(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 1. அ. அறிவியற் கவிஞர் திருவள்ளுவர்- தொடர்ச்சி)

‘அறிவியல் கவிஞரே’(?) என்னும் வினாவிற்கு விடை காணப் புகுமுன் ஒரு குறிப்பை எழுத வேண்டும். அக் குறிப்பு ஒரு நூலாசிரியன் தவறாது கொள்ள வேண்டிய நெறி பற்றியதாகும். அந்நெறி மொழி நெறி.

இந்நூலின் தொடக்கம் முதல் இதுவரையும் சான்றுகளின் அழுத்தமாகச் சொல் அமைப்புகள் காட்டப் பட்டுள்ளன. இனியும் அவ்வாறு மேற்கொள்ளப்படும்.

தமிழ்ச் சொல் கட்டுக்கோப்பான அமைப்புடையது. சொல்லின் மூலம் ஆணிவேர் போன்றது. அந்த ஆணி வேரில் முளைத்துக் கிளைக்கும் பொருள் மக்களின் வாழ்வு, மரபு, வரலாறு, நாட்டுநிலை முதலியவற்றிற்கு உதவக் கூடியது. புதிர்களாக வரும் கருத்துப் பூட்டகங்களைத் திறக்கும் திறவுகோல்கள் பண்டைத் தமிழ்ச் சொற்கள்.

நூலாசிரியனோ, பாடம் சொல்லும் ஆசிரியனோ தவறாது கொள்ள வேண்டிய நெறியாக, மேலைநாட்டு அறிஞர் சான் கிரகாம் (John Graham) என்பார் ஓர் ஆழ்ந்த நெறியை அறிவித்தார்.

“நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் உள்ளார்ந்த வாழ்க்கை உண்டு. அது அவர்தம் பொருள் பொதிந்த மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அது வருங்கால மக்களின் அறிவிற்காகப் போற்றப்படுகிறது.

நாட்டு வரலாறு, பழக்க வழக்கம், ஒழுக்க நெறி ஆகியவற்றை மிகப் பழமையான இக் காலத்தில் வழக்கில் இல்லாத சொற்கள் கொண்டுள்ளன. அச் சொற்களினின்று வெளிப்படுத்தாத ஆசிரியன் மிகவும் தவறியவனாவான்” என்னும் விளக்கம் உரிய வழிகாட்டியாகத் தக்கது.

இவ்வறிஞரின் இக்கருத்து ‘ஆங்கிலச் சொல் நூல்’ (English Word Book) என்னும் ஆங்கில நூலில் உள்ளது. இவர் குறிப்பிடும் மொழிச் சொல் ஆங்கிலத்தையும் குறிப்பிடலாம். பொதுவாக எந்த மொழியையும் குறிப்பிடலாம். சில நூற்றாண்டுகள் வரலாற்றையே கொண்ட ஆங்கிலச் சொல்லுக்கும் இது பொருந்தும் என்றால், பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட தொன்மை நுண்மொழியாம் தமிழின் சொற்கள் எத்துணை ஆழமும், வரலாற்று அழுத்தமும் கொண்டனவாகும்?

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் மாணிக்கச் சுருக்கமாக,

“எழுத்தின் திறன்;
இச்சொற் பொருளின் அழுத்தம்”
[1]

என்றார். தமிழின் இன்சொல்லும் அதன் பொருள் அழுத்தமும் எத்துணையோ வரலாற்றுப் புதிர்களையும் வாழ்வியல் பூட்டகங்களையும் வெளிப்படுத்துவனவாகும். இதனை அடியொற்றிய இச்சிறு நூலில் எடுத்துக்கொண்ட கருத்திற்கு ஏற்பத் தமிழ் சொற்கள் மூல அமைப்புடனும், பொருளுடனும் உரிய இடங்களில் சான்றுகளாகக் காட்டப்படுகின்றன.

இனி அறிவியற் கவிஞரைக் காண்போம்:

‘அறிவு, இயல்’ என்னும் இரு சொற்களில் இயல்: என்பதற்கு முதற்பொருள்கள் இலக்கியம், இலக்கணம் என்பன. முத்தமிழில் ஒன்றாகிய ‘இயல் தமிழ்’ என்பது இலக்கியத்தையும் இலக்கணத்தையும் குறிப்பது. தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் 27 உட்பிரிவுகளைக் கொண்டது. இவற்றுள் 22 உட்பிரிவுகள் பிறப்பு இயல், மரபு இயல் என இயல்’ என்று அமைந்தவை. இங் கெல்லாம் ‘இயல்’ என்பது இலக்கணத்தைக் குறிக்கும்; இத்துடன் துறை என்னும் உட்பிரிவையும் குறிக்கும். திருக்குறளிலும் மூன்று பாடல்களில் 13 இயல்கள் உள்ளன. இவையும் இலக்கணம் என்றும், உட்பிரிவாம் துறை: என்றும் பொருள்படும்.

நீர்நிலையாம் குளத்திற்குள் இறங்குவதற்குப் பல துறைகள் இருக்கும். இது போன்று ஒரு தொகுப்புக் கருத்திற்கும் பல உட்பிரிவுகள் அமையும். இவ்வுட் பிரிவே துறை எனப்படும்.

‘அறிவியல்’ என்பது ஒரு துறை. வாழ்வியல் இயக்கத்திற்குத் துணை நிற்பது அறிவியல். இக்காலத்தில் உவகை அளாவி, வானத்தை அளாவி வளர்ந்துள்ளது. அனைத்திலும் மேம்பட்டு நிமிர்ந்து நிற்கிறது.

தமிழில் ‘அரசியல்’[2] ‘அமைச்சியல்’[3] எனும் சொல்லமைப்புக்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. இவற்றிற்கு அரசின் இலக்கணம்’, ‘அமைச்சின் இலக் கணம்’ எனப் பொருள். திருவள்ளுவர் ‘கண்ணோட்டத் துள்ளது உலகியல்’ (572) என்னும் குறளில் உலகியல்’ என்னும் சொல்லைப் படைத்துள்ளார். இதற்கு உலக நடைமுறை என்று பொருள். ‘வானியல் ஊனியல்’ என்னும் சொற்களை இடைக்காட்டுச் சித்தர் பாடவில் காண்கின்றோம். இவ்வாறு பல உள்ளன.

“அறிவியல்” என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் இல்லை; இந்த நூற்றாண்டில் உருவான சொல் அறிவியல்’ ஆங்கிலத்தின் ‘Science என்பதற்கு ஆக்கப்பெற்ற சொல். ‘விஞ்ஞானம்’ என்பது வடசொல்.

தமிழில் ‘அறிவியல்’ என்னும் சொல் முற்கால நூல்களில் இல்லாமையால் அறிவியற் கருத்துக்கள் தமிழில் இல்லை’ என்று ஆகாது. தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் பல அறிவியற் கருத்துக்களைக் காண முடிகின்றது. திருவள்ளுவத்தில் அறிவியற் கருத்துக்கள் செறிந்துள்ளன.

தமிழில் ‘அளவை’ என்பது ஒரு துறை. இஃது

‘அளவையியல்’ எனத் தக்கது. தமிழில் ‘அளவை நூல்’ என்றொரு நூல் இருந்து மறைந்தது, பதிப்பரசர் உ. வே. சா. அவர்களும் இதனைக் குறித்தார்கள்.

‘அளவை நூல்’ என்பதற்கு ‘அறிவை அளக்கும் நூல்’ என்று பொருள். அறிவால் அறிவை அளப்பதாகும். அறிவால் நூற்கருத்துகளை அளந்தோர் தம் கருத்தை நிலைநாட்டக் கருத்துப் போரிட்டனர், அஃதாவது பட்டி மண்டபத்தில் சொற்போரிட்டனர். இப்போரில் தம்தம் பெருமையையும் பேச நேரும்; தம்மை வியந்து தருக்கியும் பேசினர். இவ்வாறு தருக்கொடு பேசுவது ‘தருக்கம்’ எனப்பட்டது. சிறுபஞ்ச மூலம் என்னும் நூலிலும்[4] இச் சொல்லைக் காண்கின்றோம், இவ்வாறு அளவை நூல், “தருக்க நூல்” என்றும் வழங்கப்பெற்றது. இந்த அளவையை ஆங்கிலத்தார் Logic என்றனர். வடநூலார் “வாத சாத்திரம்” என்றனர்.

அறிவை அளக்கும் ‘அளவையியல்’ சில படிகளைக் கொண்டது. தமிழறிஞர் காண்டல் அளவை; கருதல் அளவை என இரண்டு படிகளாகக் கண்டனர். வடநூலார் பத்து (வேதவியாசர்) என்றும், எட்டு (கிருதகோடி) என்றும், ஆறு (சைமினி) என்றும் பல வகையாகக் கொண் டனர். கெளதம புத்தர் காண்டல், கருதல்’ என்னும் இரண்டையே ஏற்றார். மணிமேகலைக் காப்பிய ஆசிரியர் சாத்தனார் இவற்றை விளக்கினார்.

திருவள்ளுவர்,

ஆற்றின் அளவு அறிந்து கற்க” (125) என்றார். இதில் ‘அளவு’ என்பது அளவையியல் நூலைக் குறிக்கும். ஏன் கற்கவேண்டும் (?) என்பதற்குத் திருவள்ளுவர்,

“அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல்” என்று காரணமும் சொன்னார். “அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல்” என்பது முன் கண்ட பட்டிமண்டபக் கருத்துப் போரைக் குறிக்கும்; தருக்கத்தைக் குறிக்கும். இது கருதியே உரையாசிரியர் பரிமேலழகரும் இப்பொருளே கொண்டார்.

‘அளவு’ என்னும் சொல் பொதுவில் எண்ணிக்கை முதலிய பல அளவுகளைக் குறிக்கும். ‘ஆற்றின் அளவு அறிந்து ஈக’ (477) என்பதில் இப்பொதுப்பொருள் உள்ளது.

மேலே கண்ட குறள் ‘கற்க’ என்றதாலும், ‘அவை அஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு’ என்றதாலும் கற்பதற்கும், மாற்றம் கொடுத்தற்கும் ‘அளவை நூல்’ என்பதே பொருந்துவது. பொதுவான அளவுப் பொருள் இங்குப் பொருந்தாது. ஏனெனில் கல்வி ‘கரையில’. கல்வி எண்ணிக்கை அளவில் அடங்காதது. ஆனால், எவற்றைக் கற்க வேண்டும் என்னும் அளவிற்கு உரியது. திருவள்ளுவர் ‘கசடறக் கற்பவை கற்க’ என்று ஒர் அளவு கூறினார். எனவே, ‘அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு அளவை நூலைக் கற்க வேண்டும்’ என்பதே பொருத்த மானது.

இந்த ‘அளவை’ என்பது காண்டல் அளவை, கருதல் அளவை என்னும் இரண்டு படிகளைக் கொண்டது என்று கண்டோம். இவற்றுள் காண்டல் கண்ணால் காண்டலையும், கருத்தால் காண்டலையும் குறிக்கும். ‘கருதல்’ என்பது கண்டதைக் கொண்டு அதன் தொடர்பில் உள்ளதைக் கருதி அளத்தலாகும். ‘புகை வருவதைக் கண்டுகொண்டு நெருப்பு இருக்கும்’ என்பது போன்று கருதி அறிதல் – ஊகித்தல் ‘கருதல் அளவை’யாகும்.

திருவள்ளுவர், ‘அளவு அறிந்து’ என்றதால்,

‘காண்டல் அளவை;
கருதல் அளவை’

எனும் இரண்டையும் குறித்துள்ளார் என்பதை நாம் கருத்தில் நிறுத்திக்கொண்டு, அறிவியல் கருத்தை அணுக வேண்டும்.

‘அறிவியல்’ என்பது அறிவைக் கொண்டு ஆய்ந்து உண்மையைக் கண்டு ஒரு முடிவிற்கு வருதல் ஆகும்.

இக்கால அறிவியல் வல்லுநர் அறிவியலுக்குப் பின் வரு மாறு விளக்கம் தந்தனர்.

‘உலக நிகழ்ச்சிகள் பல.
அவற்றைக் கூர்ந்து காணல்:
கண்டு ஒருங்கு சேர்த்தல்;
சேர்த்தவற்றை வகைப்படுத்தல்;
வகைப்படுத்தி அவற்றிடையே உள்ள
உள்ளார்ந்த தொடர்புகளை அறிதல்;
அறிந்தவற்றைக் கொண்டு அறியவேண்டிய
உண்மையைக் கருதிப் பார்த்தல்;
கண்டவற்றையும், கருதி அறிந்தவற்றையும் ஒழுங்கு செய்து முடிவு
காணலாம் அறிவுச் செயலே ‘அறிவியல்’

இவற்றைச் சுருக்கமாகச் சொன்னால்,

நிகழ்ச்சிகளைக் காணல் – அவற்றைத் தொகுத்தல் – அவற்றுள் தொடர்பு காணல் – கருதல் – உண்மை முடிவு கொள்ளல் என அமையும்.

இவற்றிலுள்ள செயற்பாடுகளைக் கூர்ந்து பார்த்தால் காணல், கருதல் இரண்டுந்தாம் நிலைக்களமான செயற் பாடுகள். மற்றவை இவையிரண்டிற்கும் துணை செய்த பவை. இன்றியமையா நிலைக்களமான காவல். கருதல் இரண்டும் தமிழ் அளவையியலின் இரண்டு படிகள். திருவள்ளுவர் இவற்றின் அடக்கமாக “அளவறிந்து’ என்று ‘அளவை நூ’லைக் குறித்தமை இங்கு நினைவு கூரத் தக்கது.

மேலே விளக்கம் கூறப்பட்ட அறிவியல் இக்கால அறிவியல் வளர்ச்சியில் இரண்டு பாகுபாடுகளாகக் கொள்ளப்படுகிறது.

ஒன்று “பட்டறிவு அறிவியல்” (Experimental Science)
இரண்டு, “முறை அறிவியல்” (Methodological Science)

பட்டறிவு அறிவியல்–.⁠அறிவியல் அறிஞர் தாம் தம், பட்டறிவில் காணும் நிகழ்ச்சிகளையும் அவற்றை வைத்துத் தாம் கருதல் (ஊகம்)களையும் கொண்டு ஆராயும் அறிவியல். முறை அறிவியல் ⁠பட்டறிவில் கண்ட நிகழ்ச்சிகளை; கருதல்களைப் பெறுவதற்கு உதவும் அறிவியல்.

இரண்டாவதான ‘முறை அறிவியலுள் இன்றியமையாத துறைகள் கணக்கியல், அளவையியல் கோட்பாட்டியல் (Philosophy) என்பன.

இவை இக்கால அறிவியல் நுணுக்கங்கள், இந்நுணுக்கங்களின் மையமான ‘அளவையியல்’ பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவரால் குறிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் பெருகிவரும் நுணுக்கங்களின்படியும் திருவள்ளுவர் குறிப்பு அடங்கியுள்ளமை ஒத்துப்பார்த்து அறிதற்கு உரியது. ஒத்துப் பார்ப்பதால் உண்டாகும் அறிவு திருவள்ளுவர் அறிவியல் அறிஞர்’ என்பதை ஏற்பதாகும்.

இரண்டு பாகுபாடுகளில் முதலாவதாகக் கண்ட ‘பட்டறிவு அறிவியல்’ திருவள்ளுவர் குறட்பாக்களில் எவ்வாறு பொதிந்துள்ளது என்பதைக் காணவேண்டும்.

(தொடரும்)

+++++

  1. அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம், உரைப்பாயிரம்.

2. மாங்குடி மருதனார், மதுரைக்காஞ்சி, 191.

3. பெருங்குன்றுார் கிழார்: பதிற்றுப்பத்து, பதிகம்-9-11.

4. காரியாசான், சிறுபஞ்சமூலம்: 91-1.