(16.03.14 இதழின் தொடர்ச்சி)

 Thirukural04

  ஓரறிவின்: ஓரறிவுள்ள உயிரினத்தை – சிறப்பாக மரத்தை, பயனுள்ளது, பயனற்றது என இரு வகையாகக் காண்கிறார் கவிஞர். உலகில் வாழும் மக்களும் அதற்கேற்ப இருவகையாகத் தோற்றமளிக்கின்றனர். இதுவன்றிப் பொதுவாக ஆரறிவு படைத்த மனிதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மரம் தாழ்ந்ததே. ஆதலால் மனித குண நலன்களில் குன்றிய யாவரும் பெரும்பாலும் மரமாகக் காட்சியளிக்கின்றனர். அன்பு இல்லாதோர் பாலை நிலத்துப் பட்ட மரமாகின்றனர். இங்கு குளிர்ந்த நீரும் நிழலும் அன்பிற்கும், இவை இரண்டும் அறவே தோன்றாத பாலை நிலம் ஈரமற்ற தன்மைக்கும், துளிர் என்றும் தோன்ற வழியின்றி வெறுமையாக உலர்ந்து நிற்கும் பட்டமரம் பயனற்ற உழைப்பற்ற தன்மைக்கும் உருவகங்களாகத் தோன்றுகின்றன. பாலை நிலத்து பட்ட மரத்தை எண்ணிய வள்ளுவர், ஊர் நடுவிலுள்ள நல்ல பழமரத்தையும் எண்ணிப்பார்க்கிறார். பயன்தரும் தன்மையால் பழம் செல்வமாகிறது. இது நன்மையின் உருவாய், உதவி செய்யும் உள்ளமுடைய, அன்புள்ள செல்வரின் உருவகமாகத் தோன்றுகிறது. பழம் மட்டுமின்றி, எல்லா உறுப்புகளும் மருந்தாகும், நன்மரமாகவும் உதவி செய்யும் செல்வர் தோற்றமளிக்கின்றனர். மாறாக, செல்வத்தை ஈட்டி காக்கும் உலோபி ஊர் நடுவே நச்சுப் பழம் பழுக்கும் பயனற்றமரம். இவ்வாறு நச்சுப் பழம் பழுக்கும் மரத்தை, சினத்தை உள்ளடக்கி, இன்னா செய்தாரை ஒறுத்து, அவரது தீயமனப் பான்மையை அழிக்கும் நற்சின்னமாகக் காண்கிறார் பிளேக்கு என்ற ஆங்கிலக் கவிஞர்! அவரது பாடல் கிருத்துவ மதத் தத்துவமான மன்னிப்பின் மாண்பைக் காட்டும் உருவகப் பாடலாகும்.

  இப்பாடல் பின்வருமாறு:

I was angry with my friend:

I told my wrath, my wrath did end.

I was angry with my foe:

I told it not, my wrath did grow.

And I watered it in fears,                5

Night and morning with my tears;

And I sunned it with smiles,

And with soft deceitful wiles.

And it grew both day and night,

Till it bore an apple bright;             10

And my foe beheld it shine,

And he knew that it was mine,

And into my garden stole

When the night had veiled the pole:

In the morning glad I see                15

My foe outstretched beneath the tree.

   பொதுவாக ஊக்கமில்லாததோரும், கண்ணோட்ட மில்லாதோரும், மக்கட் பண்பு இல்லாதோரும் ஓரறிவுடைய மரமேயாவர். பழத்தில் சிறந்தது ‘காழில் கனி’ – விதையில்லாதது. இனிமையைக் குலைக்கும் விதை ஒன்றும் இல்லாததால் இப்பழம் இருவரின் மனம் ஒப்பிய காதல் வாழ்க்கையின் முழு இன்பத்திற்குப் பொருளாகிறது. உண்ணக்கூடிய பழம் மிகப் பழுத்தாலும் அழுகிவிடுகிறது. இது பிணக்கு என்று சிறு சிறு விதையும் இல்லாது அழுகிய காமமாக உருவெடுக்கிறது! இவ்வாறே முற்றாத காயும் பிணக்குத் தோன்றாத காமத்திற்கு உருவகமாகிறது, பழத்தைக் காலமறிந்து பறித்து உண்ண வேண்டும். காமத்திற்குச் சுவையூட்டுவது பிணக்கு. அதைக் காலமறிந்து காமத்துடன் இணைத்து இன்புறுதல் வேண்டுமென்பதை இந்தக் காய் கனி உருவகம் நன்றாக எடுத்துக் காட்டுகிறது. மேலும் காய் கடுஞ் சொல்லாகவும், கனி இனிய சொல்லாகவும் கூறப்படுகின்றது.

   இனி, மரத்தில் ஏறுதலும், மரத்தையோ, கொடியையோ வெட்டுவதும் சில குறட்பாக்களில் உருவகங்களாக அமைகின்றன. நுனிக்கொம்பில் ஏறுதல் உயிருக்குத்தீங்கு. அதையும் கடந்து மேலும் ஏற முனைபவர் தன் வலிமையறியாத மூடராவர். உயர்ந்துள்ள மரக்கிளை உயிர்க்கு ஊறு செய்யும் சின்னமாகத் தோன்றுகிறது. இதை மனத்திற் கொண்டு பின்வரும் குறளைக் காண்போம்.

‘‘கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

கோடு கோடேறும் என் நெஞ்சு’’ (1264)

காதல் நோயால் வருந்தும் தலைவி தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற காதலனை எண்ணி, தனது நெஞ்சம் மரக்கிளைமேலும் ஏறிப் பார்ப்பதாகச் சொல்லுகிறாள். மரக்கிளை உயரே இருப்பது; நுனிக்கொம்பு; காதல் நெஞ்சம் அங்கு ஏறுகையில், தோன்றும் தீங்கையும் மதியாது, உயிரையும் ஓம்பாது, மேலே மேலே உணர்ச்சிப் பெருக்கோடு தாவிச் செல்கிறது.காம வயப்பட்ட காதலியின் ஆர்வத்தை எவ்வளவு எளிதாக இம்மரக்கிளை உருவகத்தின் மூலம் திருவள்ளுவர் காட்டுகிறார்! முள் நிறைந்த மரமும் தீங்கின் வடிவமாகிறது. இது பகை உருக்கொள்கிறது. பகையை முதிருமுன் அழிக்க வேண்டும். அவ்வாறே முள் மரத்தை இளையதாக இருக்கும்பொழுதே வெட்டி வீழ்த்த வேண்டுமென்கிறார் கவிஞர். இங்கு முட்கள் பகைக்கும், தீமைக்கும் உருவகங்களாக நிற்கின்றன. இவ்வாறே செல்லி என்ற ஆங்கிலக் கவிஞனும் ‘‘வாழ்க்கையில் தோன்றும் முட்களின் மீது வீழ்ந்து இரத்தம் வடிக்கின்றேன் நான்’’ என்று சொல்லுகிறான். மேலும் பகையைத் தோன்றுங் காலத்தில் அழிக்க வேண்டுமென்ற இக்கருத்து, ஆங்கிலத்திலுள்ள ‘‘மொட்டாக இருக்கையில் அழி’’ (nip in the bud) என்ற வழக்கை ஒத்திருப்பதைக் காணலாம். இளையதான முள்மரத்தை எளிதில் வெட்டலாம்; ஆனால் முதிர்ந்தபின் அதை வெட்டி வீழ்க்க இயலாது என்று சொன்ன வள்ளுவர், பின்னர் நன்றாக முதிர்ந்து, பருத்து வளர்ந்த அடிமரத்தையும் வீழ்க்கும் கோடரியையும் எண்ணிப் பார்க்கிறார். பருத்த அடிமரம், மண்ணில் ஆழப்புதைந்த வேருடன், பண்பும் உயர்வும் உள்ள பழம் பெருங் குடும்பத்தின் உருவெடுக்கிறது. ஆனால் எத்துணை பெரிய மரமாயினும் கோடரியால் வெட்டிவிடுகிறார்களே! வாழ்வில் உடனிருந்து தாங்கவல்ல நல்ல ஆள் இல்லாத குடி, அடிமரம் போல் தாழ்த்துப் பருத்ததாயினும், துன்பம் வருங்கால் வீழ்ந்து விடுகிறது.

(தொடரும்)

–          குறள்நெறி :  தை 19. தி.ஆ.1995 / 1.2.1664