(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. நாட்டிற்கு ஐந்து – தொடர்ச்சி)

நோய் – பிணி
அறிவியல் துறைகள் 1. நோய்இயல், 2. உணவியல் 3. மருத்துவ இயல், 4. உடலிய உளவியல் – எனும் நான்கு இயல்கள் – இத்தலைப்பில் குறளிலிருந்து புலனாக்கப்படுகின்றன.


நோய் மாந்தர்க்கு உடலிலும் அமையும். உள்ளத்திலும் அமையும். அது மாந்தர்க்குப் பெருமளவில் உடன்பிறப்பு. ‘கருவிலே திருவுடைமை’ என்பது போன்று ‘கருவிலே நோயுடைமை’யும் உள்ளது. இக்குழந்தைக்குக் கருவிலேயே நோய்க்கூறு அமைந்தது ‘என்று இக்கால மருத்துவர் அறிந்து கூறுவர். இன்னும் ஆழமாக நோக்கினால் கருப்பைக்குள் இருக்கும் குழந்தையை ஆய்ந்து அதன் நோயைக் கணிக்கும் காலம் இது. மாந்தன் தோன்றிய காலத்திலேயே அவனுடன் நோயும் தோன்றியதாம். தோற்ற கால மாந்தனின் படிவங்கள் கிடைத்தவற்றில் நோய்க்குறிகள் தென்பட்டமை காணப்பட்டுள்ளது. எகித்தியப் படிவங்களில் இக்கால் நோயின் குறிகள் காணப்பட்டன. எனவே, நோய் மாந்தனுக்கு உடன்பிறப்பு, அதனால்தான் “உடன் பிறந்தே சொல்லும் வியாதி” என்றனர். நோய் இடம் பிடிக்க உடலில் இடந்தேடி அமைவது அதனால்தான் நோய்க்கு இடம் கொடேல் என்றார் ஒளவையார்.
நோய் உடலை நோக வைப்பது. ‘நொ’ என்றால் ’துன்பப்படு‘ என்று பொருள். இதுதான் ‘நோய்’ என்று வடிவெடுத்தது. இடம் பிடித்து உடலில் நின்று துன்பம் தரும். துன்பம் தரும் எத்தாக்கத்தையும் நோய் என்னும் சொல்லால் குறிக்கின்றோம். இந்நோயே உடலை இறுகப் பற்றிப் பிணித்துக் கொண்டு விலகாமல் அடம்பிடிக்குமானால் அது ‘பிணி’ எனப்படும். பிணித்து நிற்கும் நோய் பிணி. இது கடுமையானது; கொடுமையானது. இஃது இல்லாமை நாட்டுக்கு ஒர் அணி. இப்பிணியிலும் உடலைப் பற்றிப் பிணித்துக் கொண்டு நீங்காமல் தொடர்ந்து துன்பம் தருவன பல உள்ளன. நீரிழிவு, என்புருக்கி, நரம்பிமுப்பு முதலியன நெடுங்காலம் உறவாடித் துன்புறுத்துவன: இவற்றைத் திருவள்ளுவர் “ஓவாப் பிணி’ (734) என்றார். பிணிக்கும் நோய் இல்லாது நலத்துடன் வாழ்வதற்கென்றே திருவள்ளுவர் ‘மருந்து’ என்னும் ஓர் அதிகாரம் வகுத்து 10 குறட்பாக்களை வழங்கினார். இப்பத்துக் குறட்பாக்களிலும் நோயின் அறிவியற்கருத்துக்கள் உள்ளன.


இக்காலம் மருத்துவ அறிவியல் மிடுக்கோடு வளர்ந்து வருகிறது; நுணுக்கமான முறைகள் கொள்ளப்படுகின்றன. மருந்துகளில் அனைத்து வகையும் நாளுக்கு நாள் நுண்ணறிவின் ஆட்சிகளால் வளர்ந்து வருகின்றது. நாளுக்கொரு புதுமுறை கண்டறியப்படுகிறது. ஊசியை உடலில் குத்தி மருந்து செலுத்திய முறை மாறிக் குத்தாமலே மருந்தை உள்ளே செலுத்தும் முறை வந்துள்ளது. நெஞ்சகத்தாக்க நோய்க்கு மார்பை அறுத்துச் செய்யும் அறுவைப் பண்டுவம் (சிகிச்சை) மாறிவிட்டது. கால் நரம்பில் செயற்கை நுண்குழல் நரம்பைச் செலுத்தி, நெஞ்சகக் குழலில் படிந்துள்ள கொழுப்பைக் கரைக்கும் முறை வந்துள்ளது. எண்ணிப்பார்க்க முடியாத அணு துணுக்கங்கள் பிறந்துள்ளன. இவற்றால் மக்கட் கூட்டம் பழங்காலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறது.


முற்கால மாந்தரின் இறப்பு நூறு ஆண்டைத்தாண்டி வந்தது. இக்காலம் அந்நிலையை அடைந்து வருகிறது. முற்கால மாந்தரின் உயிர்வாழ் எல்லை ஒட்டுமொத்த வருத்தலாக எண்பதாண்டாக இருந்தது. இக்கால மருத்துவம் 28இல் இருந்ததை ஏறத்தாழ அறுபதுக்குக் கொண்டு வந்துள்ளது.


எனவே இக்கால மருத்துவ ஆட்சியில் எல்லையிலோ, பயனிலோ, பெருமையிலோ முற்கால மருத்துவ ஆட்சி முழுமையாக ஈடுகொடுக்க முடியாது.
ஆனாலும், இவற்றின் கூறுகள் முற்காலத்தில் இருந்தன என்பது உண்மை. அவற்றுள் சில திருவள்ளுவத்திலிருந்து இங்கு காணப்படுகின்றன.

  1. நோயின் காரணங்களை ஆராய்தல்;
  2. அக்காரணங்கள் செய்யும் உடல் அமைப்பு மாறுதல்களை ஆராய்தல்:
  3. காரணங்களையும் மாறுதல்களையும் எதிர்க்கும் முறைகளை ஆராய்தல்.
    இவை மூன்றையும் மருந்து அதிகாரக் குறட்பாக்களில் காண்கின்றோம். இவ்வதிகாரத்தில்,
    முதற்குறள்,
    வளிமுதலா (வளி, பித்தம், ஐ) எண்ணிய மூன்று
    மிகினும் குறையினும் நோய் செய்யும்

    என்று நோயைச் செய்யும் காரணிகளான வளியும், பித்தமும், சளியும் சமநிலையில் இல்லாமல் மிகுந்தாலும் நோய் உண்டாகும்; குறைந்தாலும் நோய் உண்டாகும் என்று (1) நோயின் காரணங்கள் ஆராய்ந்து காணப்பட்டன. இது நோய் இயலின் முதல் ஆய்வை உள்ளீடாகக் கொண்டது.
    அடுத்த ஆறு குறட்பாக்கள்,
    உண்பது செரித்ததை அறிந்து உண்ணல்;
    அளவறிந்து உண்ணல்;
    பசியெடுத்தபின் மாறுபாடில்லாத உணவை உண்ணல்;

மாறுபாடில்லாத உணவை உண்ணும் உடல்நலத்தால்
உடலிலுள்ள உயிர்க்கு ஊறுபாடு இல்லை;

மிக அதிகம் தின்றால் உடம்பில் நோய் நிலைக்கும்;

வயிற்றுத் தீயின் அளவறிந்து உண்ணவேண்டும்.


என உணவுகொள்ளும் அளவை வைத்து (2) அதனை ஏற்கும் உடல் நோயில்லா அமைப்பைப் பெறுக என்று விளக்குகின்றன. ஆறு குறட்பாக்களும் இக்கால நோய் இயலின் இரண்டாவது ஆய்வை உள்ளீடாகக் கொண்டவை.
இறுதி மூன்று குறட்பாக்களும்,
நோயை, நோயின் மூலத்தை அறிந்து மருந்து வழங்கல்,
மருத்துவம் கற்றவன் கருதிச் செய்யவேண்டியவை:
மருந்து நலம்பயப்பச் செய்பவை நான்கு-என விளக்குகின்றன. இவை நோய் இயலின் (3) நோயை எதிர்த்து முறியடிக்கும் வழியைச் சொல்கின்றன.
இவ்வாறாக ஒட்டுமொத்தமாகப் பத்துக் குறட்பாக் களும் இக்கால நோய் அறிவியலின் கருத்துகளை ‘நோய் இயல்’ அறியப்பட்ட ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குமுன் அறிவிக்கப்பட்டவை.


மருந்தும் மருத்துவமும் உடலில் பல இடங்களிலும் கி. மு. விலிருந்தே உள்ளன. மேலை நாட்டு அறிவியல் பாங்கில் முதன்முதலாக கி. மு. 400 அளவில் கிரேக்க அறிஞர் இப்போசிரேட்டெசு (Hippocrates) என்பார் கண்டறிந்தார். இவர் ‘நோயியல் தந்தை‘ எனப்படுபவர். பல அரிய புதுமைக் கருத்துகளை இவர் கண்டு கூறியிருப்பினும் நோய் போக்க மருந்தாக மந்திரச் செயலையும் ஏற்றுக் கருத்தறிவித்தார். பகுத்தறிவிற்கு ஒவ்வாத ‘மந்திர–மாந்திரிகம்’ அக்கால நோயியலின் கூறுகளாகவும் இருந்தன. இப்போதும் உலகிலும்- நம் மண்ணிலும் இந் நடைமுறை உள்ளது. (Medicine Man) என்பதற்கு ( நாகரிகமாந்தரின் மாய மந்திரவாதி’ என்று ஆங்கில அகர முதலிகளில் பொருள் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.


திருவள்ளுவரோ இதனைக் கொள்ளாதவர். பத்துக் குறட்பாக்களிலும் பிற இடங்களிலும் மந்திரமுறையைக் கூறவில்லை. இது திருவள்ளுவர் பகுத்தறிவோடு கூடிய அறிவியல் பாங்கினர் என்று காட்டுவதாகும்.


மருந்து என்னும் அதிகாரத்தின் பத்துக் குறட்பாக்கள்
நோய் பிறத்தல் (941)
வருமுன் காத்தல் (942-947)
வந்தபின் தீர்த்தல் (948-950) எனும் முறையில் அமைக்கப்பட்டுள்ளன.


நோய் பிறத்தல்
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
“(941)
என்னும் முதற்குறள் நோய் பிறத்தலுக்குக் காரணம் சொல்கிறது. இதில் பரிமேலழகர் முதலியோர் “மிகினும், குறையினும் என்றதற்கு ‘உணவு மிகுந்தாலும் குறைந்தாலும் என்று எழுதினர். பரிப்பெருமாளோ “வளி முதலிய மூன்று குறைந்தாலும்… (?) நோய் செய்யும்’ என்றார். ஆனால், குறளின் சொற்கிடக்கை வளி முதலிய மூன்று மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் செய்யும் என்ற பொருளையே கொள்ள வைக்கிறது. எனவே, வளி (வாதம்), பித்தம், ஐ (கோழை) என உடலில் அமைந்த மூன்று மிகுந்தாலும் நோய்; குறைந்தாலும் நோய்: சமநிலையில் அமையவேண்டும். அமைந்தால் நோய் இல்லை. எனவே, நோய்க்குக் காரணம் உடலில் வளி முதலிய மூன்றுந்தாம்.

இது நூற்றுக்கு நூறு தமிழ்க் கண்டுபிடிப்பு. மிகத் தொன்மையான கண்டுபிடிப்பு. இக் கண்டுபிடிப்பு தமிழில் பல நூல்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைக் குறிக்கத் தான் திருவள்ளுவர் “நூலோர்” என்று தமிழ் மருத்துவ நூலாரைக் குறித்தார். ஆனால், பரிமேலழகர் வளி முதலா எண்ணிய மூன்று’ என்பதற்கு “ஆயுள்வேதம் உடையாரால் வாதம் முதலாக எண்ணப்பட்ட மூன்று” என்று பொருள் எழுதினார். இது ஆயுள்வேத முறையாகப் பின்னர் கொள்ளப்பட்டது. இது தோற்றத்தில் தமிழ் மருத்துவ முறை. எவ்வாறென்றால் ‘ஆயுள் வேதம்’ கி. பி ஏழாம் நூற்றாண்டில்தான் உருப்பெற்றது. இது அதர்வண வேதத்தில் உள்ளதாகச் சிலர் கருதினர். அதர்வணத்தில வேறு வகைக்காக எழுந்ததை மருத்துவத்திற்குப் பொருத்தி இவ்வாறு கூறுவர். உண்மையில் வளி முதலா எண்ணிய மூன்றின் விளக்கம் தமிழில் தனிஉரிமைக் கருத்தாகும்.

(தொடரும்)