திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி தொடர்ச்சி)
திருக்குறள் அறுசொல் உரை
- காமத்துப் பால்
15.கற்பு இயல்
- நினைந்தவர் புலம்பல்
இருவரும் கூடிப்பெற்ற இன்பத்தைப்,
பிரிவினில் நினைந்து புலம்புதல்.
(01-02 தலைவன் சொல்லியவை)
- உள்ளினும், தீராப் பெருமகிழ் செய்தலால்,
கள்ளினும், காமம் இனிது.
காதலை, நினைத்தாலே இனிக்கும்;
கள்ளைவிடவும், காதலே இனிக்கும்.
- எனைத்(து)ஒன்(று) இனிதேகாண், காமம்;தாம் வீழ்வார்
நினைப்ப, வருவ(து)ஒன்(று) இல்.
காதலியை நினைத்தாலே துன்பம்
வாராதே; காதல்தானே இனிது.
[03-10 தலைவி சொல்லியவை]
- நினைப்பவர் போன்று, நினையார்கொல்? தும்மல்
சினைப்பது போன்று, கெடும்.
தும்மல் வருவதுபோல் தோன்றி,
வராதுபோல், நினைப்பார்போல், நினையாரோ….?
- யாமும் உளேம்கொல், அவர்நெஞ்சத்(து)? எம்நெஞ்சத்(து)
ஓஒ….! உளரே அவர்.
காதலர் நெஞ்சுள் இருக்கிறேனா?
எனது நெஞ்சுள் இருக்கிறாரே!
- தம்நெஞ்சத்(து) எம்மைக் கடிகொண்டார்; நாணார்கொல்
எம்நெஞ்சத்(து) ஓவா வரல்?
தம்நெஞ்சுள் வரவிடாதார், எம்நெஞ்சுள்
வருதற்கு வெட்கம் கொள்ளாரோ?
- மற்று,யான் என்உள்ளேன் மன்னோ? அவரொடு,யான்
உற்றநாள் உள்ள, உளேன்.
இன்னும், இருக்கின்றேன்; எதனால்?
இன்புற்ற நாள்களை நினைப்பதனால்.
- மறப்பின் எவன்ஆவன் மன்கொல்….? மறப்(பு)அறியேன்;
உள்ளினும், உள்ளம் சுடும்.
காதலரை மறந்தால் என்னதான்
ஆவேனோ? அந்நினைப்பே சுடுமே!
- எனைத்து நினைப்பினும், காயார்; அனைத்(து)அன்றோ
காதலர் செய்யும் சிறப்பு?
காதலரின் சிறப்பே, எத்தனை
முறைகள் நினைத்தாலும், சினவாமை,
- விளியும்என் இன்உயிர், “வே(று)அல்லம்” என்பார்
அளிஇன்மை, ஆற்ற நினைந்து.
“ஒருவருக்குள் ஒருவர்” என்பார்தம்
அருள்இன்மையை நினைத்தால், உயிர்போம்.
- விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்,
படாஅதி, வாழி! மதி.
பிரிந்தாரைக் காணற்கு வசதியாக,
நிலவே! மறையாதே! நில்.
பேரா.வெ.அரங்கராசன்
Leave a Reply