

செங்கோட்டையே இலக்கு!

aiadmk gb meeting4

பொதுக்குழுவில் பேசிய பொதுச் செயலாளர்  செயலலிதா, “மத்தியில் சரியாக வழி நடத்த ஆளில்லாமல் இந்தியா தடுமாறுகிறது. 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நம் கட்சி நாட்டை வழிநடத்த முடியும். அது தான் நம் இலக்கு. செங்கோட்டையை அதிமுக அடைவதை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறினார்.

வெற்றிக்கான நம்பிக்கை கொள்வோம்!

பேச்சின் இடையே குட்டிக்கதை கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ள முதல்வர் செயலலிதா,இப்பொழுதும் குட்டிக் கதை ஒன்றைக் கூறினார்.

உடல் நோயுற்ற  ஒருவர் அரிய மருந்து என்று நினைத்து ஒன்றை உட்கொண்டு, அவருக்கு உடம்பு சரியாகி, பிறகு அது  இயல்பான மருந்துதான்; தன் நம்பிக்கைதான் தன்னைக் காப்பாற்றியது என்பதை அறிந்தாராம். அதே போல் நமக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வேண்டும் எனத் தொண்டர்களுக்குச் செயலலிதா அறிவுறித்தினார்.

aiadmk gb meeting2

 எந்திர ஓட்டுநர்

 சியார்சு கோட்டையை வெற்றிகரமாக அடைந்த நமது கட்சியென்னும்  தொடர் வண்டி, செங்கோட்டை விரைவு வண்டியாக மாற வேண்டும். இந்த வண்டியைப் பச்சைக் கொடி காட்டித் தொடங்கி வைக்க தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். உங்களைப் பாதுகாப்பாக செங்கோட்டையில் கொண்டு சேர்க்க  எந்திர ஓட்டுநராக நான் இருக்கிறேன். நம்பிக்கையுடன் செயல்படுங்கள். அமைதி, வளம், முன்னேற்றம், இம்மூன்றையும்தான் நாட்டை வழிநடத்த நாம்  கொள்கைகளாக,  உச்ச மந்திரமாகக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது” என அதிமுக பொதுச் செயலாளர் செயலலிதா பேசி முடித்தார்

16 தீர்மானங்கள்:

உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி முன்மொழிந்த தீர்மானத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப்போட்டியிட்டு 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பது கட்சியின் முடிவு என்று குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம், தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டிற்குத் தலைமை ஏற்கும் காலம் கனிந்திருக்கிறது. எனவே, முதல்வர் செயலலிதா இந்தியாவை வழிநடத்திச் செல்லும் சூழலை உருவாக்க அதிமுக பாடுபட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

aiadmk gb meeting5

கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவு எடுக்க செயலலிதாவுக்கு அதிகாரம், இலங்கையில் நடைபெற்ற பொதுவளஆய மாநாட்டினை இந்தியா புறக்கணிக்கவேண்டும் என்ற தமிழக மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்திய மத்திய காங்கிரசுக் கூட்டணி அரசிற்குக் கண்டனம், அப்பாவித் தமிழக மீனவர்களைக் கடத்திச் சென்று சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்வதையும் அவர்களுடைய படகுகளைக் கைப்பற்றுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இலங்கை அரசைத் தட்டிக் கேட்காத மத்திய காங்கிரசு கூட்டணி அரசிற்குக் கண்டனம்,  இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க முடிவு எடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு, நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவதை இலக்காகக் கொள்ளுதல்  முதலான 16  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.