[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06  தொடர்ச்சி]

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  07

மக்களுக்கும் மன்னருக்கும் நாட்டுப்பற்று என்பது கருவிலே வாய்ந்த திருவாக இலங்கியது. மக்கள் அனைவரும் அவரவர் கடமையை நன்கு ஆற்றி நாட்டைப் புரத்தலே அவர் தம் தலையாய பணியெனக் கருதினர்.  குழந்தைகளைப் பெற்று நன்கு வளர்த்தலே தன் கடமையென அன்னை எண்ணினாள். எல்லா நற்குணங்களாலும் நிறைந்த பெரியோராக்குதல் தன் கடன் எனத் தந்தை நினைத்தான்.  படைக்கலன்களைப் படைத்துக் கொடுத்தல் தன் பங்கு எனக் கொல்லன் குறிக்கொண்டான்.  நல்லொழுக்கமுடையோராய் வாழச் செய்தல் தன் முறைமை என அரசன் கருதினான். போர்க்களத்தில் களிறுகளை வெட்டி வீழ்த்திப் பகைவரை வெல்லுதல் தமக்குரிய செயல்  எனக் காளை போன்ற இளைஞர் உளங்கொண்டு வாழ்ந்தனர். பொன்முடியார் எனும் நல்லிசைப் புலமை மெல்லியலார் கூறுகின்றார் :

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

            (புறநானூறு – 312)

இதனால் அறிவதென்ன? மக்கள் நன்றாக வளர்க்கப்படுதலும், சான்றோர் ஆக ஆக்கப்படுதலும், உயர்ந்த ஒழுக்கமுடையராய் வாழ்தலும், படைக்கலப் பயிற்சி பெறுதலும், காளை போன்று கட்டிளமை குன்றாது இருத்தலும் நாட்டின் உரிமையைக் காப்பதற்காகவே என்று ஒவ்வொருவரும் கருதி வாழ்ந்தனர் என்பதன்றோ அறிய இயலுகின்றது. நாட்டுப்பற்று என்பது நாட்டின் உரிமையைக் காப்பதற்காக வாழ்வதுதானே? அருள் உளங்கொண்ட அன்னையர்கள் தம் அருமை மக்களை நாட்டுக்காகவே வளர்த்தனர் என்பதனையும் மக்களும் நாட்டின் நலங்கருதியே வாழ்ந்தனர் என்பதனையும் சங்க இலக்கியப் பாடல்களிற் பல நன்கு எடுத்துக்காட்டுகின்றன.

மக்களை ஆண்ட மணிமுடி மன்னரும் நாட்டின் நல்லுரிமையைக் காப்பதற்காகவே வாழ்ந்தனர்.

என்நிழல் வாழ்நர் சென்னிழற் காணாது

கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக்

குடிபழி தூற்றும் கோலே னாகுக ;

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவ னாக

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைகஎன் நிலவரை         (புறநானூறு72)

எனப் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கூறும் வஞ்சினத்தால், மக்களும் புலவரும் மதிக்கவும் போற்றவும் நாட்டை நன்முறையில் ஆளுதலை மன்னன் தன் கடமையாகக் கொண்டிருந்தான் என்று வெளிப்படுகிறதன்றோ? குடிபழி தூற்றுதலும், புலவர் பாடாது நீங்குதலும் நிகழ்தல் கூடாது என்று அரசன் ஆட்சி செலுத்துதலில் மக்களாட்சித் தன்மையும் நாட்டுப் பற்றும் பொருந்தியுள்ளன அல்லவா?

 இவ்வாறு ஆளப்பட்ட நாட்டில் விளைபொருள்மிக்கு உள்நாட்டு வாணிபமும் வெளிநாட்டு வாணிபமும் நன்கு சிறந்து மக்கள் வாழ்வு உயர்ந்து இன்பம் நிறைந்து விளங்கியது.  நாடு எவரும் நாடி வந்து தங்கி வாழும் நல்லின்ப நாடாகவே திகழ்ந்தது.  இதனைப் பிசிராந்தையார் கூற்றால் நன்கு தெளியலாகும்.

பாண்டி நாட்டில் பிசிர் என்னும் ஊரில் வாழ்ந்தவர் ஆந்தையார் என்னும் தமிழ்ப் பெரும் புலவர். அவர் மூப்படைந்தும் நரையற்று இளைஞர் போன்றே தோன்றினார். அவ்வாறு என்றும் இளைஞராகவே தோன்றுவதற்குரிய காரணம் யாது எனப் பலரும் வினவினர்.

“இல்லறத்திற்கேற்ற மாட்சிமை பொருந்திய மனையாளைக் கொண்டுள்ளேன்.  மனைமாட்சியின் நல்லணியெனத் தகும் நன்மக்களை நிறையப் பெற்றுள்ளேன்.  குறிப்பறிந்து பணி செய்யும் ஏவலர்கள் எனக்குளர்.  என்னாட்டரசன் என் உளம் வருத்தும் செயல்களை ஒரு நாளும் செய்திலன்; எவ்வகைத் துன்பமும் மக்கள் எய்தாவாறு காத்து வருகின்றான். இவற்றிற்கெல்லாம் மேலாக நற்குணங்களால் நிறைந்து அடங்கி வாழும் பெரியோர்கள் பலர் என்னூரில் வாழ்கின்றனர்.  ஆகவே,  யான் உளமெலிவின்றி நல்லின்ப வாழ்வு கொண்டு நரைதிரையற்று விளங்குகின்றேன்” என்று தம்மை வினவியோருக்கெல்லாம் விடையிறுத்தார்.

யாண்டு பலவாக நரையில வாகுதல்

 யாங்கா கியர் என வினவுதி ராயின்

 மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

 யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்

 அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை

 ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்

 சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.

( புறநானூறு – 191)

தமிழ்நாட்டு ஊர்கள் எல்லாம் இவ்வாறே சிறந்து விளங்கின.  வீட்டின் ஏற்றத்தாலும், நல்லாட்சியாலும், சான்றோர் கூட்டுறவாலும் நீண்ட நாள் இளமை குன்றாது மக்கள் வாழ்ந்த நாட்டின் மாண்புதான் என்னே!

(தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்