சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (நிறைவு) செ.வை. சண்முகம்
மையக்கருத்துரை
(கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி)
5.2. இறைச்சி
தொல்காப்பியர் இறைச்சியைப் பொருளியலில் மூன்று சூத்திரங்களில் (35 – 37) விளக்கியுள்ளார். ‘இறைச்சிதானேஉரிப்/பொருட்புறத்ததுவே’ என்பது முதல் சூத்திரம். அதில் உரி/ பொருள் என்ற இரண்டு பாடம் காணப்படுகிறது. இங்கு ‘உரிப்பொருள்’ என்ற பாடம் கொண்டால் அதுவும் மனிதவாழ்க்கை (உரி) ஆனது. கருப்பொருள், முதல்பொருள் (உரிப்புறத்தது) ஆகியவற்றால் தாக்கம்பெறும் என்று ஆகும்.
‘அன்புறுதகுந இறைச்சியுட் சுட்டலும்
வன்புறையாகும் வருந்திய பொழுதே’ (பொருளியல் 35 ).
என்று தொல்காப்பியர் இறைச்சியின் செயல்பாட்டை விளக்கியுள்ளார். அதாவது கருப்பொருளின் அன்புறு நிகழ்வுகள் தலைவி வருந்தும்போது ஆறுதல்தரும் என்பதுதான் கருத்து.
‘நசைபெரிதுஉடையர்நல்கலும்நல்குவர்
பிடிபசிகளைஇயபெருங்கைவேழம்
மென்சினையாஅம்பொளிக்கும்
அன்பின்தோழியவர்சென்றஆறே’ (குறுந். 37).
(பாலை பாடிய பெருங்கடுங்கோ. தோழி கடிது வருவார் என்று ஆற்றுவித்தது. பொருள் : தலைவர் சென்றவழி பசித்திருக்கும் பெண்யானைக்கு யா மரத்துக் கிளையை ஒடித்துக் கொடுத்துப் பசியைப் போக்கும் அன்பைப் புலப்படுத்தும்வழி ஆனதாலும் அவர்அன்பு உடையவர் ஆதலும் அருள்செய்வார் என்று தலைவி கூறுகிறாள்.)
இங்கு முதல் அடியும் கடைசி அடியும் உரிப்பொருள், ஏனையவை கருப்பொருள். இன்னொரு நிலையில் கடைசி அடியின் முதல் சீரும் கருப்பொருள் பகுதியாகக் கொள்ளலாம். கருப்பொருள் பெண்யானையின் பசியைப்போக்கும் ஆண்யானையின் காதலை வெளிப்படுத்துகிறது என்று மட்டும் உள்ளது. அது எப்படித் தலைவன் திரும்பிவந்து அருள்செய்வான் என்ற கருத்து பெறப்படுகிறது என்ற கருத்து விளக்கப்படவில்லை. இங்குதான் உளவியல் புதைந்துள்ளது. அதாவது யானையின்- அதாவது கருப்பொருளின் அன்புறு செயலைப் பொருள் ஈட்டப்போகும் வழியில் தலைவன் பார்த்தவுடன் தலைவியின் துன்பம் நினைவுக்கு வரும். உடனே எடுத்த காரியத்தை முடித்துவிட்டு வீடுதிரும்பும் எண்ணத்தை உண்டாக்கும். அதன்படிச் செயலாற்றி வீடு திரும்புவான் என்ற கருத்து பெறப்படுகிறது. நடத்தை வழி உளவியல்படி (Behavioral psychology) மனிதன் புற நிகழ்ச்சியால் அதாவது சுற்றுச் சூழலால் அக உணர்வு தூண்டப்பட்டு செயலில் ஈடுபடுவான் என்பது கருத்து.
அதுதான் இறைச்சியில் தோன்றும் பொருள். எனவே கருப்பொருள் உரிப்பொருள் நிகழ்வுக்குத் தூண்டுதலாக உள்ளது.
5.2.1. கருவும் முதலும்
சங்க இலக்கியத்தில் கருப்பொருள் மட்டும் அல்லாமல் முதல் பொருளும் காதல் உணர்வும் காதல் தூண்டுதலுக்கு உறுதுணையாய் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.
‘நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடுவாய்ப் பேடையொடு
வைகறை நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்
இஃதோ தோழி நம்காதலர் வரவே’. ( குறுந். 160).
(மதுரை மருதன் இளநாகன். வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கித் தோழி வரைவர் என ஆற்றுவிப்புழித் தலைமகள் சொல்லியது. பொருள் : ஆண் அன்றில் பெண் அன்றலுடன் தடா மரத்திலுள்ள கூட்டிருந்து காதலர் கவலைப்படும்படி ஒலிக்கும் நள்ளிரவு உடைய கூதிர் காலத்திலும் வரவில்லை. அதுதான் வரைந்துகொள்ள வருதல் ( திருமணம் செய்து கொள்ளும் ஏற்பாடு)1 என்பதா?)
அன்றில் பறவையின் குரல் காதல் உணர்வைத் தூண்ட வல்லன. ஏனெனில் அவை ஆணும் பெண்ணும் பிரிந்து வாழாதவை. அதனால் அதன் குரல்கள் காதல் உணர்வைத் தூண்டும் என்று கருதப்படுகிறது.
இங்கு முதல் 2 அடி கருப்பொருள். அடுத்த 1¾ அடி ( 3 சீர்) முதல் பொருள். ஏனையவை உரிப்பொருள். அதாவது முதலும் கருவும் 4¾அடி,உரிப்பொருள் 1¼ . சுற்றுச் சூழல் நோக்கில் கருவும் முதலும் அதிக அடி இங்கும் பெற்றிருப்பது யாப்பு நோக்கில் மட்டும் அல்லாமல் வாழ்வு நோக்கிலும் அதன் சிறப்பு புலப்படுத்தப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
எனவே கருப்பொருளும் முதல் பொருளும் காதல் உணர்வை தூண்டும் என்ற உளவியல் உண்மையும், சுற்றுச் சூழல் மனித வாழ்வில் பெரிய பங்கு உடையது என்ற உண்மையும் இங்கு புலப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் திருவள்ளுவர் ‘படர் மலிந்து இரங்கல்’ (பிரிவில் நினைந்து இரங்கல்) என்று அதிகாரத்தில் (117 ) ‘காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன்/ யாமத்தும் யானே உளேன்’ ( 1167. = ‘காமமாகிய கடலை நீந்தியும் கரை சென்று அடைய முடியவில்லை. நள்ளிரவில் எல்லோரும் தூங்க நான் விழித்துக்கொண்டிருக்கிறேன்’. ) என்று கூறும் குறளும் அந்த கருத்தை வலியுறுத்தும்.
5.3. உள்ளுறையும் இறைச்சியும்
நற்றிணை31ஆம் பாடல் உள்ளுறையும் இறைச்சியும் உடையதாக முன்னரே விரிவாக விளக்கப்படுள்ளது (சண்முகம், 2012: 312தொ.). அந்தப் பாடல், கானல் தலைவனுடன் உறவு ஏற்படாததன் முன்னர் இனிமை உடையதாக இருந்தது ( ‘துறையு மார் இனிதே’). தலைவனுடன் உறவு ஏற்பட்ட பின் தனிமையில் பல நினைந்து இப்படி ஆகிவிட்டேன் ( ‘பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பலநினைந்து யானும் இனையேன் ஆயின்’ ) என்று கூறுகிறேன். சில சமயத்தில் இனிமையாக இருக்கிற சுற்றுக் சூழல் வேறு சமயத்தில் வருத்தத்தைத் தருவதாக அமைந்துவிடுகிறது என்னும் போது ஒரே சுற்றுச் சூழலை இரண்டு மாறுபட்ட உணர்வைத் தருகிறது என்று ஆகிறது. அதாவது சில சமயத்தில் மனித மனம் சுற்றுச் சூழல் தாக்கத்துக்கு அப்பாற் பட்டது என்பது கருத்து.
குறுந்தொகை 136ஆம் பாடல் தலைவனின் இரட்டை நிலையை பின்வருமாறு விளக்குகிறது. முன்பு வேப்பங்காயைத் தலைவி கொடுத்தாலும் தேம்பூங் கட்டி என்று சொன்னவன் இப்போது குளிர்ந்த சுனை நீர் கொடுத்தாலும் சூடாக இருக்கிறது என்று கூறியதை ‘ஐய அற்றால் அன்பின் பாலே’ என்று கூறியது போலச் சுற்றுக் சூழலும் சில சமயங்களில் மனித மனத்தின் குறிப்பிட்ட நிலையை ஒட்டியது ஆகிவிடுகிறது.
- முடிவுரை
பொதுவாகக் கருப்பொருளான நிலம்,கடல்,காடு, பறவை, விலங்கு ஆகிய சுற்றுச்சூழல் மனிதனுக்கு வேண்டிய உணவும் உடையும் தருவதோடு வாழ்வுணர்வை உணர்த்தும் உள்ளுறையாகவும், வாழ்வு உணர்வைத் தூண்டும் இறைச்சியாகவும் தொல்காப்பியர் கோட்பாட்டு நோக்கில் கூறியதைச் சங்கஇலக்கியம் நூறு விழுக்காடு பொருளாலும் யாப்பாலும் உறுதி செய்ததோடு, இறைச்சிக்குரிய பொருளாகக் கருப்பொருளோடு முதல் பொருளும் செயல்படும் என்று புலப்படுத்தியுள்ளதால் தொல்காப்பிய இறைச்சிக்கு உரிய சூத்திரத்தின் ‘உரிப்புறத்தவே’ என்ற பாடம் சிறந்தது என்பதையும் உறுதி செய்கிறது.
அடிக்குறிப்பு
- உ.வே.சா. பதவுரையில் ‘பிரிந்தோர் கையற’ என்ற தொடருக்குப் பொருள் இடம் பெறவில்லை. சோமசுந்தரன் உரையில் அந்தக் குறை இல்லை.
துணையன்கள்
சண்முகம், செ.வை. 1984,சொல்லிலக்கணக் கோட்பாடு தொல்காப்பியம்
முதல் பகுதி, மறு பதிப்பு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
2009 பொருளிலக்கணக் கோட்பாடு தொல்காப்பியம்
முதல் தொகுதி, இறைச்சியும் தொடையும், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்
2012 பொருளிலக்கணக் கோட்பாடு தொல்காப்பியம்
தொகுதி-3 உள்ளுறை,மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
சாமிநாதையர், உ.வே.1937. குறுந்தொகை மூலமும் உரையும், சென்னை.
சுப்பிரமணியன், ச,வே. 1972, Grammar and index of AKanaanuuRu. Kerala University, Thiruvananthapuram
சோமசுந்தரன்,பொ.வே,1955. குறுந்தொகை மூலமும் உரையும், கழகப் பதிப்பு, சென்னை
தொல்காப்பிய உரை வளம் ( பொருளதிகாரம்) ப- ர் சிவலிங்கனார், ஆ., உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,
பசுபதி,ம.வே. 2010, செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
பஞ்சாங்கம், க. 2013 ‘தமிழில் இலக்கிய விமர்சனம்’, புதிய தமிழ் இலக்கிய
வரலாறு -3 ( ப-ர். சிற்பி பாலசுப்பிரமணியன் & நீல. பத்மநாபன், ) ப. 834- 850, சாகித்திய அகாதெமி, புதுதில்லி.
விசயராணி, இரா. 2014 ‘சூழலியல் நோக்கில் ஐங்குறுநூறு’ அரிமாநோக்கு.7.4. 46-52.
வையாபுரி,மு.2014, ‘தமிழில் சூழலியல் எழுத்துக்கள்’ காவ்யா. 3.4.138-141.
செ.வை. சண்முகம்
திருவேரகம்
194. மாரியப்பாநகர்,
அண்ணாமலை நகர் அஞ்சல்
சிதம்பரம் 608 002
அலைபேசி 98651 96476
மின்வரி: svs.anr2@gmail.com
(நிறைவு)
Leave a Reply