திருக்குறள் அறுசொல் உரை : 124. உறுப்பு நலன் அழிதல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் தொடர்ச்சி)
திருக்குறள் அறுசொல் உரை
- காமத்துப் பால்
15.கற்பு இயல்
124.உறுப்பு நலன் அழிதல்
பிரிவைப் பொறாத தலைவியது
கண்,தோள் நெற்றிஅழகு கெடுதல்.
(01-07 தலைவி சொல்லியவை) .
- சிறுமை நமக்(கு)ஒழியச், சேண்சென்றார் உள்ளி,
நறுமலர் நாணின கண்.
பிரிவால் அழகுஇழந்த கண்கள்,
அழகுக்குவளை கண்டு வெட்கும்.
- நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்,
பசந்து பனிவாரும் கண்.
நிறம்மாறி நீர்சிந்தும் கண்கள்,
பிரிவுத்துயரைச் சொல்லுவ போலும்.
- தணந்தமை சால அறிவிப்ப போலும்,
மணந்தநாள் வீங்கிய தோள்.
கூடலில் பருத்த தோள்கள்
மெலிவது, பிரிவை அறிவிக்கவோ?
- பணைநீங்கிப், பைந்தொடி சோரும், துணைநீங்கித்,
தொல்கவின் வாடிய தோள்.
பிரிவால், தோள்களும் அழகினை
இழக்கும்; வலையல்களும், கழலும்.
- கொடியார் கொடுமை உரைக்கும், தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
வளையல்களும், வாடும் தோள்களும்,
காதலரின் கொடுமையைக் கூறும்.
- தொடியொடு தோள்நெகிழ நோவல், அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
வளையல்,தோள் நெகிழக் கண்டோர்,
அவரைப் பழிப்பதால் வருந்துவேன்.
- பாடு பெறுதியோ? நெஞ்சே! கொடியார்க்(கு)என்
வாடுதோள் பூசல் உரைத்து.
தோள்மெலிவுத் துயரை, அவர்க்குக்
கூறி, நெஞ்சே! பெருமைப்படுதியோ?
(08-10 தலைவன் சொல்லியவை)
- முயங்கிய கைகளை ஊக்கப், பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
தழுவும் கைகளைத் தளர்த்தியதும்,
தலைவி நெற்றியில் பசலை.
- முயக்(கு)இடைத் தண்வளி போழப், பசப்(பு)உற்ற,
பேதை பெருமழைக் கண்.
அணைப்பிடைக் குளிர்ந்த காற்று
புகுந்ததும், கண்களில் நிறமாற்றம்.
- கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே,
ஒள்நுதல் செய்தது கண்டு.
நெற்றியின் பசலையைக் கண்டு,
கண்களின் பசலை துன்புற்றது.
பேரா.வெ.அரங்கராசன்
Leave a Reply