(திருக்குறள் அறுசொல் உரை: 115. அலர் அறிவுறுத்தல் தொடர்ச்சி)

 

திருக்குறள் அறுசொல் உரை

3. காமத்துப் பால் 

15.கற்பு இயல்  

  1. பிரிவு ஆற்றாமை                            

தலைவனது பிரிவைத் தாங்காது.

தலைவி வருத்ததை வெளியிடல்

             (01-10 தலைவி சொல்லியவை)

  1. செல்லாமை உண்டேல், எனக்(கு)உரை; மற்றுநின்

      வல்வரவு, வாழ்வார்க்(கு) உரை.

பிரியாமை உண்டேல் சொல்லு;

பிரிவதை வாழ்வாரிடம் சொல்லு,

 

  1. இன்கண் உடைத்(து),அவர் பார்வல்; பிரி(வு)அஞ்சும்

      புன்கண் உடைத்(து)ஆல், புணர்வு.

அவர்பார்வை, இனிது; நீள்கூடலோ,

பிரிவு அச்சம் தருகிறது.

 

  1. அரி(து)அரோ தேற்றம், அறி(வு)உடையார் கண்ணும்,

      பிரி(வு)ஓர் இடத்(து)உண்மை யான்.

அறிந்தோரிடமும் பிரிவு உண்டு;

அவரைத் தெளிதலும் கடினமே.

 

  1. “அளித்(து),அஞ்சல்” என்(று)அவர் நீப்பின், தெளித்தசொல்

      தேறியார்க்(கு) உண்டோ தவறு?

“அஞ்சாதே!” என்றவரே பிரிந்தால்,

நம்பியவரிடம் தவறு உண்டோ?

 

  1. ஓம்பின், அமைந்தார் பிரி(வு)ஓம்பல்; மற்(று)அவர்

      நீங்கின், அரி(து)ஆல் புணர்வு.

பிரிவினைத், தடுக்க; பிரிந்தால்,

மறுபடியும் கூடுதல் கடினம்.

 

  1. பிரி(வு)உரைக்கும் வன்கண்ணர் ஆயின், அரி(து),அவர்

      நல்குவர் என்னும் நசை.

பிரிவைச் சொல்லும் கொடியராயின்,

மறுபடியும் கூடுதல் கடிது.

 

  1. துறைவன் துறந்தமை தூற்றாகொல், முன்கை

      இறைஇறவா நின்ற வளை?

கழலும் வளையல்களே, காதலர்

பிரிவை, ஊர்அறியக் காட்டும்.

 

  1. இன்னா(து), இனன்இல்ஊர் வாழ்தல்; அதனினும்

      இன்னா(து), இனியார்ப் பிரிவு.

       உறவுஇல்லா ஊரில் வாழ்வதினும்,

இனியர் பிரிவே, நனிதுயர்.

 

  1. தொடின்சுடின் அல்லது, காமநோய் போல,

      விடின்சுடல் ஆற்றுமோ தீ?

தொட்டால் சுடும்தீ, தொடாவிட்டாலும்,

காதல்நோய் போலச் சுடுமோ?.

 

  1. அரி(து)ஆற்றி, அல்லல்நோய் நீக்கிப், பிரி(வு)ஆற்றிப்,

      பின்இருந்து, வாழ்வார் பலர்.

பிரிவைத் தாங்கித், துயர்நீக்கிப்,

பின்னும், உயிர்வாழ்வார் பலர்.

பேரா.வெ.அரங்கராசன்