திருக்குறள் அறுசொல் உரை 105. நல்குரவு : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 104 உழவு தொடர்ச்சி)
திருக்குறள் அறுசொல் உரை
02. பொருள் பால்
13. குடி இயல்
அதிகாரம் 105. நல்குரவு
உணவு,உடை, உறைவிடம் போன்றவை
எதுவும் இல்லாத ஏழ்மைநிலை.
- இன்மையின் இன்னாத(து) யா(து)….?எனின், இன்மையின்
இன்மையே, இன்னா தது.
ஏழ்மையைவிடக், கொடிது யாது….?
ஏழ்மையே எழ்மையினும் கொடிது.
- இன்மை எனஒரு பாவி, மறுமையும்,
இன்மையும் இன்றி வரும்.
வறுமைக் கொடும்பாவி, எப்பிறப்பிலும்
தொடரும்; தொடர்ந்து வருத்தும்.
- தொல்வரவும், தோலும் கெடுக்கும், தொகைஆக,
நல்குரவு என்னும் நசை.
குடிப்புகழை, வடிவ அழகை,
வறுமை மொத்தமாய்க் கெடுக்கும்.
- இல்பிறந்தார் கண்ணேயும், இன்மை, இளிவந்த
சொல்பிறக்கும், சோர்வு தரும்.
நல்ல குடியாரிடமும் ஏழ்மையால்,
இழிசொல், தளர்ச்சி பிறக்கும்.
- நல்குரவு என்னும் இடும்பையுள், பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
வறுமைத் துன்பத்தொடு, பலவகைத்
துன்பங்களும் வந்து தோன்றும்.
- நல்பொருள் நன்(கு)உணர்ந்து சொல்லினும், நல்கூர்ந்தார்
சொல்பொருள், சோர்வு படும்.
நல்கருத்தை நன்குஉணர்ந்து சொல்லினும்,
ஏழையின் சொற்கள் எடுபடா.
- அறம்சாரா நல்குரவு, ஈன்றதாய் ஆயினும்,
பிறன்போல் நோக்கப் படும்.
நேர்மையொடு வாழாத ஏழையான்,
ஈன்ற தாய்க்கும் அயலான்.
- இன்றும் வருவது கொல்லோ….? நெருநலும்,
கொன்றது போலும் நிரப்பு.
நேற்றும் கொல்வதுபோல் வந்தது;
இன்றும் அவ்வறுமை வந்துவிடுமோ…..?
- நெருப்பின்உள் துஞ்சலும் ஆகும்; நிரப்பின்உள்,
யா(து)ஒன்றும் கண்பா(டு) அரிது.
நெருப்புக்குள் தூங்கலாம்; வறுமைக்குள்
எவர்க்கும் கண்மூடல் கடினம்.
- துப்பர(வு) இல்லார், துவரத் துறவாமை,
உப்புக்கும், காடிக்கும் கூற்று.
முற்றும் துறவாத வறியவரால்,
உப்புக்கும், கூழுக்கும் கேடுதான்.
பேரா.வெ.அரங்கராசன்
Leave a Reply