(திருக்குறள் அறுசொல் உரை; 125. நெஞ்சொடு கிளத்தல் தொடர்ச்சி)

 

திருக்குறள் அறுசொல் உரை

 3.  காமத்துப் பால்
 
 15.   கற்பு இயல்

   126.  நிறை அழிதல்

மனத்துயரை அடக்க முடியாமல்,

தலைவி வாய்விட்டுப் புலம்புதல்.

 

 (01-10 தலைவி சொல்லியவை)

  1. காமக் கணிச்சி உடைக்கும், நிறைஎன்னும்

      நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

நாணத்தாழ்ப்பாள் கொண்ட கற்புக்கதவைக்,

காதல்எனும் கோடரி உடைக்கும்.

 

  1. காமம்என ஒன்றோ? கண்இன்(று),என் நெஞ்சத்தை,

      யாமத்தும் ஆளும் தொழில்.

இரக்கம்இலாக் காதல், என்நெஞ்சை,

நள்ளிரவிலும் அடக்கி ஆளும்.

 

  1. மறைப்பேன்மன் காமத்தை யானோ? குறிப்(பு)இன்றித்,

      தும்மல்போல் தோன்றி விடும்.

எப்படித்தான் காதலை மறைப்னோ?

தும்மல் போலத் தோன்றுதே!

 

  1. “நிறைஉடையேன்” என்பேன்மன் யானோ,என் காமம்

      மறைஇறந்து மன்று படும்.

உறுதியேன்” என்றாலும், என்காதல்

ஒளியாது, ஊரெல்லாம் உலாவுதே!

 

  1. செற்றார்பின் செல்லாப் பெரும்தகைமை, காமநோய்

      உற்றார் அறிவ(து)ஒன்(று) அன்று.

வெறுத்தார்பின் செல்லா மனஉணர்வை,

காதல் துயரத்தார், அறியார்.

 

  1. செற்றவர் பின்சேறல் வேண்டி, அளித்(து)அரோ!

      எற்(று)என்னை உற்ற துயர்.

வெறுத்தார்பின் செல்ல விரும்பும்

என்துயரம், ஐயோ! கொடியது.

 

  1. நாண்என ஒன்றோ? அறியலம், காமத்தால்

      பேணியார் பெட்ப செயின்.

காதலர் விரும்பியபடி நடக்கும்

போது நாணத்தை அறியோம்.

 

  1. பல்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ?நம்

      பெண்மை உடைக்கும் படை.

மாயம் செய்காதலர்தம் பணிவுச்சொல்

என்பெண்மையை உடைக்கும் கருவி.

 

  1. “புலப்பல்” எனச்சென்றேன்; புல்லினேன், நெஞ்சம்

      கலத்தல் உறுவது கண்டு.

ஊடல் கொள்ளத்தான் சென்றேன்;

கூடியது நெஞ்சம்; கூடினேன்.

 

  1. நிணம்தீயில் இட்(டு)அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ,

      புணர்ந்(து)ஊடி நிற்பேம் எனல்?

தீயில் கொழுப்பாய் உருகுவார்க்கு,

கூடிப்,பின் ஊடத்தான் முடியுமா?

 பேரா.வெ.அரங்கராசன்