திருக்குறள் அறுசொல் உரை : 118. கண் விதுப்பு அழிதல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 117. படர் மெலிந்து இரங்கல் தொடர்ச்சி)
திருக்குறள் அறுசொல் உரை
3. காமத்துப் பால்
15.கற்பு இயல்
- கண் விதுப்பு அழிதல்
காதலனைக் காணும் வேட்கையால்,
காதலியின் கண்கள் துடித்தல்.
(01-10 தலைவி சொல்லியவை)
- கண்தாம் கலுழ்வ(து), எவன்கொலோ? தண்டாநோய்,
தாம்காட்ட யாம்கண் டது.
தீராத்துயர் ஆக்கிய கண்களே!
நீங்கள், அழுவது ஏனோ?
- தெரிந்(து)உணரா நோக்கிய உண்கண், பரிந்(து)உணராப்
பைதல் உழப்ப(து) எவன்?
விளைவை ஆராயாமல் கண்டகண்,
பிழைஉணராமல், துன்புறல் ஏன்?
- கதும்எனத் தாம்நோக்கித், தாமே கலுழும்;
இது, நகத் தக்க(து) உடைத்து.
நீயே பார்த்துவிட்டு நீயே
அழுவது, சிரிப்புக்கு உரியது.
- பெயல்ஆற்றா, நீர்உலந்த உண்கண், உயல்ஆற்றா,
உய்(வு)இல்நோய், என்கண் நிறுத்து.
பொறுக்க முடியாத துன்பத்தால்,
கண்கள், அழுதுஅழுது வறண்டன.
- படல்ஆற்றா; பைதல் உழக்கும், கடல்ஆற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.
கடலினும், பெரிய காமநோயைக்
கண்கள், தாங்காமல் துன்புறும்.
- ஓஒ இனிதே! எமக்(கு)இந்நோய் செய்தகண்,
தாஅம் இதற்பட் டது.
காதல் துன்பம் செய்கண்களும்,
துன்பத்தில் மாட்டிக்கொண்டது, மகிழ்ச்சியே.
- உழந்(து)உழந்(து) உள்நீர் அறுக, விழைந்(து)இழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்.
வேண்டியவரைக் கண்ட கண்கள்,
கண்ணீர் வற்றும்வரை அழட்டும்.
- பேணாது பெட்டார், உளர்மன்னோ? மற்(று),அவர்க்
காணாது, அமை(வு)இல கண்.
மனத்தால் விரும்புவார்போல் நடிக்கும்
காதலரைக் காணாக்கண்கள் தூங்கா.
- வாராக்கால் துஞ்சா; வரின்துஞ்சா; ஆயிடை,
ஆர்அஞர் உற்றன கண்.
வாராவிடினும், வரினும், கண்கள்
தூங்கா; துன்பமும் நீங்காது.
- மறைபெறல் ஊரார்க்(கு) அரி(து)அன்(று)ஆல், எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
தம்பட்டம் அடிக்கும் எம்போல்
கண்ணாரிடமிருந்து, கமுக்கம் பெறலாம்.
பேரா.வெ.அரங்கராசன்
Leave a Reply