(திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல் :  தொடர்ச்சி)

 

திருக்குறள் அறுசொல் உரை

3. காமத்துப் பால்

15.கற்பு இயல்

122. கனவு நிலை உரைத்தல்

 

தலைவி, தான்கண்ட கனவு

நிலைகளை, எடுத்து மொழிதல்.

 

(01-10 தலைவி சொல்லியவை)

  1. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு,

      யாதுசெய் வேன்கொல் விருந்து?

காதலர் வரவைக் கூறிய

கனாத்தூதுக்கு, என்ன விருந்திடுவேன்?

 

  1. கயல்உண்கண், யான்இரப்பத் துஞ்சின், கலந்தார்க்(கு),

      உயல்உண்மை சாற்றுவேன் மன்.

கண்கள் தூங்கின், நான்வாழ்வதைக்

காதலர்க்குக் கனாவில் கூறுவேனே!

 

  1. நனவினால் நல்கா தவரைக், கனவினால்

      காண்டலின், உண்(டு)என் உயிர்.

நனவில் கூடாத காதலரைக்,

கனவில் காண்பதால்தான், வாழ்கிறேன்.

 

  1. கனவினான் உண்டாகும் காமம், நனவினான்

      நல்காரை நாடித் தரற்கு

நேரில் கூடாதவரைக் கனவுதான்,

தேடிக் கொணர்ந்து கூட்டுவிக்கும்.

 

  1. நனவினால், கண்டதூஉம், ஆங்கே, கனவும்தான்,

      கண்ட பொழுதே இனிது.

நனவில் கண்டபோதும், இன்பம்;

கனவில் கண்டபோதும், இன்பம்.

 

  1. நன(வு)என ஒன்(று)இல்லை ஆயின், கனவினால்

      காதலர், நீங்கலர் மன்.

விழிப்புஎன ஒன்று இல்லைஎன்றால்,

கனவில் காதலர் நீங்கமாட்டார்.

 

  1. நனவினால் நல்காக் கொடியார், கனவினால்

      என்எம்மைப் பீழிப் பது?

நேரில் இன்புறுத்தாத கொடியார்,

கனாவில் துன்புறுத்தல் ஏனோ….?

 

  1. துஞ்சும்கால் தோள்மேலர் ஆகி, விழிக்கும்கால்,

      நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

தூங்கும்போது தோள்மேலும், விழிக்கும்போது

உள்ளத்தின் உள்ளும், இருப்பார்.

 

  1. நனவினால் நல்காரை நோவர், கனவினால்

      காதலர்க் காணா தவர்

கனாவில் காணாதார்தான், நேரில்

கூடாத காதலரை நொந்துகொள்வார்.

 

  1. ”நனவினால் நம்நீத்தார்” என்பர்; கனவினால்,

      காணார்கொல் இவ்வூர் அவர்?

“பிரிந்தார்”எனப் பழிப்பார், “கனாவில்

          என்னோடுதான் அவர்”எனக் காணாரோ?

பேரா.வெ.அரங்கராசன்