வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி

இணைந்து நடத்தும்

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்

பன்னாட்டுக் கருத்தரங்கம்

இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 2/2

-முனைவர் க.தமிழமல்லன்

தலைவர், தனித்தமிழ் இயக்கம் 97916299799791629979

thamizhamallan03

‘’ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்  புடைத்து’’ (398)

இதில் ஒருமை எழுமை என்னுஞ் சொற்களுக்கு ‘ஒருபிறவி’,’ஏழுபிறவி’ என்று பொருளுரைத்தார். அவ்வாறு சொல்வது அறிவுக்கு ஒத்ததாக இல்லை என்று இலக்குவனார் சொன்னார்.

அவர் சொன்ன கருத்து ஒருமை-திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு

எழுமை-மிகுதியும்

“திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு கற்றகல்வி மிகுதியும் உறுதிதர வல்லது” என்று இலக்குவனார் உரைத்தது மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது, “இன்று திரைக்காட்சியும் கூத்தும் மாணவர்களின் உள்ளங்களை அலைக்கழிக்கின்றன. அவர்கள் கருத்துன்றிப்படிக்க இயலாமல் இடர்ப்படுகின்றனர். அவர்கள் ஒருமித்த உள்ளத்தோடு கற்க வேண்டும் எனத் தம் உரையில் கூறியுள்ளது உரைத்திறத்தை மட்டும் காட்டாது,thiruvalluvar01 மாணவர்கள் மேல் அவர்க்கிருக்கிருந்த நல்ல அக்கறையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஒருமை எழுமை என்னுஞ் சொற்களுக்கு வேறு பொருத்தமான விளக்கம் கூறும் உரையாசிரியர்கள் உளர்.

‘’ஒரு பருவத்தில் தான் கற்ற கல்வி ஒருவனுக்குத் தொடரும் பருவமெல்லாம் காப்புடையது’’

(திருக்குறள் தமிழமல்லன் உரை 2005,ப.83.)

‘’ஒருமை-ஒருப்பட்ட, எழுமை-பின்வரும் வாழ்நாள்கள்’’ என்பார் இளங்குமரனார் (திருக்குறள்வாழ்வியல்உரை ப.83)

‘’ஒருமை-ஓரிடம், எழுமை-பலவிடங்கள்’’ என்பார் புலவர் குழந்தை (திருக்குறள் குழந்தையுரை ப.151)

பிறவி என்னும் பொருளை ஏற்காமல் சொல்வதுதான் திருக்குறளைச் சரியாக விளங்கிக் கொண்டதற்கடையாளம்.

‘எழுமையும்’ என்பதற்கு ‘ஏழுவகை மாற்றங்கள்’ என்ற பொருளையும் இலக்குவனார் உரைத்துள்ளார். (குறள் 62 இன் உரை)

இலக்குவனார் உள்ளம்

திருக்குறளுக்கு உரை எழுதிய அவர் வெறும் உரையாசிரியராக மட்டும் தோன்றவில்லை. மன்பதை நலத்தில் சிறந்த அக்கறை கொண்டவராகவும் காணப்படுகிறார். அதற்காக அவர் துணிச்சலாகத் தம் கருத்துக்களை ஆங்காங்கு வெளிப்படுத்தத் தவறவில்லை.

‘’உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற் குண்டு‘’ (1281)

“கள்ளுக்கு ஒப்புமையாகக் காதலைக் கூறினார். அதனால் காதலும் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதை அறியலாம். காதலால் அழிந்தோர் பலர். அழிந்த அரசுகள் பல.” என்பார் இலக்குவனார். காதலுக்குக் கட்டுப்பாடு தேவை என்பதை அதை மிகுதியாகப் பாடிய பாவேந்தரும் கூறியிருப்பது இங்கு நினைக்கத்தக்கது.

இலக்கணம்

இலக்கணத்தின் துணைக் கொண்டு இலக்குவனார் திருக்குறளின் பல இடங்களை அழகாக விளக்குகிறார். சில இடங்களில் பரிமேலழகரின் இலக்கணக் குறிப்புகளை மறுத்தும் இருக்கிறார்.

‘’வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

மாலை அயர்கம் விருந்து’’ (1268)

‘’இதில் ‘வென்றீக’ என்பதில் ‘ஈக’ என்பதற்குப் பெறுக என்று பொருள்’’ உரைக்கிறார்.

‘ஈக’ என்பது தொல்காப்பியர் காலத்தில் முன்னிலை இடத்தில் வந்தது. இந்த மாற்றத்திற்கு எடுத்துக்காட்டாகத் தொல்காப்பிய நூற்பா ஒன்றையும் எடுத்துக் காட்டியுள்ளார். (தொல்.இடை.20) 1176 ஆம் குறள் உரையிலும் இத்தகு இலக்கணக் கருத்து உரைக்கப்படுகிறது.

???????????????????????????????

அரண்

திருக்குறளின் சிறப்பையும் அதன் புரட்சித்தன்மையையும் ஆரிய எதிர்ப்பையும் கருதி அதைத்

வள்ளுவர் வகுத்த அரசியல் - முன் அட்டை

தொடக்கமுதலே எதிர்த்த கூட்டம் இப்போதும் இருக்கிறது திருவள்ளுவர்க்கு எதிராகவும் திருக்குறளுக்கு எதிராகவும் தவறான நச்சுக்கதைகளையும் கருத்துக்களையும் அது வெளியிட்டு மகிழ்ந்து கொண்டு இருந்தது; இருக்கிறது. அண்மையில் சனவரி 19இல் புதுச்சேரியில் பேசிய தெ.ஞானசுந்தரமும் அத்தகு நச்சுக்கருத்தைக் கக்கினார். திருவள்ளுவரின் பிறப்புப் பற்றிய பொய்க்கதைகளைக் கட்டியுரைத்தது போலவே திருக்குறள் பற்றிய மூடக் கருத்துக்களையும் அத்தீயவர்கள் பரப்பினர். திருக்குறளின் மூன்று பால்களும் சுக்கிரநீதி, அர்த்த சாத்திரம், காமசூத்திரம் முதலிய வடமொழி நூல்களின் தழுவல் அவற்றைப் பார்த்துத்தான் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்று பொய்யுரைத்தனர். அவ்வரிசையில் சேர்ந்து கொண்ட ஞானசுந்தரம் அவற்றோடு மனுநீதி, பகவற்கீதை ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டார். திருவள்ளுவர் சாதி பற்றியும் நூல் பற்றியும் பொய்யுரையை அழுக்காற்றால் வெளிப்படுத்திய வ.வே.சு அய்யர் வழியை ஞானசுந்தரம் பற்றி இருப்பது அறக்கொடிது.

        இத்தகு கொடிய கருத்துக்களை இலக்குவனார் தம்  நூலில் தெளிவாக மறுத்துவிட்டார். ‘’காமத்துப் பால் காமசூத்திரத்தின் மொழிபெயர்ப்போ தழுவிய ஒன்றோ அன்று (ப.296) அதில் கூசும் சொல் ஒன்று கூட இல்லை.’’ என்பதைத் தெளிவாக்கி விட்டார். அப்படியானால் காமசூத்திரம் கூசும் தன்மை கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதுதானே பொருள்.

முறை வைப்பு

திருக்குறளை ஆராய்ந்தவர்களும் உரை வரைந்தவர்களும் அதன்முறை வைப்பை ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறார்கள். இலக்குவனாரும் அதற்கு நெறிவிலக்கானவர் அல்லர். காமத்துப்பால் முன்னுரையில் தம் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். காமத்துப்பாலில், இல்லறவியலின் நான்கு அதிகாரங்களைச் சேர்த்துவிட்டார். அவருடைய நூலில் மட்டும் காமத்துப்பால் 29அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும்.

        சில குறட்பாக்களை முறைமாற்றித் தம் நூலில் பிற்காலத்தில் கு.ச.ஆனந்தன், க.ப.அறவாணன் போன்றோரும் இத்தகு பணிகளைச் செய்து பழிசுமந்தனர். பொதுவாக உலகப்பொது மறையாக வழங்கும் திருக்குறளை உள்ளஅமைப்பிலே காட்டுவதுதான் சிறப்பாக இருக்கும்.ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணிகளை வெளிப்படுத்தும் போது படைப்புகளின் பின்னிணைப்பு இடங்களைப் பயன்படுத்திக் கொள்வது திருக்குறளின் தோற்றத்தில் குழப்பத்தையும் ஐயப்பாட்டையும் விளைக்காமல் இருக்கும். படிப்பவர்களுக்கும் அதனை ஆய்பவர்களுக்கும் உதவும் வகையில் குறட்பாக்களின் தொடர் எண்களையும் அதிகார அமைப்புகளையும் அப்படியே வைத்திருப்பது சிறப்பாக இருக்கும். மு.வ.வுக்கும் ஒரு கருத்து இருந்தது. திருக்குறளின் முதற் பாலாக இன்பத்துப்பாலும் அடுத்துப் பொருட்பாலும் இறுதியில் அறத்துப்பாலும் அமைந்திருக்க வேண்டும் என்னும் கருத்துக் கொண்டவர்அவர். ஆனால் தம் உரையில் அவ்வாறு செய்யாமல் உரைநடைநாலில் மட்டும் அங்ஙனம் செய்தார். பாவாணர் தம் ஆய்வால் திருக்குறளில் 18 வடசொற்களைக் கண்டறிந்தார். ஆனால் அவற்றை மூலநாலில்  திருத்தவில்லை. பின்னிணைப்பில் மாற்றுச்சொற்களை இட்டுப் பதிப்பித்துள்ளார்.

தனித்தமிழ்

        இலக்குவனாரின் தனித்தமிழ்ப்பற்று அவருடைய உரையில் பல இடங்களில் நன்றாக வெளிப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் வடசொற்களை நீக்கி எழுதியிருக்கிறார். தம் உரையில்   பிறரால் பிற சொற்கள் எனக் கருதப்படுகின்றனவற்றைத் தாம் தமிழ்ச் சொற்கள்  என ஆய்ந்து பயன்படுத்தியுள்ளார்.  தனித்தமிழில் ஈடுபாடு இல்லார் அங்ஙனஞ் செய்தல் இயலாது.

     வீரம்-மறம் என்று பயன்படுத்தியுள்ளார். அரண், படைச்செருக்கு முதலிய அதிகாரங்களில் இதைக் காணலாம். வீரம் என்ற சொல்லை முழுவதுமாக அவர் விலக்கவில்லை.ப.35

“எண்ணிய தேயத்துட் சென்று” என்றவிடத்தில் தேயம் என்று பயன்படுத்துகிறார். விளக்கம் சொல்லும் இலக்குவனார் தேயம் தனித்தமிழ்ச் சொல் என்றார். தேம்-தேஎம்-தேசம்-என ஆனதை எடுத்துக்காட்டியது மட்டுமன்றி தேயம் என்பதை வடசொல் என்று சொல்வது தவறு என்றும் தெளிவு படுத்தினார். இக்குறட்பா உரையில் பாவாணர் விளக்கம் தமிழ்மரபுரையில் கிடைக்கவில்லை. தண்டித்தல் என்பதற்கு மாற்றாக ஒறுத்தல் என்னும் சொல்லை அவர் வழங்குகிறார்.

கோட்டி என்பதுதான் கோஷ்டியாக மாறியுள்ளது என்று சொல்கிறார். ‘’கோட்டுதல் என்றால் வளைத்தல். வளைத்துக் கொள்ளப்பட்ட அவைக்குக் கோட்டி என்று பெயர் வந்த்து. பித்துக் கொண்டவர்களைக் கோட்டிக்காரர் என்பர் தென்பாண்டி நாட்டில்.’’ ப.81

        பிற்காலத்தில் வீரம், தண்டனை, தண்டம், தண்டித்தல் முதலியவை தனித்தமிழ்ச்சொற்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தனித்தமிழ் இயக்கத்தாரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குமுதம், அதிகம் முதலிய சொற்கள் சொல்லாய்வால் தனித்தமிழ் எனத் தெளிவுபடுத்தப்பட்டது போல மேற்குறித்த சொற்களும் தெளிவாக்கப்பட்டன.

என்னை முன்நில்லன்மின் தெவ்விர் பலர்என்ஐ

முன்நின்று கல்நின் றவர் (771)

இக்குறட்பாவில் வருகின்ற ஐ  என்பதிலிருந்து ஐயர் என்ற சொல்வந்தது என்ற உண்மையையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவ்வாறாக இலக்குவனாரின் திருக்குறள் உரை பலவகைகளிலும் சிறந்து விளங்குகிறது.

முடிவுரை

        திருக்குறள் உரையை இலக்குவனார் பல்துறைப் புலமையோடு எழுதியிருக்கிறார்.

        பரிமேலழகர் உரையைச் சில இடங்களில் மறுத்திருக்கிறார்.

        இலக்கணத்தின் துணையோடு பல குறட்பாக்களுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்.

        திருக்குறளை இழிவுபடுத்தும் முயற்சியை அவர் தடுத்திருக்கிறார்.

தனித்தமிழ்ச்சொற்களைப்பயன்படுத்துவதும் சொல்லாய்வால் அதை உறுதிப்படுத்துவதும் இப்பணியில் நிகழ்ந்திருக்கின்றன.

முறைவைப்பைச் சிலஇடங்களில் இலக்குவனார் மாற்றியிருக்கிறார்.

துணை நூல்கள்

இலக்குவனார், வள்ளுவர் கண்ட இல்லறம்

இலக்குவனார், வள்ளுவர் வகுத்த அரசியல்

புலவர் குழந்தை, திருக்குறள் குழந்தையுரை

இளங்குமரனார், திருக்குறள் வாழ்வியல்உரை

முனைவர் க.தமிழமல்லன், திருக்குறள் தமிழமல்லன் உரை

தேவநேயப்பாவாணர், திருக்குறள் தமிழ்மரபுரை

Call
Send SMS
Add to Skype
You’ll need Skype CreditFree via Skype