[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  05  தொடர்ச்சி]

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06

  தொல்காப்பியர் காலத் தமிழ்நாடு சேரர் சோழர் பாண்டியர் எனும் முக்குலத்தினரால் ஆளப்பட்டு அம் மூவர் பெயரால் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என அழைக்கப்பட்டு வந்துள்ளது.  கொங்குநாடு என்ற பிரிவோ தொண்டை மண்டிலம் என்ற நாடோ அன்று தோன்றிலது.  வடவேங்கடத்திற்குத் தெற்கே கன்னட நாடும் துளு நாடும் தோன்றில. பிற்காலத்தில் மலையாள நாடு என்று அழைக்கப்பட்டது, அன்று சேரநாடு எனும் பெயரோடு தமிழ்நாடாகவே இருந்தது.

இம் முப்பெரு நாடுகளும் பன்னிரண்டு நிலப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன என்பதும், அப்பகுதிகளில் செந்தமிழே மொழியாக வழங்கியது என்பதும் தொல்காப்பிய நூற்பா ஒன்றால்*அறியலாகும். ஆட்சி முறையால் மூன்று நாடுகளாக இருந்தபோதிலும், மொழியாலும் பண்பாட்டாலும் தமிழகம் ஒரே நாடாகத்தான் கருதப்பட்டு வந்துள்ளது. முழு உரிமை வாய்ந்த தனி நாடாக இருந்தபோதிலும் உலகின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது.

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” என்று பனம்பாரனார் கூறுவது காண்க.  புலவர்கள் நில இயற்கை வகையால் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனத் தமிழகத்தை நான்கு வகையாகப் பிரித்தனர்.  தமிழகத்தை நான்கு நிலமாகக்கொண்டு ஆராய்ந்த கண்ணோட்டத்துடன் உலகத்தையும் நோக்கினர்.  ஆதலின், உலகத்தை ‘நானிலம்’ என அழைத்தனர்.

காடும் காடு சார்ந்த இடத்தை முல்லை என்றும், மலையும் மலைசார்ந்த இடத்தைக் குறிஞ்சி என்றும், வயலும் வயல் சார்ந்த இடத்தை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த இடத்தை நெய்தல் என்றும் அழைத்தனர்.

பாலை நிலம் அன்று தோன்றப் பெறவில்லை போலும். அன்றியும் பாலை என்பது செயற்கையால் உண்டாகி, மீண்டும் மக்கள் உழைப்பால் மறையக் கூடிய இயல்பினது. ஆதலின், தமிழர், நிலைத்த பிரிவினுள் ஒன்றாக அதனைக் கருதிலர் என்று கொள்ளலாம்.

ஒரு நாடு எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதனைச் சங்ககாலத் தமிழர் நன்கு அறிந்திருந்தனர். ‘நாடு’ என்னும் சொல்லுக்கு ‘விரும்பு’, ‘தேடியடை’ என்னும் பொருள்கள் உள.  ஆதலின், மக்கள் விரும்புவதற்குரிய இடம், தேடிவந்து தங்குவதற்குரிய இடம் எதுவோஅதுவே நாடாகும்.  வளமற்ற வறண்ட வெற்றிடம் நாடாகும் தகுதியினையுடையது ஆகாது. அக்கால மெய்யுணர்வாளரும் அரசியல் அறிஞருமான வள்ளுவர் பெருமான் நாடுஎன்பது எவ்வாறு இருத்தல் வேண்டும் எனக்  கூறுவது எக்காலத்துக்கும் எல்லா நாடுகட்கும் மிகவும் பொருந்துவதாகும்.  அவர் கூறியுள்ளதாவது:

நாடு என்பது மக்களுக்கு வேண்டியனவற்றை யெல்லாம் தன்பால் பெற்றிருக்க வேண்டும்; அங்ஙனமின்றிப் பிற நாடுகளின் உதவியை என்றும் நாடிக் கொண்டிருக்கும் நாடு நாடாகாது.

அது, பெருஞ் செல்வமுடைமையால் பிறநாட்டு மக்களாலும் விரும்பத்தக்க சிறப்பினதாய் இருத்தல் வேண்டும்.

எவ்விதக் கேடுமின்றி நன்றாக விளையக் கூடியதாய் இருத்தல் வேண்டும்.

பிற நாட்டு மக்கள் புகலிடம் தேடி வந்த காலத்தில் அவர்களை ஏற்றுப் புரந்து அரசுக்கு வேண்டும் இறைப் பொருள் முழுவதையும் உளம் ஒத்துக் கொடுக்க வேண்டும்.

பகைவராலும் இயற்கையாலும் உண்டாகும் கேடுகள் அற்றும், கேடுகள் உண்டான போதும் செல்வம் குறையாத நிலையிலும் உள்ளதே சிறந்த நாடாகும்.

பெரிய நீர்நிலைகளும், மலைகளும், ஆறுகளும், உறுதிவாய்ந்த அரண்களும் நாட்டுக்கு இன்றியமையாத உறுப்புகளாகும்.

பிணி இன்மை, செல்வம், விளைபொருள்கள், இன்பம் நுகரும் வாய்ப்புகள், அச்சமின்றி வாழும் காவல் நிலை ஆகியவை நாட்டிற்கு அணிகளாகும்.

நாட்டு மக்களுக்கு வருத்தும் பசியும், நீங்காத பிணியும், அழிவை உண்டுபண்ணும் பகையும் இல்லாமல் வாழும் நாடே நாடாகும்.

நாட்டில் ஒன்றுக்கொன்று முரண்படும் பல குழுக்களும், நாட்டைக் கெடுக்கும் உட்பகையும், அரசுக்குத் தொல்லை தரும் கொல்வினைக் குறும்பரும் இருத்தல் கூடாது.

நாட்டில் என்றும் குறையாத விளைபொருள்களும், புதியன புனையத் தக்க அறிவியற் பெரியார்களும், நுகர்ச்சிப் பொருள்களில் குறைவற்ற செல்வர்களுமாக நிறைந்திருப்பதே நாடாகும்.

எல்லாவற்றாலும் சிறந்து, நல்லாட்சியை உடையதாகவும் நாடு இருத்தல் வேண்டும்.  இல்லையேல்  பயனற்றதாகும்.

இவ்வாறு திருவள்ளுவர் கூறியுள்ள குறிக்கோளுக்கு ஏற்ப நாட்டை அமைக்க மக்களும் மன்னரும் முயன்று உழைத்தனர்.

(தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்

அடிக்குறிப்பு:

  • *செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் (தொல்.எச்சம்-4)