(திருக்குறள் அறுசொல் உரை – 107. இரவு அச்சம் தொடர்ச்சி)

attai_kuralarusolurai

திருக்குறள் அறுசொல் உரை
02. பொருள் பால்
13. குடி இயல்

அதிகாரம் 108. கயமை

மானுட அறங்களைப் பின்பற்றாத

கீழ்மை மக்களது இழிதன்மை.

 

  1. மக்களே போல்வர் கயவர்; அவர்அன்ன

      ஒப்பாரி யாம்கண்ட(து) இல். 

மக்கள்போல், தோன்றும் கயவரோடு

ஒப்பாவார், எவரும் இலர்.

 

  1. நன்(று)அறி வாரின், கயவர் திருஉடையார்;

      நெஞ்சத்(து) அவலம் இலர்.

நல்லாரைவிடக் கீழோர் பேறுஉடையார்;

ஏன்எனில், கீழோர் கவலைப்படார்.

 

  1. தேவர் அனையர் கயவர், அவரும்,தாம்,

      மேவன செய்(து)ஒழுக லான்

விரும்பியதை எல்லாம் செய்வதால்,

கயவரும், தேவரைப் போன்றாரே.

 

  1. அகப்பட்டி ஆவாரைக் காணின், அவரின்

      மிகப்பட்டுச், செம்மாக்கும் கீழ்.

தம்மைவிடவும், இழிந்தாரைக் கண்டால்,

கயவர் பெருமை கொள்வார்.

 

  1. அச்சமே, கீழ்களது ஆசாரம்; எச்சம்,

      அவாஉண்டேல் உண்டாம் சிறிது.

அச்சுறுத்தலால், புகழ்ஆசையால், கீழோர்

கொஞ்சம் ஒழுக்கமாய் நடக்கலாம்.

 

  1. அறைபறை அன்னர் கயவர், தாம் கேட்ட

      மறை, பிறர்க்(கு) உய்த்(து)உரைக்க லான்

இழிவுச் செய்திகளைப், போய்ப்பரப்பும்

கீழ்மக்கள், முரசு போன்றவர்.

 

  1. ஈர்ங்கை விதிரார் கயவர், கொடி(று)உடைக்கும்

      கூன்கையர் அல்லா தவர்க்கு.

கன்னத்தை உடைப்போர்க்கே, கீழோர்,

எச்சில் கையையும் உதறுவார்.

 

  1. சொல்லப் பயன்படுவர், சான்றோர்; கரும்புபோல்,

      கொல்லப் பயன்படும், கீழ்.

சொன்னவுடன் பெரியாரும், துன்பம்

கொடுத்தால், கீழாரும் உதவுவார்.

 

  1. உடுப்பதூஉம், உண்பதூஉம் காணின், பிறர்மேல்,

      வடுக்காண வற்றாகும் கீழ்.

உண்டும், உடுத்தியும் வாழ்வார்மேல்,

கீழ்மக்கள் குற்றங்களைச் சுமத்துவார்.

 

  1. எற்றிற்(கு) உரியர் கயவர்…..? ஒன்(று) உற்றக்கால்,

      விற்றற்(கு) உரியர் விரைந்து.

 சிக்கலிலிருந்து விடுபடக், கீழ்மக்கள்,

தம்மையே விரைந்து விற்பார்.

பேரா.வெ.அரங்கராசன்