தாயே, தமிழே! – தாராபாரதி

தாயே, தமிழே!   நினைவாலும் கனவாலும் எனையாளும் தமிழ் மகளே! திணைமாவைவிட இனிக்கும் தேமாவும் புளிமாவும் பனையோலை யில்கண்டு பதநீர் குடித்தவளே! உயிரே! மெய்யே! உயிர்மெய்யாய் இருப்பவளே! தமிழே, உனக்கு உயிர் – மெய்யாய் இருக்கிறதா? குற்றுயிராய்க் கிடப்பவளே ஊசலாடும் குறையுயிரில் வாழ்பவளே சிற்றுயிரைத் தந்துன்னை எழுப்புதற்கு சிலிர்த்திருக்கும் உன் மக்கள் சிறுத்தைக் கூட்டம்! – கவிஞர் தாராபாரதி

உயிரே உயிரின் உயிரே! – அம்பாளடியாள்

உயிரே  உயிரின்  உயிரே! ஈன்றவளுக் கொப்பான  இன்றமிழை நான்மறவேன் தேன்சிந்தும் பாக்களைநீ தேடிவந்து! – வான்மழைபோல் இன்றென்றன் எண்ணத்தில் இட்டுச்செல்   என்னுயிரே ! என்றுமிது போதும் எனக்கு!   தூக்கத்தில் கூடத்தான் உன்றன்  எண்ணம் தூண்டிவிட்டுச் செல்கிறாய் தாயே உன்னால் பூக்கின்ற புலமையும்  பூலோ கத்தில் பூக்களின் நறுமணத்தை ஏந்திச் செல்லும்! தேக்கிவைத்த உணர்வெல்லாம் சிந்தும் போது தேன்துளியாய்த் தான்சிந்தும் இந்த மண்ணில்! ஏக்கத்தைத் தந்தென்னை இதுபோல் நாளும் எழுப்பிவிடு தீந்தமிழே அதுவே போதும்!   உன்னோடு வாழ்கின்ற நொடிகள் எல்லாம் உலகத்தில்…

தமிழ் வாழ்த்து- முடியரசன்

தமிழ் வாழ்த்து வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக் கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ் நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே – முடியரசன் (கவிஞர் இறுதியாக இயற்றிய கவிதை) பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) பக்கம் 20

வையகத் தமிழ் வாழ்த்து – சி. செயபாரதன்

வையகத் தமிழ் வாழ்த்து   பாரதக் கண்டச் சீரிளம் தமிழே ! ஓரினம் நாமெலாம் ஒரு தாய் மக்கள் வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே ! தாரணி மீதில் உன் வேர்களை விதைத்தாய் வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின ஈழத் தீவில் இணைமொழி நீயே சிங்கப் பூரினில் துணைமொழி நீயே மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் காசினி மீதில் தமிழர் பரப்பிய காவியத் தமிழே ! வாழ்த்துவம் உனையே ! வையகத் தமிழே ! வணங்குவம் உனையே ! ஆத்திசூடி ஓளவையார், ஆண்டாள்,…

எந்தாய்த் தமிழே போற்றி! – திருவள்ளுவரடிமை முருகு

அறிவொளி இறைவா போற்றி போற்றி அம்மை யப்பா போற்றி போற்றி எந்தாய்த் தமிழே போற்றி போற்றி எந்தை நாடே போற்றி போற்றி தெய்வப் புலவா போற்றி போற்றி திருத்தகு குருவீர் போற்றி போற்றி திருவெலாந் தருவீர் போற்றி ஓம்! – திருக்குறள் ஞாயிறு திருவள்ளுவரடிமை முருகு : ஈசனடி போற்றி

தமிழ் வாழ்த்து – கவிஞர் முத்தரசன்

 நறுந்தமிழே வாழ்த்திடுவாய்! ஆர்ப்பரிக்கும் ஆட்சியிலும் ஆளுமைசெயும் தமிழே! போர்ப்பாட்டுப் பாடுதற்குப் புறப்பட்ட பூந்தமிழே! பொறுமையுடன் நடனமிடும் புதிரான தமிழே! பெருமையுடன் வாழ்த்துகிறேன்! பெருமிதமும் கொள்கின்றேன்! வந்தாரை வாழவைக்கும் வளமான செந்தமிழே! சொந்தமெனும் உணர்வோடு சொக்குகிற தமிழே! சிந்திக்கத் தெரிந்தவர்க்குச் சிரிக்கின்ற தமிழே! நிந்திக்கத் தெரியாத .நிலைத்தபுகழ்த்தமிழே! சொல்லில் அடங்காத சொல்லடுக்குத் தமிழே! பல்சுவையில் குன்றாத பழம்புகழே! பார்முதலே! வெல்கின்ற வழியெமக்கு விழிப்புடனே தந்திடுவாய்! நல்லோனாய் இருந்திடவே நறுந்தமிழே வாழ்த்திடுவாய்! – கவிஞர் முத்தரசன்

தமிழ்த்திரு வாழ்க – கவியோகி

தமிழ்த்திரு வாழ்க “திருகொலு விருக்கும் தமிழ்த் திருவாழ்க! அரனருட் புதல்வி, அருங்கலைச் செல்வி வரனருள் முதல்வி; வாழிய தமிழ்த்தாய் அறிவனல் விழியாள், அமுதக் கதிர்விரி முழுமதி முகத்தாள், மோகன காந்தம் வீசிடும் அரசி மின்னெனத் தெறிக்கும் பொலிநகை முத்தம் பொழிந்திடும் வாயாள்” – கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

உயிர்க்கு உயிராய் நிற்கும் தமிழ்

பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண்      டெஞ்சியழுக் கேறா வியற்கலையே விஞ்சுநிறம் தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம்      தீயாது சொல்விளையுஞ் செய்யுளே வீயா தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய்      வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் – தமிழ்விடு தூது: 17-19

திறம் வாய்ந்தவை தமிழ்ச்சொற்களே!

தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும்; முதலை உண்ட பாலனை அழைத்ததும்; எலும்புபெண் உருவாக் கண்ட தும்;மறைக் கதவினைத் திறந்ததும்; கன்னித் தண்ட மிழ்ச்சொலோ? மறுபுலச் சொற்களோ சாற்றீர்! – பரஞ்சோதிமுனிவர்: திருவிளையாடற் புராணம்

கடவுளும் ஆய்ந்த உயர்மொழி தமிழ்

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த விப்பசுந்தமிழ்ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக்கிடந்ததா யெண்ணவும் படுமோ? – பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்: திருநகரச் சிறப்பு: 57

சங்கத் திருப்பிலே வளர்ந்த தமிழ் வாழ்க

பொருப்பிலே பிறந்து தென்னவன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந் தோரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள் – வில்லி பாரதம்: சிறப்புப் பாயிரம்

அனைத்து மொழிகளையும் வென்ற அன்னைத் தமிழை ஏத்துவோம்

மறைமுதல் கிளந்த வாயன்மதி      மகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி      இலக்கணம் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பில் பாடை      அனைத்தும் வென்று ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்த் தெய்வத்தை      உள்நினைந்து ஏத்தல் செய்வாம் – கருணைப் பிரகாசர்: திருக்காளத்தி புராணம்: கடவுள் வாழ்த்து