(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 6. உ.ஏமம் தொடர்ச்சி)

                    “ஒரு மைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
                    எழுமையும் ஏமாப்பு உடைத்து’’ (398)

இங்கும் ஒருமை, எழுமை மாந்தப் பருவங்களையே குறிக் கும். ஒரு பருவமாகிய சிறுவன் பருவத்தில் ஒருவன் கற்க வேண்டும். கற்றால் அவனுக்கு அக்கல்வி தொடர்ந்து முதுமை வரை வரும் ஏழு பருவங்களுக்கும் பாதுகாப்பு ஆகும்.

கல்வியால் பெற்ற அறிவுப் பாதுகாப்பு ஆறறிவு மாந்தனை உண்மையில் மாந்தனாக வைத்திருக்கும்.

கல்வியை “எண்என்ப, ஏனை எழுத்து என்ப” (392) என்று இரண்டுள் அடக்கினார். சிறுவன் தன் பருவத்தில் கற்கும் எண், எழுத்து எனும் இவையிரண்டும் அவன் வாழ் நாள் வரை கல்விக்கும், செயலுக்கும், வாழ்விற்கும் அடித்தளமாக நின்று அவன் அறிவையும், அறிவார்ந்த வாழ்வையும், அவற்றால் அவனையும் பாதுகாக்கின்றன. முதற் பருவத்தில் சிறுவன் ‘அ, ஆ, இ…… ‘ என எழுத்துகளையும், ‘1,2,3……0’ என எண்களையும் கற்கிறான். இவன் அவ்வாறே அவனது ஏழு பருவங்களுக்கும் துணை. யாக நிற்கின்றன. துணையாக நின்று அவன் மொழியறிவையும், கணக்கறிவையும் பாதுகாத்து ஏமம் செய்கின்றன.

எழுத்து நிலையிலும் எண்நிலையிலும் மட்டுமல்லாமல் குறியீடுகளாகவும் துணையாகின்றன. எழுத்துகளே எண்களாக உதவுகின்றன. தமிழில்,

க—1, உ—2, ரு—5, எ—7, அ—8, ய—10,

ள—100, வ—கால் (¼), தெ—முக்கால் (¾)

வத—முந்திரி, அத—1000 என்றெல்லாம் குறியீடுகளாகத் துணைநின்று ஏமமாகின்றன.

ஆங்கிலத்தில் தேற்ற வாய்பாடாக,

AB3 BC2+CA2 -என்றெல்லாம் எழுத்தும் எண்ணுமாக முன் பருவத்தில் கற்கப்பட்டவை, பின் பருவங்களில் குறியீடுகளாக நின்று அறிவிற்கு ஏமமாகின்றன. பல கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளக் குறியீடுகளாக உதவி ஏமமாகின்றன.

இக்காலக் குழந்தைக் கல்வி மழலையிலேயே தொடங்குகின்றது. இக்குழந்தைக் கல்விமுறையில் கிண்டர்கார்டன் முறையை அறிஞர் புரோபெல் என்பார் அமைத்தார். மாண்டிசோரி அம்மையார் அமைத்த முறை அவர் பெயரால் நடந்துவருகின்றது. முதற் சிறுவன் பருவத்தில் விளையாட்டுச் செயலறிவோடு கூடிய கல்வியை இவை தருகின்றன. இம்முதற்பருவக் கல்வி முதுமைப் பருவம் முடிய அவனை அறிதிறன் (Intelligence), உடையவனாக்கி அவனுக்கு ஏமமாகின்றது.

குழந்தையின் அறிதிறனை ஆய்ந்தவர் கலிபோர்னியா நாட்டுப் பேராசிரியர் பினே (Binet) என்பவர். இவர்,

‘குழந்தைப் பருவத்தில் உள்ள அறிதிறன் செப்பமாக்கப் பெற்றால் அது அவன் வாழ்நாள் வரை அவனைப் பாதுகாக்கும்’ என்று கண்டறிந்தார்.

மற்றொரு பேராசிரியர் தெருமென் (Dermen) என்பார் தம் ஆய்வில்,

‘குழந்தைகள் வளர்ந்த பின்னர், தாம் குழந்தைப் பருவத்தில் பெற்ற அறிதிறனால் உலகப்புகழ் அடைவர்’ என்று கண்டறிந்தார்.

இக்காலத்தில் கண்டறியப்பட்ட கல்வி அறிவியல் (Educational Science) மிக எளிமையாக எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்னும் தொடரில் பொதிந்துள்ளது.

மேற்கண்டவற்றால் கல்வி ஓர் ஏமம் ஆகிறது.

கல்வி ஓர் ஏமத் தொடர்பில்

கல்வியறிவுடையார் அதன் வலிமையால் பல வகையில் ஏமம் ஆவார். அவற்றுள் ஒன்று அவரை நட்பாக கேண்மையாகக் கொள்ளல். இதனை,

“மூத்த அறிவுடையார் கேண்மை” (441) என்றார்.

இவ்வகைக் கல்வி ஏமத்தொடர்பில் ‘கேண்மை ஏமம்’ தொடர்கின்றது.

கேண்மை என்பதற்கு நட்பு என்பது பொருள். நட்பினும் அழுத்தமானது கேண்மை.

கேண்மை தனியொருவர்க்கும் வேண்டும்; நாட்டிற்கும் வேண்டும். கேண்மையின் சிறப்பான பயன், தன்னைத் தழுவியவருக்குத்தான் ஏமமாக அமைவது. அவ்வாறு ஏமம் தராத கேண்மை கொள்ள வேண்டாத ஒன்றாகும். இதனைத் திருவள்ளுவர்,

‘ஏமம் சாராக் கேண்மை’ என்று பொதுவில் குறிக்க வேண்டியவர், இதற்கு ஓர் அழுத்தம் கொடுக்க எண்ணி,

“ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை” என்றார். சிறியவரும் கேண்மை செய்வார். ஆனால், அது “புன்கேண்மை’; ஏமம் செய்யாது. இதனை

“எய்தலின் எய்தாமை நன்று” (815) என்று முடித்தார்.

எனவே புன்கேண்மை ஏமம் ஆகாது.

நல்ல கேண்மை ஏமம் ஆகும்.

இக்கருத்து திருக்குறளில் ‘அரசியல்’ என்னும் இயலில் உள்ளது.

இக்காலம் அரசியல் அறிவியல் (Political Science) நாட்டிற்கு இன்றியமையாததாகத் தோன்றியுள்ளது. கேண்மை ஏமத்திற்கு இன்றைய உலகத்தில் அரசாட்சி நடப்பில் நல்ல சான்றைக் கண்டு வருகிறோம்.

உலகத்து நாடுகளில் சில கூட்டுசேரா நாடுகளாக உள்ளன. இருப்பினும் தெற்காசிய நாடுகள் கேண்மை கொண்டு ஒரு கூட்டாக சார்க் (Saarc) என்னும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏழு நாடுகள் இக்கூட்டு நாடுகள். இந்திய நாட்டுடன் இதில் பாக்கித்தானமும் உள்ளது. இக்கூட்டில் கேண்மை கொண்டிருக்கிறது பாக்கித்தான். ஆனால் இக்கேண்மையில் இருந்து கொண்டே இந்திய நாட்டிற்கு எதிரான கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுகிறது. காசுமீரத்தில் கமுக்கமாகக் குண்டர்களை அனுப்பிக் கொலை, கொள்ளை, கலவரம் செய்து அம்மாநில மக்களின் ஏமத்தைக் குலைக்கிறது. பம்பாயில் குண்டுகள் வெடிக்கக் காரணமாகி அந்நகர்ப் பாதுகாப்பில் கலக்கம் ஏற்படுத்தியது.

‘சார்க்’கில் கேண்மை உண்டு;

அமுக்கச் செயலால் ஏமம் இல்லை;

இதனால் கேண்மை என்பதே புன்கேண்மையாகிறது.’ நாம் கண்ணால் காணும் இந்த அரசியல் அறிவியலில் முன் னோடிப் பதிவாகத் திருவள்ளுவத்தை

(கேண்மை)

              “செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
              எய்தலின் எய்தாமை நன்று” (815)

என்று பேசவைத்தார் திருவள்ளுவர். பாக்கித்தானத்தின் கேண்மை பெறுவதைவிடப் பெறாதிருத்தலே நல்லது என்று நம் நாட்டு மக்கள் எண்ணவேண்டி நேர்ந்துள்ளது.

திருவள்ளுவர் தொலைநோக்காகக் கருதியது போன்று பாக்கித்தானின் இந்தக் கேண்மையை

இனம்போன்று இனமல்லார் கேண்மை” (822) என்றார்.

கேண்மையில் இனத்தாரும் உள்ளனர்;

இனம் அல்லாதாரும் உள்ளனர்.

இவ்விரண்டையும் அடுத்துக் காணலாம்.

(தொடரும்)