சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 2
(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 1. தொடர்ச்சி)
சங்ககாலச் சான்றோர்கள் 2
1. கபிலர்
ஈராயிரம் ஆண்டுகட்குமுன் நம் தாயகமாம் தமிழகம் இயற்கை வளனும் செயற்கைத் திறனும் நிறைந்து, அறிவும் ஆண்மையும் அருளும் பொருளும் நிறைந்த இன்பத் திருநாடாய்க் காட்சியளித்தது. கலை வளமிக்க புலவர் கவித்திறத்தாலும், கொடை வளமிக்க புரவலர் கருணைத் திறத்தாலும், வேலெதிர் வரினும் அஞ்சி இமையாத விழிகள் படைத்த வீரர் நெஞ்சுரத்தாலும், ‘மக்களின் உயிர் நான்,’ என உணரும் உணர்வு சிறிதும் குறையாது குடி தழீஇக் கோலோச்சிய கோவேந்தரின் நெறி பிறழா ஆட்சியின் மாட்சியாலும் புகழ் மண்டிக் கிடந்த நம் பழந் தமிழ் நாடு, அலைகடல் சூழ்ந்த உலக மக்கள் அனைவரது கவனத்தையும் ஒருங்கே கவர்ந்ததோடன்றி, அவர்களது உளமார்ந்த மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய தகுதியும் பெற்றுத் திகழ்ந்தது.
அத்தகைய பெருமை மிக்க திருநாட்டில் மாநில மாந்தர் அறிவைக் கூரியதாக்கி-உணர்வை நுண்ணியதாக்கி ஒழுக்கத்தை விழுப்பமுடையதாக்கி- கலைமகள் கொழுநன் படைக்கும் வெற்றுடம்புகளைப்போல அழியாது என்றும் நின்று நிலவி மன்பதைக்கு ஒளி காட்டி வழிகாட்டும் மணி விளக்குகளாய்த் திகழச்செய்யவல்ல தீஞ்சுவைக் கவிதை களைச் செய்தளித்த பாகுதமிழ்ப் புலவர் கணக்கிலடங்காப் பெருந்தொகையினர் ஆவர். அத்தகைய புலவர் திருக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் சிறப்புப் பெற்றோருள் தனிச்சிறப்புப் படைத்தவர் கபிலர் ஆவர். புலவர் போற்றும் புலவரேறாய்த் திகழ்ந்த அவர்தம் தீஞ்சுவைப் பாட்டின் இன்பமும், ‘தெய்வக் கவிதை’யின் திறனும், தமிழ் இலக்கியத் தொகையுள்ளேயே மிகப் பழையதும் விழுமியதுமாகிய ‘மூத்தோர் பாடியருள் பத்துப்பாட்டுள்’ ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டினுள்ளேயே காட்சியளிக்கின்றன. ஆம்! தீந்தமிழின் சுவையை முற்றுமுணர வாய்ப்பின்றித் திகைத்திருந்த ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவுறுத்தும்பொருட்டு அருந்தமிழ்க் கவிஞர் உள்ளத்தினின்றும் மலையருவி போலக் கிளர்ந்தெழுந்த பாட்டமுதன்றோ அத்தீஞ்சுவைக் கவிதை? பத்துப்பாட்டுள் மட்டுமேயன்றிப் பழந்தமிழ்ச் செல்வங்களான புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, ஐங்குறு நூறு போன்ற நூல்களையும் தம் அமிழ்தினுமினிய தமிழ்க் கவிதைகளால் அணி செய்யும் பேற்றினைப் பெற்ற பெரும் புலவர் அல்லரோ கபிலர் பெருமானார்?
இத்தகைய பெருமை பெற்ற புலவர் பெருந்தகையார் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி பாய்ந்து வளங்கொழிக்கும் பாண்டி வளநாட்டில்-திருவாதவூரில்- தோன்றினார். மாசு மறுவற்ற வீரத்திற்கும் மதுரத் தமிழ் மொழியின் வாழ்விற்கும் என்றென்றும் இடமாய் விளங்கும் ஏற்றம் பெற்ற பாண்டி வளநாட்டில் தோன்றிய கபிலர் பெருமான், சங்கத் தமிழைத் துங்கமுற வளர்த்த தம் வாழ்வாலும் வாக்காலும் மன்பதைக்கு என்றென்றும் வழி காட்டும் வான்பொருளாய்-தமிழ்ச் சான்றோராய் -விளங்குவதில் வியப்பொன்றுமில்லை அன்றோ?
கொடி படர்வதற்கேற்ற கொழுகொம்பே போலப் பண்டைத் தமிழகத்தில் புலவரைப் போற்றும் புரவலர் கூட்டம் பல்கி இருந்தது. வீரத்தால் நிகரற்றுத் திகழ்ந்த அம்மேலோர் ஈரத்தாலும் இணையின்றிச் சிறந்து விளங்கினர். அவ்வாறு விளங்கிய பெருமக்களுள் ‘முடிகெழு வேந்தர் மூவரினும் சிறந்து விளங்கிய வள்ளலர் எழுவர் ஆவர். அவ்வெழுவரும் கடைச்சங்க காலத்து வாழ்ந்த காரணத்தால் ‘கடையெழு வள்ளல்கள்’ எனப் பெயர் பெறலாயினர். அவருள் முடிமணியாய்த் திகழும் பெருமை பெற்றவன் பாரி வள்ளல் ஆவன். இப்பாரி வள்ளலே நம் சான்றோராகிய கபிலரின் உள்ளங்கவர் நட்புடை உத்தமனாய்த் திகழ்ந்தான். கலையுணர்வாலும் வீரத்தாலும் கருணையுள்ளத்தாலும் ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கிய பாரியின் பால் கபிலர் பெருமனார் நெஞ்சைப் பறி கொடுத்தார். அப்பாவலர்தம் நுண்ணுணர்விலும் ஒழுக்க மேம்பாட்டிலும் நட்பின் இன்பத்திலும் திளைத்த கைவண்பாரியும் தன் நெஞ்சைக் கபிலர் பெருமானுருக்கே காணிக்கை ஆக்கினான். இவ்வாறு நீல வானமும் கோல மதியமும் போல விளங்கிய இருவர்தம் நட்பு, இருநிலத்தார் இதயத்தை எல்லாம் இன்ப ஆழியில் ஆழ்த்துவதற்கோர் ஏதுவாயிற்று.
பாரியின் பெயரையும் புகழையும் அறியாத தமிழருண்டோ? பாரிற் பிறந்த அருளாளர் எவருக்கும் இளைக்காத கருணைத்திறம் படைத்தவன் வள்ளல் பாரி. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்!” எனக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கிப் பாடினர் அருட்பெரு வள்ளலாராகிய இராமலிங்க அடிகளார். அப்பெருமானாரது அமுத வாக்கிற்கோர் இலக்கியமாய்த் திகழ்ந்த வாழ்க்கை பாரியின் தியாக வாழ்க்கை. அவ்வாழ்க்கையின் பல்வேறு பண்புகளையும் ‘புலனழுக்கற்ற அந்தணாளராகிய’ கபிலர் பெருமானார், காலம் உள்ள வரையில் நாம் படித்துப் படித்துப் பாறைநெஞ்சமெல்லாம் பனிநீர் போல உருகிப் பண்படப் பைந்தமிழ்க்கவிதைகளாய்ப் பாடியுள்ளார். பறம்பு மலையின் வற்றா அருவி வெள்ளம் போலத் தம் நெஞ்சிற் பொங்கியெழுந்த அன்புப் பெருக்கை-உணர்வு வெள்ளத்தையெல்லாம்-நாமும் அள்ளி அள்ளிப் பருகி அமர நிலை காணத் தெள்ளமுதக் கவிதைகளில் தேக்கி வைத் துள்ளார் தீஞ்சுவைக் கவிஞராகிய கபிலர் பெருமானார்.
கபிலர் வாழ்ந்த காலம் தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த இன்ப வாழ்க்கை நடத்திய காலம். அதனாலன்றோ பழந்தமிழ் இலக்கியங்களெல்லாம் இயற்கை இன்பத்தின் சுவைப் பிழிவாய்க் காட்சியளிக்கின்றன? சங்கச் சான்றோருள்ளும் கபிலர் பெருமானார் இயற்கையின் தலை சிறந்த அடியாராய் விளங்கிய பெருமை படைத்தவர். அவர் பாடியுள்ள அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் இயற்கை அன்னை இன்ப நடம் புரிகின்றாள்.
(தொடரும்)
முனைவர் ந. சஞ்சீவி:
சங்கக்காலச் சான்றோர்கள்
Leave a Reply