சங்க நூல்கள் வரலாற்று நூல்களே!
சங்க நூற்களில் பெரும்பாலும் இயற்கைத் தன்மைகளை உள்ளவாறுணரலாம். நிலவியல்பால் பல நலங்குகளைக் காணலாம். சிற்றுயிர் வாழ்க்கைகளை உற்று நோக்குவதால் மாந்தர் கற்றுக் குற்ற நீங்கிக் குணங்கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டிய பல வாய்மைகளை உணரலாம். குறிப்பிற் புலப்படுத்தும் அறமுறைகள் அளவில்லன அறியலாம். இவற்றிற்கு உள்ளுறையுவமம் எனப் பெயர்ந்து உள்ளுதோறுள்ள முவக்குமாறு உள்ளியுணர வைத்தனர் ஆன்றோர். இவ்வுள்ளுறையினைக் கொண்டு கள்ளங் கபடொழிந்து வெள்ளையுள்ளத்தராய் வள்ளன்மையோடு வாழலாம். மேலும் பண்டைமாந்தர், புலவர், புரவலர், குறுநிலமன்னர், முடியுடை வேந்தர், ஆண்மை, அடக்கம், ஆள்வினையுடைமை, உழவு, வணிகம், அறமுறை நிறுத்த ஆற்றும் போர், கல்வி, கற்பு, செல்வம், செம்மை, செம்பொருட்டுணிவு, வழிபாடு வாழ்க்கை நலம் முதலிய பலவும் கண்டு கைக்கொண்டொழுவதற்குத் தூண்டும் வரலாற்று நூலுமாகும். அதனால் நாட்டுவரலாற்று நூற்களுள் முதல் வரிசையில் நிற்கத் தக்க நூல்கள் சங்க நூல்களேயாகும்.
– சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகப் பதிப்புரை: ஐங்குறுநூறு
Leave a Reply