Po.ve.somasundranaar01

பொருந்தாப் புனைவுகள் உடைய வடநூல் இலக்கியங்களை விட

இயற்கையை இயம்பும் சங்க இலக்கியங்கள் சிறந்தன!

  வடமொழி முதலிய பிறமொழிவாணர்கள் தங்கள் இலக்கியங்களை ஆக்குதற்குப் பெரும்பாலும் அறிவொடு பொருந்தாத கற்பனைகளையே பயில வழங்குவராயினர். பாற்கடலும், கருப்பஞ் சாற்றுக் கடலும், மேலுலகங்களும், கீழுலகங்களும், அரக்கர்களும், தேவர்களும், பிசாசர்களும், இன்னோரன்ன பொருந்தாப் புனைவுகளை அவர்கள் இலக்கியங்களில் யாண்டுங் காணலாம். பல்லாயிரம் ஆண்டு உயிர் வாழ்ந்திருப்போரையும், பதினாயிரம் மகளிரை மணந்தோர்களையும் அவர்கள் இலக்கியங்களிலே காண்கின்றோம். இப்புனைவுகள் ஆராய்ச்சி அறிவிற்குச் சிறிதும் பொருந்தாத பொய்ப் புனைவுகளேயாகும் அன்றோ? நந்தமிழ் நாட்டுப்பற்றைநாட் புலவர்களும் “இனத்தாகும் அறிவு” என்றபடி அவ்வடவர் கூட்டுறவானே நல்லறிவிழந்து அவர் நெறியே பற்றிப் பிற்றை நாள் வீண்படும் இலக்கியங்கள் பலவற்றை யாத்து அவம் போயினர்.

  நம் சங்கக்காலத்து இலக்கியங்களிலே, இத்தகைய பொருந்தாப் புனைவுகளை யாண்டும் காண்டல் அரிது. ஒரோவழி யாண்டேனும் காணப்படுவனவும் அக்காலத்தே வடவர் கேண்மையானே வந்த சிறிய இழுக்குகளாகவே காணப்படுகின்றன. நம் பழம்புலவர்கள் உலகியற் பொருள்களின் இயல்பினை யாண்டும் தன்மைநவிற்சியானே விளக்குவதைக் காணலாம்.

– பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்: குறுந்தொகை: அணிந்துரை: பக்கம்.11