க. திருக்குறள் தெள்ளமுதம் அமிழ்தம் என்பது அழகிய இனிய தமிழ்ச்சொல். அச்சொல்லின் இனிமைக்கு அதன் கண் உள்ள சிறப்பு ழகரமே தக்க சான்று. இயற்கை நலம் கெழுமிய இன்பத் தமிழ்மொழியே இனிமை வளம் கொழிப்பது. தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருள் உண்டு. கற்பதற்கும் கேட்பதற்கும் களித்து உரையாடுதற்கும் எளிமையும் இனிமையும் வாய்ந்தது இம்மொழி. அமிழ்தம்போன்று ஆருயிர் தழைக்கச் செய்யும் ஆற்றல் உடையது. இந்நாள் உலகில் வழங்கும் மொழிகள் மூவாயிரம். அவற்றுள் பழமையும் இலக்கிய வளமையும் பொருந்திய மொழிகள் இரண்டே. அவை நந்தம்…